திரைச்சுவடுகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி மதிப்புரை மூத்த எழுத்தாளர் ப திருமலை
திரைச்சுவடுகள் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
மதிப்புரை மூத்த எழுத்தாளர் ப .திருமலை !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதாளு தெரு, தி. நகர், சென்னை – 17.
தொலைபேசி044 24342810 / 24310769 பக்கங்கள் 178. விலை ரூபாய்160
சினிமா என்பது ஆளுமை செறிந்த ஊடகம்
சினிமா என்பது அற்புதமான ஊடகம். தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த தலைவரைத் தேடும் இடம் இது. எனக்கும் சினிமாவுக்கும் என்னவோ ஞான பிராப்தி கிடையாது. தியேட்டர் சென்று சினிமா பார்த்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். வேறு வழிகளிலும் சினிமாக்கள் பார்ப்பதில்லை. பேராசிரியரும் எனது நண்பருமான கு. ஞானசம்பந்தன் அவர்கள் அவ்வப்போது சிறந்த சினிமாக்கள் குறித்து எனக்குச் சொல்வார். நான் கேட்டுக்கொள்வேன். எனக்குள், தியேட்டர் தேடிப்போய் படம் பார்த்த காலத்தைக் கடந்துவிட்டது போன்ற உள் உணர்வு. கூட்டநெரிசலில் சிக்கி சட்டை கிழியுமளவுக்கு போராடி "உலகம் சுற்றும் வாலிபன்" பார்த்த தருணம் நினைவில் இருக்கிறது. இரண்டு மணிநேரம் உட்காரவேண்டும் என்பதும், அதிக சத்தமும் என்னை தியேட்டர் சினிமாக்களில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டதாகக் கருதுகிறேன். ஆனால், சினிமா ஆகச் சிறந்த ஊடகம் என்பதில் எள்முனையேனும் சந்தேகமில்லை.
நான் குமுதம் குழுமத்தில் சீனியர் செய்தியாளராகப் பணியாற்றனாலும் சினிமா நடிகர், நடிகைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதில் ஆர்வம் காண்பித்ததில்லை. ஒருவேளை அதற்கான வாய்ப்பு வரவில்லை என்றுகூடச் சொல்லலாம். நான் சந்தித்து கட்டுரை எழுதிய ஒரே நடிகை கவர்ச்சி நடிகையான தவமணி தேவி மட்டும் தான். தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி நடிகையாக கருதப்படும் தவமணி தேவியை நான் சந்திக்கும்போது அவருக்கு வயது 70ஐத் தாண்டியிருந்தது. நான் அவரை சந்தித்தது 1990களில். இவர் 1940களில் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். 1948இல் வெளியான கலைஞர் கருணாநிதிக்கும், மக்கள்திலகம் எம்ஜிஆருக்கும் மிகப் பெரும் வெற்றியைத் தந்த ராஜகுமாரியில் நடித்தவர். கர்நாடக சங்கீதத்தையும், பரத நாட்டியத்தையும் முறைப்படி பயின்றவர். சிறந்த குரல் வளம் மிக்கவர். லண்டன் பிபிசி வானொலியால் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டவர். புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சீனியர் பிஏ பட்டம் பெற்றவர் என தகுதிகள் பல படைத்தவர். தவமணி தேவி இலங்கை கண்டியை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தை தமிழர். தாய் சிங்களவர் என்பது அவர் குறித்து கூடுதல் செய்திகள். இந்தச் செய்திகளை நான் அறந்தை நாராயணன் அவர்களின் சினிமா தொடர்பான நூல்களைப் படித்தபின்தான் அவரை சென்று சந்தித்தேன். இதுபோல புத்தகங்கள் எனக்கு சினிமா தொடர்பானச் செய்திகளைத் தந்திருக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள்தான் சினிமாத்துறையில் அதிக தொடர்பிலிருந்தார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் 1930களின் இறுதியில், வெளிவந்த மாத்ரு பூமி படத்தின் முதல் காட்சியை, எஸ். சத்தியமூர்த்தி, தொடங்கிவைத்து, அந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டுப்பற்று உணர்வைப் பாராட்டிப் பேசியுள்ளார். மனோகராவில், நாயகனின் தந்தையான அரசன் வேடத்தில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நடித்தார் என்றும், 1958இல் கே.பி. சுந்தராம்பாள், காங்கிரஸ் ஆதரவில் நாட்டிலேயே முதன்முதலில் சட்டசபைக்குள் நுழைந்த திரைப்பட நடிகர் என்றும் தியோடர் பாஸ்கரன் அவர்களின் நூல்கள் மூலம் காங்கிரஸே முன்னோடி என்ற அறிதல் வருகிறது.
இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் கவிஞர் இரா. இரவி அவர்கள் திரைச்சுவடுகள் புத்தகத்தை எனக்கு ஒரு மாதத்துக்கு முன் தந்தார். அதனை வாசித்தேன். அதில் 55 சினிமாக்களின் விமர்சனங்கள் அணிவகுத்திருந்தன. அதில் சில சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து (விமர்சனத்தின் அடிப்படையில்) பார்த்தேன். மாயாண்டி குடும்பத்தார், பசங்க, சைவம், சாட்டை, சென்னையில் ஒருநாள், வாகைசூடவா, மெரினா, தெய்வத்திருமகள், ஒரு கல் ஒரு கண்ணாடி.. சென்னையில் ஒருநாள் நான் பார்த்த சில படங்கள். "என்ன பரீட்சைக்குப் படிக்கிறது மாதிரி சினிமா பார்க்கிறீங்க.. என்ன ஆச்சு..? என என் மனைவியே ஆதங்கப்படும் அளவுக்குப் பார்த்தேன். அத்தோடு இந்த ஞாயிற்றுக்கிழமை சன் டி.வியில் இந்தபடம். கே.டிவியில் இந்தப் படம் என என் மனைவி சொல்லும் அளவுக்கு ஆளானேன். வாசிக்கவேண்டிய புத்தகங்கள் ஒரு புறம் குவிந்து கொண்டே செல்ல, சினிமா பார்ப்பதை சில நாட்களுக்கு தவமாக்கினேன்.
சினிமாக்களைப் பார்த்தபின்னர் கவிஞர் இரவி அவர்களின் நூலினை மீண்டும் திரும்பிப் பார்த்தேன். வாசிக்க ரம்யமாக, எளிய நடையில் இருந்தது. சினிமா பார்த்தவர்கள் அதன் விமர்சனத்தைப் பார்ப்பது என்பது அலாதியான விஷயம். கவிஞர் இரா. இரவி அவர்களின் விருப்பு, வெறுப்பு இல்லாத விமர்சனங்கள். மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. காரணம், இன்றைக்கு விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதுகிறவர்கள் அருகிப் போனார்கள். யார்யாரையெல்லாமோ திருப்திப்படுத்திட பொய்மூலாம் பூசிய வார்த்தைகள் இதில் இல்லை.
உதாரணத்துக்கு மெரினா விமர்சனத்தில் சிவகார்த்திகேயன் பெயருக்குத்தான் கதாநாயகன். படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கதாநாயகன்கள் என்கிறார். வாகைசூடவா. நான் மிகவும் ரசித்த படங்களில் முக்கியமானது. இதுபோன்ற தரமான படங்கள் வரவேற்கப்படவேண்டும் என பரிந்துரைக்கிறார். பொதுவாக தரமான படங்கள் என அவர் கருத்துபவற்றிற்கு மக்கள் இந்தப் படத்தினை ஆதரிக்கவேண்டும் என ஆதரவு கரம் நீட்டுவதை இந்த புத்தகத்தில் காணப்படுகிறது.
இதை ஏதோ புத்தகம் போல கடந்து செல்லமுடியாது. காரணம், இது ஒரு ஆவணம். நிகழ்கால சினிமாக்களின் நிஜமான பதிவு. கவிஞர் இரா. இரவி அவர்களின் எழுத்து நேர்மையை இந்த புத்தகத்தின் பக்கத்துக்கு பக்கம் காணமுடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் சினிமாக்களின் விமர்சனத்தொகுப்பை அவர் வெளியிடவேண்டும் என அவருக்கு அன்பு வேண்டுகோள் வைக்கிறேன். காரணம், மீண்டும் சொல்கிறேன் சினிமா என்பது ஆளுமை செறிந்த ஊடகம். அதனை செம்மையாகக் கையாளத் தெரிந்த கவிஞர் இரவி அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பது என் அவா. வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்..

