புதுமை பித்தனின் ஒரு சில கதைகள், கட்டுரைகளில், இருந்து சில குறிப்புகள் முரண்
புதுமை பித்தனின் ஒரு சில கதைகள், கட்டுரைகளில், இருந்து சில குறிப்புகள் (முரண்)
பார்வை: புதுமைப்பித்தான் படைப்புலகம்
இராமகுருநாதன், இரண்டாம் பதிப்பு.2011
பதிப்பகம்:கலைஞன் பதிப்பகம்,
சென்னை-17
இன்னும் கூட இலக்கிய உலகில் புதுமைபித்தனின் கதைகளை, கட்டுரைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதும், அதை பற்றி வாதாடுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படியானால் இத்தனை வருடங்கள் கழிந்தும் அவரது படைப்புக்கள் இலக்கிய உலகில் பேசப்படக்கூடிய வகையில் இருந்து கொண்டிருக்கின்றன.
அவரது இலக்கியம் இன்றளவும் நேர்வினை, எதிர் வினை விமர்சனங் களை வளர்த்து கொண்டுதான் இருக்கிறது.
சாப விமோசனம் கதையில்
“அகல்யை உடலால் கலங்கமுற்றாலும் உள்ளத்தால் கலங்கமில்லா தவள், கெளதமர் சொல்வது மனைவியை புரிந்து கொண்டவனின் தன்மை யாக கொள்ளமுடியும்
கடவுளும் கந்தசாமிபிள்ளையும் கதையில்
கேலி கிண்டல் கலந்து எழுதப்பட்ட கதை
கார்த்திகை பெண்கள் அறுவரால் பாலூட்டி வளர்க்கப்படாவிட்டாலும் “மெல்லின்ஸ் கிளாஸ்கோ” என்னும் அமிர்தத்தை அருந்தி வளர்ந்தததை திருஅவதார படலமாக புதிய கந்தபுராணம் விவரிக்கிறது.
பசி என்னும் சூரபத்மனை கொல்ல புறப்படும் கந்தப்ப பிள்ளைக்கு பேனா என்னும் ஆயுதம் கிடைக்கிறது.
கடவுள் மனிதனிடம் சொல்வதாக “உங்களிடம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம், உடன் இருந்து வாழ முடியாது.
கவிதை உலகில் வேளூர் வெ.கந்தசாமி பிள்ளை என்னும் பெயரிலெழுதியது
“ஐயா நான்
செத்ததற்கு பின்னால்
நிதிகள் திரட்டாதீர்
நினைவை விளிம்புகட்டி
கல்லில் வடித்து
வையாதீர்”
மகாமசானம் என்னும் கதையில்
அப்பொழுது அவன் “ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடை பாதையில் படுத்து சாவகாசமாய் செத்து கொண்டிருந்தான்.
சாவதற்கு நல்ல இடம், சுகமான மர நிழல், வெக்கை தணிந்து அஸ்தமனமாகி வந்த சூரியன், ஜே ஜே எனும் மனித இயக்கம்.
அபிநவ ஸ்நாப் என்னும் கதை
ஸ்நாப் என்றால் என்ன? நாகரீகமானவர்கள், நல்லவர்கள் (முக்கியமாக மெஜாரிட்டியினர்) அங்கீகரிக்கும் கொள்கைகளை செய்யும் காரியங்களை ஒப்பு கொண்டு தானும் பின்பற்றுவதாக பாவனை செய்தல்.
ஒரு நாள் கழிந்தது கதையில்
முருகதாசரின் வறுமை நிலையை இப்படி விவரித்திருப்பார்
கோரைப்பாயை விரிப்பதே ஒரு கலை, நெடு நாள் உழைத்தும் பென்சன் கொடுக்கப்படாததால் நடு மத்தியில் இரண்டாக கிழிந்து ஒரு கோடியில் மட்டும் ஒட்டி கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறி தரையில் போட்டு விட்டு கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளை சேர்த்து பொருந்த வைக்க வேண்டும், பொருந்தா கோரப்பாய்கள் முதுகில் குத்தாமல் இருக்க அதன் மீது ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ போட்டு கொள்ள வேண்டும்.
வழி என்னும் கதையில்
இளமையில் விதவையான ஒரு பெண் விரகதாபத்தின் புலம்பலாக:
வெள்ளைக்காரன் ஒரு முட்டாள் “சதியை” நிறுத்தி விட்டதாக, அதை இந்த முட்டாள் ஜனங்கள் பேத்துகிறார்கள். ஆனால் வாழ்க்கை முழுவதும் “சதியை” அனுபவிக்க வேண்டியிருக்கிறதே, வைதவ்யம் என்றால் அவனுக்கு தெரியுமா? ஓவ்வொரு நிமிசமும் நெருப்பாக தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்.
என் கதைகளும் நானும் கட்டுரையில்
நல்லதும் சோடையுமாய் இரு நூறு கதைகள் எழுதி விட்டு அப்புறம் கதையின் தராதரத்தை பற்றி கவனிப்பது எழுதினவருக்கு ஒரு ரசமான பொழுது போக்கு.
