தினம் தினம் ஏற்படும் சமுதாய சிக்கல்கள்
தினம் தினம் ஏற்படும் சமுதாய சிக்கல்கள்
முதலில் ஒன்றை சொல்லி விடுகிறோம். சமுதாய சீர்கேடு என்பதற்கும், சமுதாய சிக்கல் அல்லது குழப்பங்கள் என்பதற்கும் வித்தியாசம் உண்டு.
சமுதாய சீர்கேடு என்பது சட்டத்திற்கு புறம்பான காரணங்கள், மற்றும் தனி மனித வக்கிரங்கள் இவைகளால் ஏற்படுபவை.
ஆனால் சமுதாய சிக்கல்கள் அல்லது குழப்பங்கள் என்பது தனி மனிதர்களின் சில, பல, நடவடிக்கைகள், அல்லது பழக்கங்கள் இவைகள் தான் காரணம் இதைத்தான் இந்த கட்டுரை சொல்ல வருகிறது.
அதே போல இந்த சமுதாய சிக்கலுக்கு இப்படித்தான் தீர்வு உண்டு என்பதை, இந்த கட்டுரை சொல்ல போவதில்லை, காரணம் தீர்வுக்கு பல வழி முறைகள் இருக்கலாம். ஆனால் சிக்கலை அல்லது குழப்பத்தை நாமே எப்படி வரவழைத்து கொள்கிறோம் என்பதைத்தான் சுட்டி காட்டுகிறது.
அன்று விடுமுறை நாள். அவர்களது குழந்தைகள் தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். நீண்ட நாள் சண்டையும் சச்சரவுமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அன்று கிடைத்த தனிமைக்கு தம்பதிகள் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள். காலை கோயிலுக்கு சென்றார்கள். மதியம் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு ஓட்டலில் உணவு எடுத்து கொண்ட பின்பு தியேட்டருக்கு சென்று ஒரு திரைப்படம் பார்த்து விட்டு மாலையில் வீட்டுக்கு வரும் போதே ஒரு ஹோட்டலில் விரும்பியதை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
நாளை காலையில் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டும். இன்றைய நாளை சந்தோசமாக கழித்ததில் ஏற்பட்ட திருப்தியுடன் இரவு சீக்கிரம் படுத்து உறங்க படுக்கைக்கு சென்றார்கள்.
அன்றைய பொழுது மகிழ்ச்சியாக கழிந்ததால் ஒரு வித மன கிறக்கத்தில் இருவரும் இருந்தார்கள். இரவு இணை சேர, நீண்ட நாள் கழித்து சரியான சூழல் அமைந்தும் இருந்தது. ஆரம்பத்தில் இதற்காக மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்கள். திடீரென அவன் மனைவி கணவனிடம் உங்க முன்னால் காதலி இப்பொழுது எங்கே இருக்கிறாள்? இந்த கேள்வியை கேட்டவுடன் அவனுக்கு சட்டென ஒரு கோபம் வந்தது. மணமான புதிதில் அதுவும் பத்து வருடங்கள் ஆகிவிட்டது, இப்பொழுது எதற்கு இந்த கேள்வி? வேண்டாத கேள்விதானே..?
அவன் முகம் போன போக்கை கண்டு சமாதானப்படுத்த முயற்சிக் கிறாள்.அவன் சமாதானமாகவில்லை. கிட்டத்தட்ட முடிந்து போன விசத்தை அவள் தொடங்கியதாக நினைக்கிறான். தான் இவ்வளவு தூரம் சமாதானம் செய்தும் இவன் பிடிவாதமாக இருக்கிறானே, என்னும் கோபத்தில் அவளும் கோபம் கொள்ள ஆரம்பிக்கிறாள்.
அன்றைய நாள் முழுவதும் அவர்கள் இருந்த மகிழ்ச்சியான மனோ நிலை மாறிப் போய், சண்டையுடன் இரவு தனித்தனியே உறங்க செல்லும் அளவுக்கு சென்று விட்டது.
