பொற்காலத்திற்குள் நுழைந்து காதல் செய்வோம் வா-வித்யா
பொற் காலத்திற்குள் நுழைந்து காதல் செய்வோம் வா.......-வித்யா
செப்புக் குடத்தில்
இடதுகை சேர்த்து
அப்படி இப்படி
இடையசைத்து
குளக்கரை நோக்கி
கொஞ்சிப்பேசியே நான் போக
எதிரிலுன் தரிசனம் கண்டு
வெட்கம் என்னுள் பிரவேசிக்க
நீலப்பூவிழியால்
நிலம் நோக்க
என் மனமெல்லாம்
மணம் வீசுகிறதென்று
நீ பாட்டிசைக்க மாட்டாயோ......
குளியலறைச் சுவர்களோடு
வெறுப்புற்று குளக்கரை நான் தேட
வானமே எல்லையாய் நீரை அணிந்து
நான் நீந்திட.........
ஈர உடையோடு உனைக்கடக்கும்
நொடிதனில் நீ உலர்ந்திட மாட்டாயோ.......
பிரியப் பெருவெளிகளிலே
காதல் சொல்லாமல்
கோடை வாசம் நாம் செய்ய........
விழியாலே கடிதம் போட்டு
வன்முறைக்கு அழைப்பாயோ........
காதலின் நிமித்தத்தில்
உனைக்கானக் காரணம் தேடி
கருவேலங்காட்டிற்கு
விறகுவெட்ட நான் போக.......
விறகோடு சேர்த்து
நம் காதல்சேகரிக்கும்
விரசத்தில் நம்உடலிரண்டின்
அணுவணைத்தும்
ஏக்கத்தின் பெரும்பதத்தில்
கடையுகத்தில் வாழ்வதாய்
சிலிர்த்த போது மாலைவந்து
நமைப்பிரித்திடாதோ........................
அன்றைய இரவெல்லாம்
உன் பார்வைகளின் நீளம்
அளந்தே விடியாதோ.......
தேன்மழையை உன்குரல்
வானுக்குத் தர
மென் மயக்கத்தில்
என் சலங்கை ஒலிக்க
வஞ்சி இடை ஏறெடுத்து
சட்டென தூறல் நிற்காதோ........
குறத்தியிவள்குறிசொல்லி
குறிஞ்சிநிலம்தான் பூக்காதோ......
அவசர உலகின்
காதல் வெறுத்து
மகர வீதியில்
வருகிறேன்.......
கவனோடு வந்திடு
எனக்கு திருட்டு
மாங்காய் வேண்டும்......!!
-வித்யா