என்னுடைய கதைகளை ஒரு சாரார் பாராட்டும் பரவசமும், மற்றொரு சாரார் பலத்த மனப்பூர்வமான கண்டனம் தருகிறார்கள். ஒரு இரசிகர் “இந்த மனிதன் எப்பொழுது கதை எழுதுவதை நிறுத்தி கொள்ளப்போகிறான்? ஆவலுடன் கேட்டார்.
உங்கள் கதை கட்டுரை
மனிதன் இயற்கையின் சிகரம். அவனிடம் தான் அறிவு என்ற ஒரு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது
மனிதன் தன் சந்ததி நசித்து போகாமல் இருப்பதற்கு கூட்டத்தில் நம்பிக்கை வைத்தான்.
அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் மனித வர்க்கம் எத்தனை நாள் சக்கையை பிடித்து கொண்டிருக்க முடியும்?
வீரர் வழிபாடு சமயமாகி, மனிதரின் சித்தத்தை கட்டுப்படுத்தியது. ராஜபக்தி என்ற பித்தமும், சமய நெறி என்ற போதையும் இதன் விளைவுகள்.
கடவுளின் கனவும் கவிஞனின் கனவும்- கட்டுரை
ஒரு பக்தன் அவன் கவிஞன், கலைஞன், உலகத்தை விட்டுவிடுவது, பந்தத்தை களைவது என்பதெல்லாம் சாதாரண மனித உணர்ச்சி. மனித பிறவி வேண்டாம் என்று சொல்வது எளிது, ஆனால் மனித பிறவியின் அவசியத்தை இப்படி பாடுகிறான், எதற்காக?
‘குனித்த புருவமும் கொவ்வைசெவ் வாய்
குமிழ் சிரிப்பும்
மனித பிறவி வீண் என்று அழுவதில் அர்த்தமில்லை. மனித பிறவி எடுக்காவிட்டால் நடராஜ விக்கிரத்தின் கலையழகை அனுபவிக்க முடியுமா?
இதய துடிப்பின் பேச்சு கட்டுரை
மனிதனின் கனவுகள் வடிவம் பெறும்போது அது கலையாகிறது. அது நடைமுறை உண்மைக்குள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.
கலை தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை, ஒழுக்க நூலை இயற்ற வரவில்லை. உடற்கூறு நூலை எடுத்து காட்ட வரவில்லை. ஆறு தலை உள்ள சுப்ரமணியனும், பத்து தலை இராவணனும் உடற்கூறுக்கு பொருத்த மற்றவையாக இருக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை இலட்சியத்தை உணர்த்த கூடியது கலை.
பஞ்சமோ பஞ்சம் கட்டுரை
கவிராயர்களுக்கும் தரித்திரத்திற்கும் எக்காலத்திலும் நீங்காத நட்புரிமை உண்டு.
ஒரு சமயம் கவிராயர் ஒரு ஊருக்கு வந்த அரங்கன் என்னும் வள்ளலை பார்க்க வந்த போது, அவரிடம் பிச்சைக்காரர்கள் முண்டியடித்து கையேந்தி கொண்டிருக்க, கவிராயரும் அவ்விடம் நெருங்க, அந்த பிரபு அந்த நேரம் “அடே பறக்காதே” என்றார். வந்தவருக்கு தூக்கி வாரிப்போட்டது.
பொக்கு பறக்கும் புறாப் பறக்கும்
குருவி பறக்கும், குயில் பறக்கும்
நக்குப் பொறுக்கிகளும் பறப்பார்
நானேன் பறப்பேன் என்றார்.
அப்பொழுது அவரது “வயிற்றாழ்வார்” (வயிறு) ஆத்மபுத்தியில் குட்டு விட சட்டென கவிதையால் புகழ ஆரம்பித்தார்
…..நராதிபனே
திக்குவிசை செலுத்தியுயர்
செங்கோல் நடாத்தும் அரங்கா நின்
பக்கமிருக்கு ஒரு நாளும்
பறவேன் பறவேன் பறவேனே
அவனை வானளவ புகழ ஆரம்பிக்கிறார்.
இன்னும் நிறைய கதைகளிலும், கட்டுரைகளிலும் அவரது கேலியும் கிண்டலுமாய் முரணாய் காட்சிகளை நகர்த்தி சென்றுவிடுகிறார்.
எனது பார்வையில்:
இன்றளவும் இலக்கிய உலகில் சூடான விவாதங்களை உருவாக்கும் வல்லமை படைத்தது இவரது படைப்புக்கள் என்பதை மறுக்க முடியாது. அவரது கதைகளில் வரும் கருத்துக்கள் சட்டென சாட்டையை விசிறிவிட்டு நகர்ந்து தன் போக்கில் சென்று விடும் லாகவம்.
அந்த சாட்டை வீச்சு யாருக்கு என்பதை சுட்டி காட்டியும், கதையை, அல்லது கட்டுரையை நகர்த்தி சென்று விடுகிறார்.