இது போல வேண்டாத அல்லது விரும்பாத செயல்பாட்டில் யாரோ ஒருவராகிய நாம் குடும்ப சூழ்நிலையை சிக்கலாக்கி கொள்கிறோம்.
நண்பர்கள் அனைவரும் ஒற்றுமையாக கல்லூரியிலோ, அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களுக்குள் சாதி, மத, மொழி இன பேதங்கள் அதுவரை வந்ததே இல்லை. ஒருவருக்கொருவர் குடும்ப விசயங்களில் கூட உதவிக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். புதிதாய் இவர்களுடன் சேரும் ஒருவர் முதலில் அந்த நண்பர் கூட்டத்தில் தன் சாதியை அல்லது மதத்தை அல்லது மொழியை சேர்ந்த ஒருவருடன் அந்த நண்பர்கள் கூட்டத்தில்,அதிக நெருக்கத்தை காட்டுகிறார். பத்து பேர் நண்பர் களாக ஒரு இடத்தில் கூடும் போதும் எப்பொழுதும் பேசிக்கொள்ளும் பொது வான மொழியை தவிர்த்து மொழி சார்ந்த நண்பனிடம் அந்த மொழியில் பேசி கொள்ள ஆரம்பிக்கிறான். அல்லது சாதி, மதம் இனம் சார்ந்து அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள், இப்படி மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் பழக்கம் அந்த கூட்டத்திலேயே தனித்து தெரியும் வண்ணம் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. இதனால் அவர்களின் நட்பு போக்கு மற்றவர்களிடமிருந்து இவர்களை தள்ளி செல்ல வைக்கிறது.
இதற்கு முன் அந்த கூட்டத்தில் பல மதம், பல இனம், பல மொழி சார்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அனைத்து நண்பர்களும் ஒரே பார்வையில் இருந்ததால், நட்பு மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. மதம் இனம் மொழி இவைகள் கண்ணுக்கு தெரியவில்லை. மாமா, மச்சான், நண்பா, இப்படித்தான் அழைத்து கொண்டார்கள். புதிதாக வந்தவரால் குறுகிய சிந்தனைகள் புகுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த நட்பு வட்டம் சாதி இன மொழி பாகுபாடுகளால் பிரிய தொடங்கிவிட்டது. இந்த செயல் நம்மை போன்ற ஒருவரின் தேவையற்ற எண்ணங்களை பிறரிடம் புகுத்த முயற்சித்த தால் ஏற்பட்டது.
இரு நிகழ்வுகளையும் ஒரு உதாரணத்துக்காக காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நம்முடைய கோபங்கள் கூட இத்தகைய சிக்கல்களை தேடி கொடுத்து விடும், நம்முடைய கோபத்தை ஓரிடத்தில் நியாமாக காட்டுகிறோம் என்று வையுங்கள். காட்டிய இடத்தில் நியாயமாக இருப்பினும், அதை பலரும் ஒதுக்கி விட்டு, நீ கோப பட்டதால்தான் இப்படி ஆச்சு..! என்னும் தீர்வை அங்குள்ள மக்களே தீர்மானித்து விடுகிறார்கள்.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றல் நாம் வரிசையாக அமைதியாக நின்று, வந்த காரியத்தை முடித்து கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். அப்பொழுது திடீரென ஒருவர் வரிசையின் இடையில் வேண்டுமென்றே புகுந்து விட்டார். அனைவரும் அதை அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். வரிசையில் வந்து கொண்டிருந்த ஒருவர் மட்டும் கோபத்துடன் உள்ளே நுழைந்தவரை பிடித்து வெளியே இழுக்கிறார். வெளியே இழுக்கப்பட்ட ஆள் “தான் செய்தது தவறு” என்று உணர்ந்தவனாக இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டு, வரிசையின் பின்னால் போயிருக்கலாம், அவன் பிடிவாதமும், வம்பும் கொண்டவனாக இருந்தால் அவ்வளவுதான் அங்கு ஒரு பெரும் கலவரத்தை உருவாக்குகிறான். யாரை கேட்டு என்னை தள்ளி விட்டே? சொன்னால் நான் போக மாட்டேனா? அதாவது தான் தவறு செய்ததை அந்த இடத்தில் வெளிக் கொண்டு வராமல் ‘தள்ளிவிட்டதுதான்’ குற்றம் என்னும் நிலைமையை அங்கு தோற்றுவித்து விடுவார். அதுவரை அவனுடன் இருந்த அனைவருமே கோபத்தில் இழுத்த இவனை ஒரு கலவரத்துக்கு காரணமானவன் போல் காண்கிறார்கள்.
