தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது - கார் நாற்பது 25
பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது! - கார் நாற்பது 25
இன்னிசை வெண்பா
கருங்கால் வரகின் பொரிப்போல் அரும்பவிழ்ந்(து),
ஈர்ந்தண் புறவில் தெறுழ்வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய்குறி; வாரார் அவரென்று
கூர்ந்த, பசலை அவட்கு! 25
- கார் நாற்பது
பொருளுரை:
குளிர்ச்சி மிக்க காட்டில் கரிய தாளினையுடைய வரகினது பொரியைப் போல தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; (தலைவர்) செய்த குறிகள் வந்துவிட்டன; (ஆதலால்) தலைவர் இனி வரமாட்டாரென்று தலைவிக்கு பசலை மிக்கது!
ஈர்ந்தண்: ஒரு பொரு ளிருசொல்,
தெறுழ் - காட்டகத்ததொரு கொடி
கூர்ந்தது என்பதில் ஈறு கெட்டது.

