கனவே கலைந்து போ பாகம்- 8 துப்பறியும் திகில் தொடர்பலவீன மனதுள்ளோர் படிக்க வேண்டாம்

முன் கதைச் சுருக்கம்

பிரசாத் நந்தினியின் ஆலோசனைப்படி செலிப்ரெடி கிளப்பின் பிரதிநிதியாகிறான்.

................................................................................................................................................................................................

அன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூறல்.. அப்போதுதான் ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போய் தாயத்து போட்டுக் கொண்டு ஜெபமணி இல்லம் பக்கமாக உலவிக் கொண்டிருந்தான் பிரசாத். சப்-வே பக்கமாக வந்தபோது....

“அண்ணா” என்றது தீனமான ஒரு குரல்.

திரும்பினான்.

சின்னஞ்சிறுமி... அட, ரோஸ்மேரி.. இவள் இங்கேயா?

“ என்னம்மா?” பதறிப் போய் பக்கத்தில் வந்தான். அவள் நேராக நிற்கக் கூட முடியாமல் வயிற்றை ஒரு கையால் பிடித்தபடி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். குழந்தைக்கு அனலாய்க் கொதித்தது உடம்பு!

“ அண்ணா, அண்ணா!!! நாளைக்கு என்னை தத்து கொடுக்கப் போறாங்க. அப்படியே கொன்னுடுவாங்கண்ணா!! ” ஒரு முனகலோடு பேசினாள்.

பிரசாத் குழந்தை ஜூர வேகத்தில் உளறுகிறாள் என்றே நினைத்தான்.

“ திரும்பவும் என்னை ஹோம்ல விட்டுடாதே அண்ணா! அங்கிருந்து கஷ்டப்பட்டு தப்பிச்சு வந்தேன்...”

குழந்தையை உடனே டாக்டர் மேகலா கிளினிக்குக்கு கூட்டிப் போனான்.

“ ஏம்மா, இப்படியெல்லாம் பேசறே?” என்றான் ஸ்கேனுக்காக காத்திருந்த வேளையில்.

“ ஆமாண்ணா, ஜாஸ்மினுக்கு வயித்து வலி வந்தது. அப்பெண்டிஸ் ஆபரேசன் பண்ணாங்க. ரெண்டாம் நாள் தத்துக் கொடுத்தாங்க; மும்பைல வச்சி கொன்னுட்டாங்க! அதே போல் எனக்கும் வயித்து வலி வந்துச்சு. அப்பெண்டிஸ் ஆபரேசன் பண்ணிட்டாங்க. நாளைக்கு தத்துக் கொடுக்கப் போறாங்க. அவ்வளவுதான். என்னையும் கொன்னுடுவாங்க!”

குழந்தையின் வயிற்றில் ஆபரேசன் செய்த தழும்பு இருந்தது!

“ ஜாஸ்மின் செத்துப் போயிட்டாள்னு எப்படி சொல்ற?”

“ போன் பண்ணாள்ண்ணா...ஹோமுக்கு போன் பண்ணாள். ரொம்ப நேரம் அடிச்சிட்டிருந்தது. நான்தான் எடுத்தேன். இந்த அங்கிளுங்க கெட்டவங்கடின்னா.. என்னை கொல்லப் போறாங்கன்னா.... பாதியிலேயே போனை பிடுங்கின மாதிரி இருந்தது! அப்புறம் அவ கிட்டயிருந்து ஒரு நியூசும் இல்ல!! ”

குழந்தை சொல்வதை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் விடவும் முடியவில்லை !! !!

ஸ்கேன் எடுத்து முடித்ததும் டாக்டர் மேகலா ஓடி வந்தார், ஏதோ பேயைப் பார்த்து பயந்த மாதிரி!

“பிரசாத்.... ! பிரசாத்.... ! குழந்தை நிலைமை ரொம்ப சீரியஸா இருக்கு; ஆபரேஷன் பண்ணணும்! குழந்தையோட பேரன்ஸ் எங்கே? இது போலிஸ் கேஸ்... நிறைய கையெழுத்து வாங்கணும்!”

குழந்தையைப் பற்றி தெரிவித்த பிரசாத் எல்லா பேப்பர்களிலும் கையெழுத்துப்
போட்டான். “என்ன டாக்டர்? ”

“வெரிஃபை பண்ணிட்டு காட்டறேன். ”

அதற்குள் போலிஸ் வந்தது. நார்கோடிக் டிவிஷன் டெபுடி கண்காணிப்பாளர் முரளியா?

பிரசாத்தை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்தார்கள். பிரத்யேக உடுப்பணிந்து முரளியுடன் உள் சென்றான்.

அவன் பார்த்தது....கடவுளே!

சின்னக் குழந்தையின் சின்ன வயிற்றிலிருந்து பாக்கெட் பாக்கெட்டாக போதைப் பொருள்! ! –பிரௌன் சுகர் !

“பிரசாத்.... ! பாக்கெட்டால குழந்தையோட வயிறு அழுந்தி குடல்ல ரத்த ஓட்டம் தடைபட்டு, இதோ இந்தப் பகுதி அழுகிடுச்சு. இத சர்ஜரி பண்ணி எடுத்தா குழந்தை பிழைக்க பத்து சதவீத வாய்ப்பிருக்கு..நாங்க சொல்றது பத்து சதவீதம்தான்;
புரியுதுல்ல? ”

பிரசாத் கண்களை மூடி தலையை முன்னும் பின்னும் அசைத்தான்.

“ குழந்தையை எப்படியாவது காப்பாத்துங்க. ”

ஆபரேசன் முடிந்து குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாள்.

டாக்டர் மேகலா முரளியுடன் தனியே சென்று ஏதோ பேசினார்.

பிரசாத் ஆர்வக் கோளாறில் மேலே இருந்த பாக்கெட்டை எடுத்தான்; அடியில் இது என்ன? ஆச்சர்யம், திகில், அருவருப்பு என அத்தனை உணர்ச்சிகளும் அவனை ஆக்கிரமித்தன!

அதே சமயம்......... அழுகிய வெங்காய வாடை ! ! ! ! ! !

பிரசாத் மயக்கம் போட்டு விழுந்தான்.

முரளிதான் தட்டித் திருப்பினார்; பிரசாத்தை புரியாத குழப்பத்துடன் ஆச்சரியமாகப் பார்த்தார் ; முகம் இறுகிக் கிடந்தார்.

“ என்ன சார்? குழந்தை பிழைச்சுக்குவா தானே? ”

முரளி பிரசாத்தின் தோளை அழுத்தினார்.

“ செயற்கை சுவாசம் போற வரைக்கும்தான் மூச்சிருக்குமாம். ஏதாவது ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கிறதானா இன்னைக்கே வாங்கிடச் சொல்றாங்க... “

டாக்டர் மேகலா பிரசாத்தை அழைத்தார்.

“ பிரசாத், குழந்தைக்கு உணர்வுகள் தெளிவா இருந்தாலும் அவ சாகறது உறுதி ! எதையும் காட்டிக்காம அவ கிட்ட சிரிச்சு பேசி சந்தோஷமா அவளை இருத்துங்க! தூக்கம் வருதும்பா... தூக்கத்துலேயே.......................... சரி, இப்ப வார்டுக்குப் போங்க ”

கனத்த இதயத்துடன் கிளம்பினான்.


தொடரும்....

எழுதியவர் : அருணை ஜெயசீலி (25-Mar-15, 4:05 pm)
பார்வை : 327

மேலே