தம்பூத மெண்ணா திகழ்வானேல் – ஆசாரக்கோவை 15
இன்னிசை சிந்தியல் வெண்பா
(அ மோனை, ய் இடையின ஆசு)
ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் நாயிறு
தம்பூத மெண்ணா(து) இகழ்வானேல் தன்மெய்க்கண்
ஐம்பூத மன்றே கெடும்! 15
- ஆசாரக்கோவை
பொருளுரை:
நிலம் முதலான ஐம்பூதங்களையும் பார்ப்பாரையும், பசுவையும், சந்திரனையும் சூரியனையும் தம் உடம்பு போலக் கருதிப் போற்றாது இகழ்வானாயின் தன் உடம்பின்கண் உள்ள ஐந்து பூதத்தையுடைய தெய்வங்கள் அன்றே கெட்டகன்றுபோம்.
கருத்துரை:
பஞ்ச பூதம் முதலியவைகளை இகழ்வானாயின் ஒருவன் உடம்பின்கணுள்ள ஐந்துபூதத்தையுடைய தெய்வங்கள் அன்றே நீங்கும்.
பூதம் கருவியாகு பெயராய் அவற்றாலாகிய உடம்பை யுணர்த்திற்று; தம்பூதம் என்னாது என்றும் பாடம்! மெய்க்கண் ஐம்பூதம் என்பதற்கு உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் எனவுங் கூறலாம்! ஐம்பூதங்களாவன : மண், நீர், அனல், வளி, வான்!