சைக்கிளின் கிண் கிணி
சைக்கிளின் கிண் கிணி
எப்பொழுதும் பரபரப்பாய் இருந்தாலும், இரவு அமைதியாய் தூங்கி எழும் அந்த நகரத்தின் தெரு ஒன்றில் விடிந்த பொழுது பெரும் துயர் ஒன்றை சந்தித்திருந்தது.
அதுவும் அந்த தெருவின் சாக்கடை ஓரமாய் கிடந்த மனிதனின் உடம்பில் இருந்து வழிந்த இரத்தம் ஓடையாய் அவனை சுற்றி இருக்க அவன் முகம் குப்புற கிடந்த நிலையில் எந்த வித சலனமின்றி கிடந்தது.
சுற்றி நின்றபடி பார்த்து கொண்டிருந்தவர்களின் கண்களில் பய ரேகையை விட அதிகம் பரிதாப உணர்ச்சியே தெரிந்தது.
இதோ இப்படி கிடக்கிறானே இவன் இந்த நேரத்தில் சைக்கிளை எடுத்தபடி கிண் கிணிங் மணி அடித்தபடி தெருவிலிருந்து கிளம்பியிருப்பான். அவன் சைக்கிள் கேரியரில் “ஆவி பறந்து” கொண்டிருக்கும் மூடி வைக்கப்பட்ட ‘சில்வர் டிரம்’ ஒன்று வைக்கப்பட்டிருக்கும், அதனுடனே பத்திருபது பேப்பர் டம்ளர்களும், சில்வர் டம்ளர்களும் கூட கொத்தாக தொங்க வைக்கப்பட்டிருக்கும்.
பழனியப்பா கிளம்பிட்ட போலிருக்கு? எதிரில் நடந்து வந்து கொண்டிருந்த பெரியவர் ஒருவர் அவனை கேட்டதும், ஆமா பெரிசு இப்ப போனாத்தான் “வாக்கிங்” போயிட்டு வர்றவங்க மூலிகை சூப் குடிக்கணும்னே நம்மளை தேடுவாங்க, சொல்லியபடியே பறப்பான்.
இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் கடற்கரை, அதனை ஒட்டி இந்த பக்கம் மைதானம், இவைகளில் காலையில் அலைமோதும் உடற்பயிற்சி, நடை பயிற்சி, செய்வோர் கூட்டம்.
வேர்க்க விறுவிறுக்க பயிற்சியை முடித்து விட்டு, கொண்டு வந்த டவலில் முகம் கை கால் துடைத்து கொண்டே ஓரமாய் சைக்கிளை நிறுத்தி வைத்து காத்திருக்கும் இவனிடம் ஒரு டம்ளரில் சூப்பை வாங்கி குடித்து விட்டு அவரவர்கள் வந்திருக்கும் இரு சக்கர வண்டி, கார், சைக்கிள் இவைகளை எடுத்துக்கொண்டு பறப்பார்கள்.
கிட்டத்தட்ட ஒன்பது மணிக்குள் இவன் கொண்டு வந்திருந்த ‘டிரம்’ காலியாகி இருக்கும். சேர்ந்து விட்ட சில்லறை காசுகளுடன் கூடிய நோட்டுக்களை அப்படியே மொத்தமாய் ஒரு மஞ்சள் பையில் போட்டு சுருட்டி எடுத்து வருவான். இதை அப்படியே பொண்டாட்டி ‘லட்சுமி’ கையில் கொடுப்பதுடன் இவன் வேலை முடிந்தது. கை கால் கழுவி கொண்டு அக்கடாவென உட்கார்ந்து ஓய்வெடுப்பான்.
‘லட்சுமி’ அதற்குள் இவனுக்கும் அவளுக்கும் காலையில் சாப்பிட தோசை சுட்டு எடுத்து வருவாள். இருவரும் பங்கிட்டு உட்கார்ந்தபடியே சாப்பிட ஆரம்பிப்பார்கள். புள்ளைங்க எல்லாம் ஸ்கோலுக்கு போயாச்சா?
இப்பத்தான் கிளம்புச்சுங்க, அவனுக்கு பதில் சொல்லியபடியே அடுப்பில் கொதித்து கொண்டிருக்கும் பாலுடன் டீ டிகாசினை கலந்து வேறொரு சில்வர் டிரம்மில் ஊற்றுவாள்.
இரண்டு பைகளில் அப்பொழுதுதான் சுட்டு எடுத்து வைத்திருந்த பருப்பு, உளுந்து வடைகளையும் போட்டு இவன் நிறுத்தி வைத்திருக்கும் சைக்கிள் பாரின் இருபக்கமாக தொங்கவிடுவாள்
பத்துமணிக்கு அடுத்த நடைக்கு தயாராகி சைக்கிளின் பின்புறம் காரியரில் கட்டி அதே போல் கிளம்பி விடுவான். இந்த முறை கடை வீதியை தாண்டி நான்கைந்து சிறு சிறு கம்பெனிகள் இருக்கும் பகுதிக்கு சைக்கிளை அழுத்துவான்.
