பிரியங்கள் தொடர்கதை
கொஞ்சிடும் கனவுகள் குறுக்கிடும் பொழுதும்
கோபத்தில் மௌனங்கள் இறுக்கிடும் பொழுதும்
நெஞ்சினை ஏக்கங்கள் நெருக்கிடும் பொழுதும்
நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !
ஒவ்வொரு இறப்பிலும் உன்னதம் படரும்
ஒவ்வொரு பிறப்பிலும் உயிரினில் தொடரும்
ஒவ்வொரு நினைப்பிலும் உயிரணு சுடரும்
அவ்வொரு பொழுதிலும் அகவிழி அதிரும் !
அன்னையும் ஊட்டிய அமுதத்தில் காதல்
அருங்கவி ஊட்டிய தமிழிலும் காதல்
இன்னுயிர் எரித்திடும் ஏ..காந்தமும் காதல்
என்னவள் என்பதால் இறு,,மாப்பிலும் காதல் !
சிந்தை நிறைந்துயிர் செழித்திடும் காதல்
முந்தை வினைகளும் அறுத்திடும் காதல்
எந்தையின் தோழிலும் இருந்திடும் காதல்
எத்தாய் மடியிலும் இனித்திடும் காதல்
சேடல் பூத்தமண் சுடுவதைப் போலவும்
செந்நெறி காத்தமண் சிதைவதைப் போலவும்
ஊடல் பூத்தவுன் உயிரணு எங்கிலும்
உறைந்திடும் என்னுயிர் ஓலத்தின் எச்சம் !
பூவகம் கொண்டவள் பொன்னெழில் நினைவும்
புன்னகை உண்டவள் புரிதலின் நினைவும்
சேவகம் செய்திடும் சிந்தையை வளர்க்கும்
சேரா நிலைவரின் செந்தணல் வளர்க்கும் !
செல்லிடப் பேசியில் சிணுங்கிய வார்த்தையும்
செம்மொழி போலிதழ் சிந்திய வார்த்தையும்
பிள்ளை மொழியினில் பேசிய வார்த்தையும்
பிறப்புக்கள் தொடர்கையில் பிரியங்கள் கூறும் !

