கோற்றருதல் தேன்புரிந் தியார்க்குஞ் செயலாகா - சிறுபஞ்ச மூலம் 26

நேரிசை வெண்பா

வான்குரீஇக் கூடரக்கு வாலுலண்டு கோற்றருதல்
தேன்புரிந் (தி)யார்க்குஞ் செயலாகா - தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன வென்னாரொ ரோவொருவர்க்
கொல்காதோ ரொன்று படும் 26

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

தூக்கணங் குருவியினாற் கட்டப்பட்ட கூடும், பேரெறும்புகளால் செய்யப்படும் அரக்கும், தூய உலண்டு என்னும் புழுக்களால் நூற்கப்பட்ட நூலும், கோற் புழுவால் செய்யப்படுவதாகிய கோற்கூடும், தேனீக்களால் திரட்டப்பட்ட தேன் பொதியும் ஆகிய இவ்வைந்தும் விரும்பி எவர்க்கும் செய்தல் முடியா; ஆதலால், ஒவ்வொருவர்க்கு குறையாது ஒரோவொரு அருமையாகிய செய்கை உண்டாயிருக்குமாதலால், எல்லாங் கற்ற வல்லவரும் தாம் விரும்பி் நமக்கிவை வாய்ப்பாகச் செய்யலாமெனக் கருதமாட்டார்.

கருத்துரை:

வான் குருவிக்கூடு முதலியவன்றறைச் செய்தற்கருமை கருதி அவற்றை எல்லாங் கற்று வல்லவரும் செய்யலாமென்று மனத்தினுங் கருதார் என்றது.

வான்குருவி – தூக்கணாங்குருவி; இது பற்பல நார்களைக் கொண்டு விசித்திரமான கூண்டுகளைப் பின்னுவதில் தேர்ந்தது! அரக்கு – செம்மெழுகு; இச்செய்யுளால் தற்பெருமை பேசுதல் கூடாது என்பது பெறப்படும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-25, 1:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே