மானுடம் வெல்லும்

மானுடம் வெல்லும்

இது பிரபஞ்சன் எழுதிய ‘புகழ்பெற்ற நாவலின் தலைப்பு’, ஆனால் துளி அளவு கூட அதனை பற்றிய கட்டுரை அல்ல
நல்ல வெயில், மணி பதினொன்றுக்கு மேல் இருக்கலாம். அந்த தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடங்கலாகி கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு பக்கமும் வாகனங்கள் தேங்கி இரண்டு மணி நேரமாக நின்று கொண்டிருந்தன.
பின்னால் வந்து நின்று கொண்டிருப்பவர்களுக்கு எதனால் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன? என்பது தெரியவில்லை. அவர்கள் முன்புறம் இருப்பவர்களிடம் கேட்டு, அவர்கள் முன்புறம் இருப்பவர்களிடம் கேட்டு இப்படி சங்கிலி தொடராய் கேட்டு கடைசியில் வந்த பதில் ‘போராட்டம்’. எதற்கோ ஒரு குழு வாகனங்களை மறித்து போராட்டம் நடத்துகின்றன.
அப்படி ஒன்றும் போராட்டக்காரர்கள் நிறைய பேர் இருப்பதாகவும் தெரியவில்லை, என்றாலும் இத்தனை வாகனங்களை அவர்களால் எப்படி தடுத்து நிறுத்த முடிந்தது?
விடை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த போது தெரிந்தது. அந்த பாதை முழுக்க மரங்களை வெட்டி போட்டு மறித்திருக்கிறார்கள்.
இங்கு கேள்வி எழுவது என்னவென்றால், தேவை என்பது மனிதர்களுக்கு, அல்லது அவர்களின் ஊர்களுக்கு, நாட்டுக்கு, எது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். அது நல்லவைகளுக்காக கேட்கப்பட்ட கோரிக்கையாக கூட வைத்து கொள்ளலாம். ஆனால் உயிரோடு இருந்த மரங்கள் என்ன பாவம் செய்தன? அதை வெட்டி வீழ்த்தி இவர்களின் போராட்டத்துக்கு பலி ஆவதை தவிர?
கடவுளிடம் தன் காரியம் வெல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் மனிதன் ‘பலித்தால்’ அல்லது ‘காரியம் வெற்றியானால்’ அதற்கு ஈடாக கொடுக்க நினைப்பது என்ன? விலங்குகள், பறவைகள் இவைகளின் உயிர்கள் தான். அதை இவர்களே வளர்த்திருந்தாலும்….?
நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. தான் அடித்து சாப்பிடபோகும் உயிரை எந்த விலங்கும் காசுக்கு விற்பதுமில்லை. நாளை என்று சேமிப்பதும் இல்லை, இதைவிட அடித்த மிருகத்தை விரட்டி விட்டு அதைவிட வலிமையான மிருகம் அந்த இறைச்சியை பறித்து செல்லும் சம்பவமும் நடக்கிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது இயற்கையில் இருந்து பிறந்த உயிரினங்களில் எப்பொழுதுமே “மானுடம்தான்” வென்று கொண்டிருக்கிறது,
“மானுடம் வெல்லும்” என்னும் சொல் மானுடத்தை பெருமைபடுத்துவ தற்காக இங்கு குறிப்பிடப்பட போவதில்லை. “மானுடம் தான் வெல்லும்” இதை என்றோ ஏற்றுக்கொண்டு மனிதனுடன் படைக்கப்பட்ட மற்ற உயிரினங் கள், அவைகள் தோன்றிய காலம் முதலே ஒப்புக்கொண்டு விட்டது. என்றா லும் மானுடம் ஏன் இப்படி வெல்கிறது? என்னும் வருத்தமான கேள்வியை முன் வைக்கிறது,
பொதுவாகவே உயிர் படைப்பு என்பது ‘சங்கிலி தொடர்தான்’ என்பதை இயற்கையோடு பிறந்த எல்லா உயிரினங்களும் ஒப்புக்கொண்டாலும், மனிதன் மட்டும் அந்த ‘சங்கிலித்தொடரை’ தன் வசத்துக்கு வளைத்து கொண்டதைத்தான் “மானுடம் வெல்லும்” என்று இயற்கை சொல்கிறது.
உணவு தேவை என்று உயிரினங்களை வேட்டையாடுபவன் உணவு சங்கிலியில், முதலில் இறைச்சியில் தொடங்கி கடைகோடியில் தொடங்கும் ‘தாவரங்களையும்’ தனதாக்கி கொள்வதில்தான் “மானுடம்” மற்றவைகளை வெல்லும் என்று தெரிகிறது
சரி தாவரங்களையும் உணவாக்கி கொண்டாய், விலங்குகளின் இறைச்சிகளையும் உணவாகி கொண்டாய், அடுத்து? கடல்வாழ் உயிரினங்கள் மீன் மட்டுமல்ல, கடற்பாசிகள் முதல் கொண்டு அனைத்து உயிரினங்களை யும் கடலிலிருந்து அள்ளிச்சென்று உணவாக்கி கொள்வதில் “மானுடம்” வென்றுதான் இருக்கிறது.
கேள்வி ஒன்று எழுகிறது இறைச்சி என்பது மனிதர்களின் வளர்ப்பில் இருக்கும் மிருகங்களில் இருந்து தானே எடுத்து கொள்வதில் இருக்கிறது. உண்மைதான் வளர்ப்பில் வளர்க்கும் மிருகங்களை கொல்வதின் மூலம் அவர்களது உணவாக எடுத்து கொள்பவன் அதை விற்பனை செய்து பணம் ஈட்டி லாபம் அடைவது ஏன்? இயற்கை அவனை இறைச்சியில் உயிர் வாழத்தானே சொல்கிறது வாழ்க்கையை அனுபவிக்க வசதிகளை பெருக்கி கொள்ளவுமா இயற்கை படைத்திருக்கிறது? (இறைச்சி கடைக்காரர்கள், மற்றும் இறைச்சி ஏற்றுமதி செய்பவர்கள் கோபித்து கொள்வார்கள்.) மானுடத்தின் வெற்றியை குறிப்பிடுவதால் இதைபற்றி பேச வேண்டி உள்ளது.
அடுத்து கடல்வாழ் உயிரினங்களையும் பிடித்து விற்பனை செய்வதின் மூலம் மானுட வாழ்க்கையின் வசதிகளை, பெருக்கி கொள்ளத்தானே
தாவரங்களில் விளையும் பலன்கள் இதுவும் கூட மனிதர்களை சார்ந்தது என்னும் கோட்பாடுகள் என்றோ பூமியில் வந்து விட்டது.
உணவு சங்கிலியை இத்தோடு விட்டு விட்டு அடுத்து ‘ஆக்ரமிப்பு’ என்பதை எடுத்து கொள்வோம். இயற்கை உருவாக்கிய காடுகள் மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் வாழ்வதற்குத்தான். ஆனால் அந்த காட்டை தன் வலிமையினால் மற்ற விலங்குகளை விரட்டி விட்டு இவன் “ஆக்ரமித்து” அந்த காட்டில் விளையும் அனைத்து வளங்களையும் அனுபவிக்க முற்படுகிறான்.
இதுபோல் ஒவ்வொன்றாக மனிதனிடம் இழந்து கொண்டே இருக்கின்றன மற்ற உயிரினங்கள், ‘தனக்கானது’ இது என்று உரிமை கொண்டாட முடியாமல் மனிதர்களிடம் விட்டு கொடுத்து விலகி சென்று விடுகின்றன. இதை பார்க்கும்பொழுது தெரிகிறதல்லவா “மானுடம் வெல்லும்” என்று.
இன்னும் இருக்கிறது சொல்வதற்கு, இவனது போக்குவரத்து வசதி களுக்காக, இருப்பிடம் அமைப்பதற்கு வசதியாக, உயிரோடு இருக்கும் மரங்களை வெட்டி சாய்க்கிறான். அதன் அனுமதி இல்லாமலேயே அதனை பூரணமாய் அறுத்து கதவு சன்னல் என்று விதம் விதமாய் செய்து தனது இல்லத்தை அழகு படுத்தி கொள்கிறான்.
மண்ணுக்குள் அமைதியாய் வாழும் ஊர்வன உயிரினங்கள், பாம்புகள், மற்றும் கரையான்கள், இன்னும் பல, அவைகளின் இருப்பிடங்களில் இவர்களுடைய இருப்பிடங்களை உருவாக்கி விஸ்தரிப்பதின் மூலம் அவைகளை அங்கிருந்தே விரட்டி அடிக்கிறான்.
மனிதர்களுக்குள் நடைபெறும் சண்டைகள், சச்சரவுகள் போராட்டங்கள் இவைகளால் பாதிக்கப்படுவது மரங்களும் பொருட்களும்தான். இவைகளை ஒன்று எரித்து நாசப்படுத்துகிறான். இல்லாவிட்டால் அழித்து விடுகிறான்.
பரந்துபட்ட உலகத்தில் பூமி என்னும் ஒரே ஒரு உயிர்வாழும் ‘கோளில்’ அதுவும் “எழுபது சதம் நீராலும்”, மீதமே “நிலமாக” இருந்தும், இரண்டிலுமே வாழும் உயிரினங்களை விட “தான் மேலானவன்” என்று எப்பொழுதும் நிருபித்து கொண்டே இருக்கும் மனித இனத்தை பிற உயிரினங்கள் எப்பொழுதும் “மானுடம் வெல்லும்” என்று ஒத்து கொண்டு தள்ளி சென்று விடுகின்றன.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (27-Sep-25, 12:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : maanudam vellum
பார்வை : 26

மேலே