முத்தொள்ளாயிரம் சேரன் 14 நேரிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇ - புள்ளினந்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு! 14
பொருளுரை:
இது சேர நாட்டின் இயற்கைவளம் கூறுவது.
நுனிக்கண் நஞ்சு தடவப் பெற்ற வேலையுடைய சேரமன்னன் நாடு, சேறு நிறைந்த வயல்களில் அரக்கு நிறத்தில் மலர்ந்து கிடக்கும் ஆம்பல் மலர்களைக் கண்ட பறவைக் கூட்டங்கள், நீரில் தீப்பற்றிக் கொண்டது என்றஞ்சித் தம் கைகளைப் போல் விளங்கும் சிறகுகளால் தம்முடைய இளங் குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்க முயலும் பேரொலியையுடையதாக விளங்குகிறது.
அள்ளல் - சேறு; பழனம் - வயல்; அரக்கு - செந்நிறம்; வெள்ளம் - தண்ணீர்;
வெரீஇ - வெருவி, அஞ்சி; சொல்லிசை யளபெடை ;
புள் - பறவை; கைச்சிறகு - சிறிய சிறகு எனலுமாம்; பார்ப்பு - இளங்குஞ்சு; கவ்வை - ஆரவாரமான ஒலி. அரோ- அசை;