ரகசிய ரசாயனா-ரகு
இன்றைய தேதியில்
"ரகசிய ரசாயனா"
அவளுடைய பெயர்
அழகு தன் கூற்று
எனும் வாய்ச்சவடால்
இனியில்லை அவளிடம்
நேற்றுகூட
சிறு தூரலுக்குப் பின்னதான
காற்றை
தென்றலெனப் பிதற்றலானாள்
வெப்பசலனக் கைகள்
மேனிபடர
அருவருத்தும்
சகிக்கவே செய்தாள்
குளிர்மொழி மறந்த
அவளின் புரியா
சம்பாசனையில்
இரவு
நட்சத்திரமொன்று
விழுந்து கரைகிறது
தினமும்
அட்சயதிருதியாகி
மலிவுவிலையில் தொலைந்தன
மரங்களெனும்
அணிகலன்கள்
எவ்வாறும்
உதிர்ந்து போகும்
தன் கூந்தலுக்கு
எதைச் சூடுவாள் நாளை
பூக்களென
எல்லாமிழந்துவிட்டு
யாசகம் புரியும்
இயற்கையவளைப் பார்த்து
உச்சுகொட்டவே முடிகிறது
சூரிய சந்திரர்களால்.......!!

