க வி தை

கவி தைக்கிறான்
கவிதை
குரங்கு தைக்கும் உடை
எனக்கெதற்கென்று
எவரும் உடுத்தாமல்
கிடக்கிறது கவிதை
கவி விதைக்கிறான்
கவிதை
வினை விதைத்தவனே
அதை அறுக்கட்டுமென்று
அறுவடை ஆகாமல்
கிடக்கிறது கவிதை
கவி கதைக்கிறான்
கவிதை
அவன் சொந்தக் கதை
சோகக்கதை
எனக்கெதற்கு என்று
கேட்காமல்
கிடக்கிறது கவிதை
எல்லோரிடமும் இருக்கிறது
கவிதை
என்ன கழுதை
எழுதாமல் கிடக்கிறது
அவ்வளவுதான்

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (28-Apr-15, 2:25 pm)
பார்வை : 129

மேலே