நிற்கட்டுமா OOO போகட்டுமா

#நிற்கட்டுமா.. போகட்டுமா..?

தேனளித்தப் பூவிடத்தில்
தேனிசையைப் பரிசளித்து - வண்டு
ராகம்பாடிக் கேட்கிறதே
நிற்கட்டுமா… ? போகட்டுமா….?

வாய்ப் பேசா வண்ண மலர்
தலையசைத்துக் கூறிடுதே
"இன்னுந்தேன் நானளிப்பேன்
வண்டேநீ நாளை வா. !"

நாடிவந்தக் காதலனும்
நாணங் கொண்டப் பேதையினை
வதனந் தொட்டுக் கேட்கின்றான்
நிற்கட்டுமா… போகட்டுமா..?

மெய்சிலிர்க்க முகஞ்சிவக்க
மேனியது நெளிந்திடவே
நில்லாது போவென்றாள்
நீண்டகரம் சிறைப்பிடிக்க..!

நான்குசாலை சந்திப்பில்
நரிக்கூட்டம் வளைத்தப்பின்
சிக்கியவன் கேட்கின்றான்
நிற்கட்டுமா… போகட்டுமா..?

அதிகாரப் பிச்சைகள்
அதிமானம் விற்றவர்கள்
சில்லறைகள் கொள்ளையிட்டு
சிரித்தபடி போவென்றார்..!

வாசல் தோறும் உலவிடுதே
வற்றாமல் தொற்றுநோய்
வக்கணையாய்க் கேட்கிறதே
நிற்கட்டுமா போகட்டு மா..?

கவசங்கள் அணிந்தவரும்
கசாயம் குடித்தவரும்
கழுவிய கரங்களினால்
விரட்டுகிறார் போவென்றே..!

கண்கலங்கி கைப்பிசைந்து
கடனளிக்கக் வேண்டிடுவார்
கால் கடுக்கக் கேட்டிடுவார்
"நிற்கட்டுமா போகட்டுமா..?"

சென்றகடன் வரவில்லை
சிந்துங் கண்ணீர் மெய்யில்லை.
இன்னுங் கடன் அளிப்பாரோ - இதயம்
இரும்பாக்கிப் போவென்பார். .!

கத்துங்கடல் அலைவாயில்
களிப்புடனே விளையாட
கேட்டிடுவார் மழலையரும்
நிற்கட்டுமா.. போகட்டுமா..?

விளையாட வயதுண்டோ
வளர்ந்தவரும் மழலையாகி
நிற்பாரே மக்களுடன்
அலைக்கரங்கள் முத்தமிட..!

வான் மழைக்கு அளவேது
வாய்ப் பேசத் தெரியாது - மழை
வாய்த் திறந்து கேட்க வேண்டும்
"நிற்கட்டுமா… போகட்டுமா..?'

மழைபேசும் அதிசயங்கள்
மாபுவியில் நிகழுமெனில்
நன்றியுடன் கூறிடலாம்
நில்லென்றும் போவென்றும்..!

#சொ .சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (27-Dec-25, 12:44 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 22

மேலே