இவன் போய் சேரவும் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் கைகளை துடைத்தபடியே இவனது சைக்கிளில் வரும் டீயை குடிக்க காத்திருப்பர்.
பதினோரு பனிரெண்டு மணி வரைக்கும் அவனது வியாபாரம் நடக்கும். அதற்குள் கொண்டு வந்திருந்த ‘வடையும், டீயும்’ முடிந்து கிளம்பி விடுவான்.
வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு சிறிய தூக்கம் போட்டு எழுவான்.
மூன்று மணிக்கு மீண்டும் இதே போல் ஒரு நடை அந்த கம்பெனி தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு போவான். எல்லாம் முடிந்து ஆறு மணிக்குள் திரும்ப வந்தவனுக்கு அடுத்த ரவுண்டு மீண்டும் கடற்கரை மைதானத்துக்கு செல்ல “டிரம்மில்” சூப் தயாராக இருக்கும்.
எல்லாம் முடிந்து படுக்கைக்கு போக இரவு பத்து மணி ஆகிவிடும். ஆனால் இவன் மனைவி லட்சுமிக்கு அதற்கு மேல்தான் வேலைகள் அதிகமாக இருக்கும். நாளைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைப்பது, அதற்காக காய் கடைவீதி சென்று வாங்கி வந்ததை எல்லாம் பிரித்து வைப்பது, இப்படி அவள் வேலை முடிந்து படுக்க செல்லும்போது ‘மணி பனிரெண்டு’ கூட ஆகி விடும்.
விடியற்காலை ‘நான்கு மணிக்கு’ எழுந்து ‘சூப் தயாரிக்க’ அடுப்பை பற்றவைக்க ஆரம்பித்தாள்…. என்றால், இதற்கு இடையில் குழந்தைகளை கவனித்து அவர்களை எழுப்பி குளிக்க வைத்து ஸ்கூலுக்கு அனுப்ப ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
எல்லா பரபரப்பையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு இதோ தெருவோரத்தில் குப்புற கிடக்கிறானே, அவனையே பார்த்து கதறியபடி லட்சுமியும் அவனது குழந்தைகளும்..இருந்த நிலைமையை பார்த்தவர்களின் அடிவயிறு கலங்கி போயிருக்கும்.
அவனை ‘கொலை செய்யும்’ அளவிற்கு அவன் என்ன செய்தான்? இடைவிடாத உழைப்பு, குடும்பத்தை காப்பாற்ற ஓடிய ஓட்டம், இவைகள் கூட ஒருத்தனுக்கு இவன் மேல் பகையை கொண்டு வருமா?
காவல்துறை அவனது உடலை எடுத்து சென்று அரசு ஆஸ்பத்திரியில் கொடுத்து வழக்கமான நடைமுறைகளை செய்து மீண்டும் அவனது உடலை இவனது குடும்பத்திடம் ஒப்படைத்து, கிட்டத்தட்ட ஓடி ஓடி உழைத்த பணம் இதற்காக விரயமாகி போனது.
எங்கிருந்தோ வந்து குதித்த இவனது ‘சாதி சங்கங்களின்’ கூக்குரல், அதையும் தாண்டி ஒரு சில ‘அரசியல் கட்சிகள்’ இவனது மரணத்தை காட்டி போட்ட அரசியல் நாடகங்கள், இவைகளால் லட்சுமிக்கும், அவளது குழந்தைகளுக்கு கிடைத்த பயன் தான் என்ன?
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது, “ஆள் மாறாட்ட கொலை” என்று முடிவு அறிவிக்கப்பட்டது. அன்று இரவு இவன் எழுந்து சிறு நீர் கழிக்க ஒதுங்கியவனை வேறொருத்தனை முடிக்க வேண்டும் என்று காத்திருந்தவன், “அவன் தான் இவன் என்று தவறாக நினைத்து உட்கார்ந்திருந்த நிலையிலேயே வெட்டி விட்டு ஓடி விட்டதாக பிடிபட்ட கொளையாளி ஒப்புக்கொண்டான்.
அடுத்த பரபரப்புக்கு ஊடகங்கள், சாதி, அரசியல் கட்சிகள் நகர்ந்து கொள்ள…
மீண்டும் அதே தெருவில் ‘கிண்கிணி சத்தம்’, இந்த முறை லட்சுமி சைக்கிள் சீட்டின் மேல் உட்கார்ந்திருக்க, இழுத்து செருகிய சேலையுடன் அதே சைக்கிளின் காரியரில் ஆவி பறக்க மூடி வைத்திருந்த “சில்வர் டிரம், கூட பிளாஸ்டிக்,சில்வர் டம்ளர்கள்.
உழைப்பை எதுவும் செய்ய முடியாது, அது தன்னை உயிர்ப்பித்து கொண்டேதான் இருக்கும், உழைப்பவர்களின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம்.

