முன்னூறு மடங்கு சம்பளம்

அமெரிக்க நிறுவனங்கள் பற்றி ஒரு பார்வை கீழே உள்ள சுட்டியில் கிட்டும். இதயமில்லாத அமைப்பு என்று முதலியத்தைச் சொல்வார்கள். இந்தக் கட்டுரை அமெரிக்க முதலியத்தின் ஒரு கோரப் பல்லைக் காட்டச் செய்கிறது. கட்டுரையை எழுதியவர்கள் அப்படி ஒன்றும் மார்க்சிய மந்திர உச்சாடனங்களைச் செய்யவில்லை என்பதாலும், முதலியத்தை அழிப்போம் என்று சூளுரைக்காததாலும், நிறைய புள்ளி விவரங்கள் கொடுப்பதாலும் இந்தக் கட்டுரையை ஓரளவு நம்பலாம் என்று தோன்றுகிறது.

இதன் சாரம்-

அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் மேல் நிலை ஆளுநர்கள், அதுதான் சி. இ. ஓ (CEO) என்று சொல்கிறார்களே அந்தப் பதவிகளில் உள்ளவர்கள்- அவர்களின் ஊதியம் கடந்த 40 ஆண்டுகளில் எப்படி மாறி இருக்கிறது என்று கவனித்தால் நம் எல்லாருக்கும் மாரடைப்பு வரும் என்கிறது அறிக்கை.

1978 இலிருந்து 2014 ஆம் வருடம் வரை இந்த ஊதிய வளர்ச்சியை நோக்கினால், அதை பண மதிப்பில் ஏற்பட்ட மாறுதல்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப சரி செய்து நோக்கினாலுமே கூட, அந்த ஊதிய வளர்ச்சி 997 சதவீதம். அதாவது கிட்டத்தட்ட ஆயிரம் சதவீதம் கூடுதலாக ஊதியம் எகிறி இருக்கிறதாம். அதே காலகட்டத்தில் அடிமட்டத் தொழிலாளர்களின் ஊதிய வளர்ச்சி எத்தனை? 10.9 சதவீதம். 11 சதவீதம் என்றே வைத்துக் கொள்வோம். இதுவுமே இடையில் நேர்ந்த கடும் வீழ்ச்சியிலிருந்து ஓரளவு தேறி இன்று இருக்கிற நிலையை வைத்து நோக்கினால்தான் கிட்டும் தொகை. இடையில் எத்தனை மிலியன் தொழிலாளர்கள் ஓட்டாண்டிகளாக ஆனார்களோ யார் கண்டது?

இது மனிதம் உள்ள எந்த அமைப்பாவது செய்யக் கூடிய ஒன்றா? அப்படி ஒரு கேவலத்தைச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க முதலியத்தை உலகுக்குப் பரிந்துரைத்து தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பல ‘அறிவு ஜீவிகள்’ கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கருணை மார்க்கத்து நம்பிக்கையாளர்கள் வேறு. சிலர் ஐன் ராண்ட் என்ற ஒரு படு குப்பையான ‘சிந்தனையாளரின்’ பக்தர்கள் வேறு.

அதாவது எதெல்லாம் மக்களுக்குப் பரிந்துரைக்கிறோமோ, அதெல்லாம் மக்களை ஒழித்து ஓட்டாண்டிகளாக ஆக்க வேண்டும், அப்போதுதான் அவை உடனே பரவும். இந்த அடிப்படைக் கோட்பாடுதான் இன்று உலகில் பெரும் ஆகிருதியுடன் உலவுகிற பற்பல கருத்தியல்களுக்கும் ஆதார நம்பிக்கை. இவற்றில் எல்லாமே அனேகமாக மேற்காசிய மதங்களின் விளைவுகள் என்பதை மட்டும் நாம் கவனித்தால் நமக்கு ஏதோ விடிவு காலம் பிறக்க வாய்ப்புண்டு.

இந்த அறிக்கை சொல்வதை இன்னும் சற்றுக் கவனிப்போம்.

1965 இல் அடிநிலை ஊழியரை விட இந்த தலைமை செயல்திட்ட மேலாளர்களின் ஊதியம் 20 மடங்குதான் உயர்வாக இருந்திருக்கிறது. மெல்ல மெல்ல உயர்ந்து 1989 வரை கூட 58.7 மடங்குதான் உயர்ந்திருந்தது. 1990 இலிருந்து 2000 வருவதற்குள் அது 376 மடங்குக்கு எகிறியது. பின் சரிவு, எழுச்சி என்று ஊசலாடி விட்டு 2014 இல் 303.4 மடங்குக்கு உயர்ந்திருக்கிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் நூற்றுக்கு 99.9 சதவீதம் ஊழியர்களை விட அதிகம் ஊதியம் பெறும் 0.1 சதவீத ஊழியர்கள் சிலர் உண்டு. இவர்களே பெரும் பணக்காரர்கள். இவர்களின் ஊதியத்தை விடப் பன்மடங்கு அதிகம் ஊதியம் பெறுபவர்கள் இந்த தலைமை செயல்திட்ட மேலாளர்கள். (சுமார் 6 மடங்கு கூடுதல் ஊதியம்.)

18220 நிறுவனங்களின் மேலாளர்களை இந்த அறிக்கை கவனித்திருக்கிறது. இவர்கள் 500 க்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களின் மேலாளர்கள். இந்த நிறுவனங்கள் அமெரிக்க ஊழியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கின்றன. எனவே இந்த அறிக்கை ஏதோ இடது சாரிச் சதியால் திரித்து உருவாக்கப்பட்டதல்ல.

அமெரிக்க முதலியம் என்ற அவலக்கதையைப் பற்றிச் சிறிதும் சோகச் சுவையோ, பரிதவிப்போ இல்லாது கருக்காக எழுதப்பட்ட இந்த அறிக்கையைப் படிக்குமாறு முதலியத்தின் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது சொல்வனம்.

பிறகு சொல்லுங்கள் இந்த அவலம் இந்தியத் தொழிலாளிகளுக்கும் நேர வேண்டுமா என்ன?

(ஏற்கனவே அப்படி ஒரு அவல நிலையில்தானே இருக்கிறார்கள் என்ற எள்ளல் பதிலாகக் கிட்டாது என்று நம்புகிறோம்.)

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொல்வனம (4-Oct-15, 11:32 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 168

மேலே