சாதிஒழி மதம்அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி 2015

சாத்தியப்படும் சாதனைகளையும் சாத்திவைக்கும் கதவுகளாய் -சாதி-
பாத்தியப்பட்ட மனவீட்டில் சறுக்கி இறுகி மூலையில்கிடக்கும் மனிதா நீ
உயிர்தெளிந்து உயர்ந்தெழுந்து உடைத்தெறிந்திடு கதவுகளை
சாதிக்குத் தீ வைத்து சாம்பலாக்கி, சாதிக்கப் பிறந்தவன் நீ
சேற்றைவாரி இறைத்துவிடு சாதியதன் முகத்தினிலே
மாற்றியமைக்க எழுந்துவா வரலாற்றின் ஏடுகளில் - மனிதா நீ
சற்றும் கூட தயங்காதே ஒழித்துவிடு சாதிதனை- ஒழித்துவிடு சாதிதனை!

இன்னும் ஓர் காரியம் இதுவும் கூட முக்கியம்!!!

இமயத்தின் முன்னின்று கண்ணளவு கல்கொண்டு
கண்ணருகில் வைத்துக்கொண்டால் இமயம்கூட காணாமல் போய்விடுமே மனிதா -
கல்லைப்போன்று மதத்தினை நீ கண்ணோடு ஒட்டிக்கொண்டால்
இமயம்போன்ற இன்பமது வாழ்வில் காணாமல் பரிதவிப்பாய் உணர்த்திடுவாய் நீயே-

"மனிதம்" விட்டு "நீ" நீங்கினால் "மதம்" பிடித்த மிருகமாவாய்
"மதம்" விட்டு நீ நீங்கினால் மனிதரினும் மேலாவாய்
அட்டைபோல் ஒட்டியிருக்கும் மதப்பேயை ஓட்டிவிட
சாட்டையென நீ சுழல்வாய் மொத்தமாக அழித்துவிட
அழிந்திடுமே அழிந்திடுமே மதமிருகம் - மனிதா நீ
சற்றும் கூட தயங்காதே அழித்துவிடு மதத்தினை -அழித்துவிடு மதத்தினை!

இவ்விரண்டை செய்தபின்னே கண்கூடாய் நீ காண்பாய்
சாத்தியப்படா சாதனைகளும் முத்தமிடும் உன் காலடியை!

மட்டற்ற மகிழ்ச்சி மானுடத்தில் மங்காமல்
பொங்கலைப்போல் பொங்கி வழிந்திட -மனிதா நீ
சாதிதனை ஒழித்திடு! மதத்தினை அழித்திடு!! சாதனைகள் புரிந்திடு!!!

எழுதியவர் : உமர் ஷெரிப் (4-Jan-15, 5:34 pm)
பார்வை : 83

மேலே