இது போலத்தான் பொது வெளியில் பல நல்ல விசயங்களை ஒருவன் பேசியிருந்தாலும், விவாதித்திருந்தாலும், அவைகளை காது கொடுத்து கேட்கிறார்களோ இல்லையோ, அவனை தாண்டி கண்டு கொள்ளாமல் சென்று கொண்டிருப்பார்கள். தவறாக ஏதாவது வாய் தவறி கொஞ்சம் சங்கடப்படக் கூடிய வகையில் வார்த்தைகள் அவனிடம் வெளி வந்து விட்டால் அவ்வளவு தான் அவனை ‘குற்றவாளியாக்கி’ அவன் சொல்ல வந்த நல்ல எண்ணங்களை சிதறடித்து விடுவார்கள்.
அப்படியானால் என்னதான் செய்வது? சமுதாய பொது வெளியில் எதை செய்தாலும் சிக்கல்தானா? என்று கேட்டாலோ, அல்லது இதற்கெல்லாம் பயந்தால் எதுவுமே நடக்காது என்பதாகவோ நீங்கள் சலித்து கொள்ளலாம். ஒன்றை புரிந்து கொண்டால் போதும். மனித வாழ்க்கையில் எது சரி? எது தவறு? என்று ‘இயற்கை’ ஒரு கோட்பாட்டை வைத்திருக்கிறது. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி இருப்பதில்லை. இது இயற்கையின் தவறும் அல்ல, மனிதர்களாகிய நாம் மட்டுமே காரணமாகியிருக்கிறோம். அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. வாழ்க்கை முறை, அறிவு விருத்தி, உற்பத்தி திறன், இன்னும் பல முன்னேற்றங்களை கையில் வைத்திருக் கிறோம். பிற உயிர்களை அடக்கி, நம் உபயோகத்திற்கும், உணவுக்காகவும் பயன்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாரை தாண்டி நாம் போவது? என்னும் சிந்தனையிலேயே இருக்கிறோம்.
அப்படிப்பட்ட மனித வாழ்க்கை கூட்டமாக வாழும்போது அவரவர்கள் ஒரு பழக்க வழக்கத்தை நிர்மாணித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்கத்தையே வாழ்க்கையின் நிறைவு வாழ்க்கை என்பதாக தங்களுக்குள் வகுத்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் இருக்கும் மனிதர்களாக சில பல குழுக்களாக உருவாகி இந்த சமுதாய வெளியில் வாழ தலைப்படுகிறார்கள்.
அப்படியானால் அத்தகைய குழுக்களில் ஏதேனும் ஒரு குழுவின் கை ஓங்கி அவர்களின் வழக்கத்தை ஏற்று கொள்ள சொல்லி சமுதாயத்தை ஆட்டிபடைக்க மாட்டார்களா? என்னும் கேள்விக்கு கிடைக்கும் பதில் ‘அரசு’ அல்லது ‘அரசாங்கம்’ என்று ஒன்று உருவாக்கப்பட்டு, வலிமையான சட்டம், பாதுகாப்பு, காவல்துறை, நீதி துறை என்று உருவாக்கப்பட்டு, இத்தகைய குழுக்கள் கொண்ட சமுதாயத்தை சிக்கலில்லாமல் நடத்தி கொண்டு போக வைக்கிறது.
