முத்தொள்ளாயிரம் சேரன் 13 நேரிசை வெண்பா

முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
புகலு, கழலு - ஓசை ஒன்றுவதால் இதனை முன்னோர் குறில் எதுகை என்றும்
அல்லது அகர எதுகை என்றும் உரைப்பர்!

நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
ஊரிரே என்னை உயக்கொண்மின் - போரிற்
புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்
கழலுமென் னெஞ்சங் கிடந்து! 13

பொருளுரை:

இதுவும் தலைவி கூற்று.

போரை விரும்பும் கள்ளுண்டு களித்த யானைப்படைகளை யுடையவனும் பூழி நாட்டின் தலைவனாய் விளங்குகின்றவனும் ஆன சேரனிடம் யான் கொண்ட வேட்கை நோயால் என் நெஞ்சம் செயலறியாது துன்புற்று வேகின்றது;

நீரும் நிழலும் தம்மையடைந்தார்க்கு எல்லாம் வெப்பத்தைப் போக்கிக் குளிர்ச்சி தருவதுபோலப் பிறர் துன்பம் நீக்கும் மிகுந்த அருளுடைய ஊர்மக்களே! என் துயர் நீக்கி என்னை உயிர்வாழச் செய்யுங்கள். (இவ்வாறு தலைவி வேண்டுகிறாள்)

புகலும் - விரும்பும், “ போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” எனச் சங்க இலக்கியத்துள்ளும் வந்துள்ளமை காண்க.

பண்டைக்காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரும் அதன் சுற்றுப் புறங்களும் ‘செந்தமிழ்நாடு’ என்றும் தமிழ் வழங்கிய பிற நிலப்பகுதிகள் ‘கொடுந்தமிழ்நாடுகள்’ என்றும் வழங்கப்பட்டன.

அவை தென்பாண்டி நாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவட தலை நாடு, சீதநாடு, மலையமான் நாடு, புனல்நாடு என்பனவாம்.

அவற்றுள் பூழிநாடு என்பது பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைக்கண் அமைந்து ஒரு காலத்தில் பாண்டியர் ஆட்சியிலும் ஒரு காலத்தில் சேர மன்னர் ஆட்சியிலுமாக மாறி மாறி இருந்திருத்தல் வேண்டும். அதனால் இருவருமே “பூழியர்கோ” எனப் பாடப்பட்டுள்ளனர்.

“பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்” என்பதில் பாண்டியனைக் குறித்தல் காண்க.

கோதை - சேரன்; அழலும் - வேகும்.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (18-Jul-25, 3:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே