பிரான்சு நிஜமும் நிழலும் -6 பிரெஞ்சு மக்கள்

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ கூற்றை ஒரு மெய்மைக் கருத்தாக தருக்க நியாயத்தின் முடிவாக ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். உலகம் தோன்றிய நாள்தொட்டு புலப்பெயர்வுகள் இருக்கின்றன. பழங்காலத்தில் அடிப்படை தேவைகளின்பொருட்டோ, இயற்கை காரணங்களுக்காகவோ புலம்பெயர்ந்தார்கள்.

பின்னர் உபரித்தேவைகளை முன்னிட்டு பொருளாதாரத்தில் மேம்பட்ட அல்லது சுபிட்சமான நாடுகளைத் தேடி மக்கள் இடம் பெயர்ந்தார்கள். பழங்காலந்தொட்டே இனம், மதம் அடிப்படையிலான உள்நாட்டுப்போர்கள் புலப்பெயரலுக்குக் காரணமாக இருந்து வந்திருக்கின்றன.

எனினும் இதுநாள்வரை காணாத அளவில் அண்மைக் காலமாக புலப்பெயர்வு உலகெங்கும் அதிகரித்துவருகின்றன. அறிவுசார் புலப்பெயர்தலை பெரிதும் வரவேற்ற ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இடம்பெயரும் சராசரி மக்களின் புலப்பெயர்வை ஓர் அபாயமாகப் பார்க்கின்றன. காலம்காலமாக நிகழ்ந்துவரும் இப்புலபெயர்வுதான் மனிதனோடு ஒட்டிப்பிறந்த மண் அடையாடளத்தை உதறக் காரணமாக இருந்துவருகிறது.

எனவேதான் பிரெஞ்சு மக்களைக்குறித்து எழுத நினைத்தபோது, புலப்பெயர்வும் சொல்லப்படவேண்டியதாக உள்ளது. இன்றைய இந்தியனோ, இலங்கையனோ, அமெரிக்கனோ அல்லது மேற்கு நாடுகளைச்சேர்ந்தவனோ “தனிஒருவன்” அல்ல; அவன் பலப் பண்புகளின் சங்கமம், பத்துத் தலையும் இருபது கைகளுங்கொண்ட இராவணன்.

அது போலவே, ஒரு பிரெஞ்சுக்காரன் என்பவன் எந்த நிறமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், எந்த இனமாகவும் இருக்கலாம், தாய்மொழியாக எதுவும் இருக்கலாம், வடக்குத் தெற்கு, கிழக்கு மேற்கென்று வந்த திசை எதுவென்றாலும், தன் வாழ்நாளின் கணிசமான காலத்தைப் பிரான்சு நாட்டில் அல்லது அதன் தொலைதூர பிரதேசங்களில் (மர்த்தினிக், பிரெஞ்சு கயானா, குவாதுமுப் ரெயூனியன்) கழிக்க நேர்ந்த, பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அனைவருமே ஒருவகையிற் பிரெஞ்சு மக்கள்தான். அப்படித்தான் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சொல்கிறது. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன.

இந்த நாட்டிற்கு ஏதேதோ காரனங்களால் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அனைவரும் பிரெஞ்சுக்காரர்கள் ஆகிவிடமுடியுமா? என்னிடம்கூட பிரெஞ்சுப் பாஸ்போர்ட் இருக்கிறது. சட்டம் அதன் பெயரால் உரிமைகளையும், வழங்கியுள்ளது. ஆனால் ஒரு ஐரோப்பிய நாடொன்றைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு பிரெஞ்சுக் குடிமகனுக்கு நான் சமமா என்றால் இல்லை. எனக்கே என்னை பிரெஞ்சுக்காரனாக ஏற்பதில் குழப்பங்கள் இருக்கிறபோது அவர்களைக் குறை சொல்ல முடியாது.

பூர்வீகப் பிரெஞ்சு மக்கள்?

இன்றைய பிரெஞ்சுமக்களைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட இம்மக்களின் சமூககம் வேர்பிடித்த காலம் அண்மைக்காலத்தில்தான் நிகழ்ந்தது, ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட வரலாறுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. பிரெஞ்சுக் காரர்களின் பூர்வீக மக்கள் என்று பலரை வரலாற்றாசிரியர்கள் குறிப்ப்பிடுகிறார்கள்.

13ம் நூற்றாண்டில் இந்திய ஐரோப்பிய வழியில்வந்த கெல்ட்டியர்கள் ஆயிரக்கணக்கில் இன்றைய பிரான்சுநாட்டில் குடியேறியதாகவும் அவர்களை ரொமானியர்கள் கொலுவா என அழைத்ததாகவும், அம்மக்களே பிரெஞ்சுக்காரர்கள் எனகூறுகிறவர்கள் இருக்கின்றனர் வேறு சில வரலாற்றாசிரியர்கள் பிரெஞ்சு மக்களின் முன்னோர்களென்று ரொமானியர்களைச் சொல்கிறார்கள்.

பிறகு பன்னிரண்டாம் நூற்றாடில் அரசாண்ட கப்பேசியன் முடியாட்சி, தம்மை ·பிரான்க் முடியாட்சி என அறிவித்துக்கொண்டததென்றும் அவர்கள் அரசாங்கம் பிரான்சியா என்றும், மக்கள் பிரான்சியர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இது தவிர பிரெத்தோன், பாஸ்க்,நொர்மான் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் பிரெஞ்சுக்காரர்களின் முன்னோர்கள் என்று வரலாறு சொல்கிறது.

புலம்பெயரும் மக்களும் பிரான்சும்

இன்றைக்கு பிரான்சு நாட்டின் குடிவரவு சட்டம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. பிரெஞ்சு மக்கள் இரண்டு பிரிவாக நின்று யுத்தம் செய்கிறார்கள். ஒரு பிரிவினர் தீவிர வலதுசாரிகள். இவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த செக், ஸ்லோவாக்கியா, போலந்து, அங்கேரி முதலான நாடுகளின் அகதிகள் எதிர்ப்பு நிலையை வரவேற்கிறவர்கள். குறிப்பாக செக், அங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் கிருஸ்துவர்களை மட்டுமே அகதிகளாக ஏற்போம் என்கின்றன.

டென்மார்க் நாடு அகதிகளுக்கான சலுகைகளைக் குறைத்துக்கொண்டதன் மூலம் அகதிகள் தங்கள் நாட்டிற்கு வரும் ஆர்வத்தை மட்டுபடுத்தியிருக்கிறது. பிரான்சு நாட்டிலும் சில வலதுசாரிகள் தங்கள் நகரசபைகளில் கிருஸ்துவர்களுக்கு மட்டுமே இடமளிப்பதென தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த வலதுசாரிகள் சொல்லும் காரணம் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் இருக்கும் செழுமையான வளைகுடா நாடுகள் அகதிகளை ஏற்க முன்வராதபோது நாம் ஏன் உதவேண்டும் என்பதாகும். இந்த வாதம் பிரெஞ்சு மக்களில் ஒரு சிலருக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

இந்நிலையில் பிரான்சு நாட்டு இடதுசாரிகளும் எதிர் வரும் தேர்தலைக் கணக்கிற்கொண்டு தங்கள் அகதிகள் ஆதரவு நிலையை சிறிது அடக்கி வெளிப்படுத்தபடவேண்டிய நிர்ப்பந்தம். ஈராக், சிரியா நாடுகளிலிருந்து வரும் அகதிகளை மட்டுமே ஏற்பது, பொருளாதார காரணங்களை முன்னிட்டு அகதித் தகுதிக்கு விண்ணப்பிக்கும் அந்நியர்களை நிராகரிப்பது, இனி வருங்காலத்தில் படிப்படியாக அகதிவிண்ணபங்களைக் குறைப்பது எனப் பேசிவருகிறார்கள்.

1793ம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் தங்கள் அரசியல் சட்டத்தில், சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களுக்கு புகலிட அனுமதி வழங்குவதென” தீர்மானித்தார்கள். இதன்படி நல்ல பொருளாதார வாழ்க்கைக்காக பிரான்சு நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்க்கு எல்லைக்கதவுகள் திறந்தன. புகலிடம் தேடிவருபவர்களும் தங்கள் உழைப்பு, ஆற்றல், இரண்டையும் முழுமையாக அளித்து நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம், பண்பாடு ஆகியவற்றிர்க்கு உதவுவார்கள் என பிரான்சு எதிர்பார்த்தது. இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜிய மக்களின் வருகை பிரான்சு நாட்டின் தொழிற்துறை வளரக் காரணமாயிற்று.

அவ்வாறே முதல் உலகப்போருக்குப்பின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக போலந்து அர்மீனியா, ரஷ்யா மக்களால் பிரான்சு வளம்பெற்றது. அறுபதுகளில் வட ஆப்ரிக்க நாடுகள், ஆசிய பிரெஞ்சுக் காலனி மக்கள் பிரான்சு நாட்டின் ராணுவம் பொருளாதாரம் ஆகியவற்றிர்க்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். கலை இலக்கியமுங்கூட அதிக இலாபத்தை அடைந்திருக்கிறது வெளிநாட்டிலிருந்து பிரெஞ்சில் எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள், பாடகர்கள் பட்டியல் நீளமானது: குந்தெரா, யூர்செனார், ஸொல்ல, மாலூ·ப் என நிறையக் கூறலாம்.
பிரான்சும் தமிழர்களும்:

பிரெஞ்சு தமிழர்கள் என்கிறபோது அவர்கள் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல. பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொருவகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ்சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களாகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்களெனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறிவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.

காலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச்சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரி தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள்.

நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்கு குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸ¤க்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகபோரின் போது பிரான்சு பிறகாலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமதுவசமிருந்த இந்திய காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தனர்.

பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்'(De-facto settlement’) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure Transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டு குடியுரிமைகளூள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறுமாதகாலம் நீட்டிக்கவும் செய்தார்கள்.

அதன் பலனாக கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால் வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரி தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.

பிரான்சு நாட்டில் குடியேறிய வெளிநாட்டினர் பொருளாதார அடிப்படையில் நன்றாகவே வாழ்கின்றனர். எக்காரணத்தை முன்னிட்டு புலப்பெயர்வு இருந்தாலும் நாட்டில் பிரச்சினை தீர்ந்தவுடன் அல்லது பொருளாதார காரணங்களால் இங்கு வந்தவர்கள் ஓரளவு பொருள் சேர்த்தவுடன் சொந்த நாட்டிற்குத் திரும்புவது வழக்கமில்லை. இன்று நேற்றல்ல புலம் பெயருதல் என்றைக்குத் தொடங்கியதோ அன்றிலிருந்தே இது ஒருவழிச்ன் சாலையாகத்தான் இருக்கிறது.

மதுரையிலிருந்து சென்னைக்குக் குடியேறினாலும் சரி, மாஸ்கோவொலிருந்து பாரீஸ¤க்கும் வந்தாலும் சரி, விதியொன்றுதான். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெற்றோர்கள் எப்படியிருப்பினும், பிள்ளைகள் குடியேறிய நாட்டின் பண்பாட்டில் ஊறியபின் உலருவது எளிதாக நடப்பதில்லை. தவிர சொந்த நாடு வந்த நாடு இருதரப்பின் பலன்களையும் எடைபோட்டுபார்க்கிறபோது வந்த நாட்டில் பலன்கள் கூடுதலாக இருப்பதும் ஒருகாரணம். புலம்பெயர்ந்த மக்களுக்கு மட்டும் நன்மையென எண்ணவே வேண்டாம். புலம்பெயர்ந்த மக்களை ஏற்ற நாடுகளுக்கும் இதில் இலாபம் பார்த்திருக்கின்றன.

66.3 மில்லியன் மக்கட்தொகையைக்கொண்ட பிரான்சு நாட்டில், 70 விழுக்காடு மக்கள் பூர்வீக மக்களென்றும் மற்ற்வர்கள் இந்தத் தலைமுறையிலோ அதற்கு முன்போ புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள். இப்புலம்பெயர்ந்த மக்களிலும் 40 விழுக்காடுமக்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரான்சுக்குள் குடியேறிவர்கள்.

ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வருகிற மக்களுக்கு பிரச்சினைகள் பொதுவில் இருப்பதில்லை. ஆனால் ஆசிய ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து புலம்பெயரும் மக்களிடமே உள்ளூர் மக்களுக்கு வெறுப்பிருக்கிறது. அந்த வெறுப்பினை உமிழ்கிறவர்கள் பெரும்பாலும் பூர்வீக பிரெஞ்சு மக்கள் அல்ல புலம்பெயர்ந்த ஐரோப்பியர்களின் வாரிசுகள். பிரான்சு நாட்டு மக்களில், பிற ஐரோப்பிய நாடுகளைப்போலவே கிறித்துவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

இரண்டாவது மதமாக இஸ்லாம் இருக்கிறது சுமார் ஏழுமில்லியன் மக்கள் அச்சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனினும் 40 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும், 60 விழுக்காடு மக்கள் ஏதாவதொரு சமயத்தைச் சார்ந்திருக்கிறபோதும் மதச்சடங்குகள், சம்பிரதாயங்களை பொருட்படுத்தாமல் வாழ்கிறவர்கள் என வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்றுதலைமுறைகளாக பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் மக்களின் குணம் எப்படி? எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். பரிசுப் பொருட்களுக்கு சட்டென்று மயங்குபவர்கள். அந்நியர்களை அத்தனை சீக்கிரம் பொதுவில் நம்ப மாட்டார்கள். தங்களைப்பற்றி உயர்ந்த அபிப்ராயங்கள் உண்டு, பிறரைக் குறிப்பாக மூன்றாவது உலக நாட்டினரை குறைத்து மதிப்பிடுவார்கள். வரலாறு பிரிட்டிஷ்காரர்களை உயர்த்தி பிடிப்பது காரணமாகவோ என்னவோ கனவில்கூட ‘So British!’ காதில் விழுந்துவிடக்கூடாது. ஆங்கிலம் கூடவே கூடாது ஆனால் அமெரிக்கர்கள் பேசினால் C’est bien!.

_________________________________________________________________
நன்றி : நாகரத்தினம் கிருஷ்ணா On September 20, 2015 சொல்வனத்தில்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொல்வனம (4-Oct-15, 11:21 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 118

சிறந்த கட்டுரைகள்

மேலே