ஒரு வேடிக்கை என்னவென்றால் ‘அரசு’ அல்லது அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடுகளை செய்ய இந்த குழுக்களில் இருந்துதான் மனிதர்கள் தங்களுடைய திறமைகளை காட்டி அரசாங்கத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு பதவிக்கு வருகிறார்கள்.
இத்தகைய பொறுப்புக்கு வருபவர்களுக்கு தகுதிகள் நிணயிக்கப்பட்டு, அதற்கான கல்வி, ஒழுக்கம் கட்டாயம் தேவை என்றும் நிர்ணயிக்கிறார்கள்.
அத்தகைய பதவிக்கு வர ஒவ்வொரு குழுக்களில் இருக்கும் மனிதர்கள் நன்கு கல்வியை கற்று, தேர்வுகள், திறமைகள் மூலம் அதற்கான தனது பிற தகுதிகளை வளர்த்து அரசாங்கத்தில் பதவி நிலைகளுக்கு வருகிறார்கள்.
இப்பொழுது அனைத்து மக்களுமான சட்டம், ஒழுங்கு, கல்வி, மற்றும் பல வித தேவைகளை அரசால் உருவாக்கப்பட்டு நடுநிலையுடன் எந்த குழுக்களின் பழக்க வழக்கங்களையும் சார்ந்திருக்காமல் பொதுவான நடைமுறை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியை அல்லது அரசாங்கத்தை நடத்துகிறார்கள். . அதை குலைக்க முயற்சித்து, தவறாக நடந்து கொள்ளும் எத்தகைய குழுவை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனையும் நீதி மன்றத்தால் அளிக்கப்படுகிறது.
சமுதாய வாழ்க்கையை சச்சரவின்றி கொண்டு செல்வது என்பது இப்பொழுது அரசின் கட்டுப்பாட்டில் என்பதால் அதை திறம்பட கொண்டு செல்வது அவர்களின் வேலை என்றாகி விட்டது.
என்றாலும் ஒவ்வொரு தனி மனிதனும் செய்யும் சின்ன சின்ன தவறுகள் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தி விடவும் செய்கின்றன. அது ஒன்றும் பெரிய குற்ற சம்பவமான செயல்கள் அல்ல, சாதாரணமானது தான் என்றாலும், அது சில நேரங்களில் செய்து விடும் குழப்பங்கள் இருக்கிறதே..? அதுதான் ஞாபக மறதி, முன் கோபம், பொறாமை என்னும் வயிற்றெரிச்சல், இன்னும் பல பல பழக்க வழக்கங்கள் தனி மனிதனை சார்ந்து இருப்பதால் கவனமாய் இருக்க வேண்டியிருக்கிறது.
சாதாரண குப்பை போவதில் ஆரம்பித்து ஒரு குடம் தண்ணீருக்காக நடைபெறும் சம்பவங்கள் ஏராளமாக இருக்கிறது.
அதே போல் பக்கத்தில் இருப்பவர்கள் போல் நாமும் வசதியாக இருக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் கடனில் அமிழ்ந்து காணாமல் போகிறவர்கள் எத்தனை பேர்?
இன்னும் ஏராளாமனவைகள் இருக்கின்றன, ட்ராபிக் சிக்கலில் சண்டையிட்டு கொள்வதில் ஆரம்பித்து தூக்கத்தில் வண்டியை கொண்டு போய் மோதி இவர் பாதிப்பது மட்டுமில்லாமல் அங்கு நின்று கொண்டிருந்த பலரையும் பாதிப்புள்ளாக்குவது.
இப்படி எண்ணற்ற சிக்கல்களை தனிமனிதர்களின் சில தவறுகள் மூலம் தினம் தினம் இந்த சமூகம் சந்தித்தாலும் “இதுவும் கடந்து போகும்” என்னும் பாணியிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.