"தமிழ் மொழியின் சிறப்பு"

தமிழ் மொழியின் சிறப்பு...

தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழியாகிவிட்டது. இதில் நாம் குறைக் கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகளும் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு.


முத்தி தருபவன் அவனே ; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்"


எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.


"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்.


வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும் அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங் கருணையைப் பாடி பரவுகிறார்.


:"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."


இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள் கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்.


" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "
ஞானவெட்டியான்


"பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "


" சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்
காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்

-அகஸ்தியர் ஞானம் 100


பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போத இத்தமிழ் வாக்கியம் - ஞான வெட்டியான் 1500


கருத்து விளக்கத்திற்காகப் பயன் படுத்தப்படும் உவமை இலக்கிய சுவைக்கு மெருகூட்டுவது கும். சித்தர் பாடல்களில் கணக்கற்ற உவமைகள் காணப்படுகின்றன.


வள்ளலார் தமிழை பித்ரு மொழியாக கருதுகிறார். இறைவன் தன்னை தமிழால் வளர்க்கின்றார் என்பதை “மெய்யடியார் சபை நடுவே எந்தை உனைப்பாடி மகிழ்ந்தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய் ( 4802)

மேலும்,



வடிக்குறும் தமிழ்க்கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே- 875 என இறைவனை ப்போற்றி துதிக்கின்றார்.



சாகாகலை தந்தது- தமிழ் மொழி

ஆரவாரமில்லா மொழி- தமிழ் மொழி



தமிழ் உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வள்ளலார் கூறுகின்றார்.



வள்ளல் பெருமானை ப்பற்றி ராமலிங்கரும் தமிழும் – என திரு ஊரன் அடிகள் தனி புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். எனவே வள்ளலார் தமிழ் மொழிமேல் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதை யூகித்துக்கொள்ளவும்.



அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.



வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.



வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.



அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.



வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.



அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர். வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே 'வில்லி பாரதம்' என்று வழங்குகிறது.



பாடலைப் பார்ப்போம்:

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.



திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,

திதி - திருநடனத்தால் காக்கின்ற

தாதை - பரமசிவனும்

தாத - பிரமனும்

துத்தி - படப்பொறியினையுடைய

தத்தி - பாம்பினுடைய

தா - இடத்தையும்

தித - நிலைபெற்று

தத்து - ததும்புகின்ற

அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி - தயிரானது

தித்தித்ததே - தித்திக்கின்றதென்று

து - உண்ட கண்ணனும்

துதித்து - துதி செய்து வணங்குகின்ற

இதத்து - பேரின்ப சொரூபியான

ஆதி - முதல்வனே!

தத்தத்து - தந்தத்தையுடைய

அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத - தொண்டனே!

தீதே - தீமையே

துதை - நெருங்கிய

தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து - மரணத்தோடும்

உதி - ஜனனத்தோடும்

தத்தும் - பல தத்துக்களோடும்

அத்து - இசைவுற்றதுமான

அத்தி - எலும்புகளை மூடிய

தித்தி - பையாகிய இவ்வுடல்

தீ - அக்கினியினால்

தீ - தகிக்கப்படுகின்ற

திதி - அந்நாளிலே

துதி - உன்னைத் துதிக்கும்

தீ - புத்தி

தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்



இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.




சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : சத்யாசெந்தில், முதுகலை தம (21-Aug-12, 10:07 am)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 77233

மேலே