கார் நாற்பது 1 - தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது - இன்னிசை வெண்பா

கார் நாற்பது
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
இன்னிசை வெண்பா

பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ1
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து! 1

பொருளுரை:

கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல இந்திரவில்லை குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழாநிற்க வருவேம் என்று சொல்லிப் போன தலைவர், மேகமானது கருக்கொண்டிருந்து துளிகளைச் சொரியா நிற்கையில் வாராரோ? (வருவார்) என்றவாறு!

திரு. - அழகு, விரும்பப்படுந்தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு;

நீலநிறமுடைய வானின்கண் பன்னிறமுடையத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில்

நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிறமலர்த் தாரினைப் போலும் என்க.

1.தீம்பெயல் வீழ என்றும் பாடம்!

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (7-Aug-25, 8:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே