முத்தொள்ளாயிரம் சேரன் 20 இன்னிசை வெண்பா

முத்தொள்ளாயிரம்
சேரன்
இன்னிசை வெண்பா

அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் பனிக்கடலுள்
பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சினதேர்க் கோதை களிறு! 20

பொருளுரை:

இதுவும் யானைமறம் கூறியது.

பகைவரை வருத்தும் சினத்தையும் தேரையும் உடைய எம் தலைவனாகிய சேரமன்னனது ஆண்யானை, வலிமையுடைய பகையரசர்களது கோட்டை மதிலின் இரும்புக் கதவுகளின் மீது பாய்ந்து நொறுக்கி அக்கதவினைத் தன் தந்தங்களால் தூக்கி உயர்த்திக் கொண்டு நிற்கும் காட்சி, குளிர்ந்த கடலின் நடுவே பாய்விரித்து நிற்கும் மரக்கலம் போலத் தோன்றுகிறது .

அயில் - இரும்பு; எயில் - கோட்டைமதில்; கோடு - தந்தம்; பனி - குளிர்ச்சி; நாவாய் - மரக்கலம்.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (8-Aug-25, 3:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே