துபாய்ல இருந்தவன்
ஊருக்கு போயிருந்த போது,எதேச்சையாய் டைலர் மாமாவை சந்திக்க நேர்ந்தது.பல வருடங்களுக்கு பிறகு.
[அவர் கடை,ஆற்றாங்கரை ஓரமாக,ஆல மரத்தடியில் இருந்தது.ஓலை குடிசையாக இருந்தாலும்,உள்ளே அழகா டெகரேசன் பண்ணி வைத்திருந்தார்.
பள்ளிப்பருவத்தில்,அவர் கடை வாசலில் நின்று தான்,
ராமராசன் பாடல்கள் கேட்டு மகிழ்ந்தோம்.]
ஆத்து பாலத்து டீக்கடையில் ,டீயை ஆட்டி ஆட்டி ருசித்துக்கொண்டிருந்தவரிடம்,
வண்டியை நிறுத்திவிட்டு ,வாசனை பாக்கு வாங்க போன நான் ,வசமாக மாட்டிக்கொண்டேன்.
''மாப்ள..எப்படிடா இருக்கே..முன்ன மாதிரி கதை கழுதைன்னு இப்பவும் திரியிறியா ? இல்ல,
குடும்ப பொறுப்போடு இருக்கியா ?'' என்றார்.
[அவர் கடை வாசலில்,அதிகாலையில் வந்து விழுந்த ஒரு வாரமலரில் தான்,எனது முதல் கவிதை பிரசுரமாகியிருந்தது.]
அவரிடம் பெரிதாய் கதையளக்க விரும்பாமல்,
''பத்து வருசமா துபாய் ல இருக்கேன் மாமா.''என்றேன்.
அவரால் நம்பவே முடியவில்லை.
என்னை மேலும் கீழும் பார்த்தார்.
நான்,எப்பவும் போல ,பழைய பேண்டும்,சட்டையும் போட்டிருந்தேன்.
கையில்,கறுப்பு வெள்ளை டிஸ்பிளே உள்ள பழைய மொபைல்.
[அவர்,'வெற்றிக்கொடி கட்டு 'படத்தில் வரும் ,துபாய் ரிடர்ன் வடிவேலு மாதிரி ,எதிர் பார்த்திருப்பார் போலும் ]
''என்னடா மாப்ள சொல்றே..உம் மூஞ்சிய பாத்தா,
துபாய்ல இருந்தவன் மாதிரி தெரியலையே..ஏதோ,
பாட்டெழுத சென்னைக்கு ஓடி,அவமான பட்டு,தோத்துபோய் ,ஊருக்கு ஓடிவந்தவன் மாதிரில இருக்கு '' என்றார்.
நான்,''ஹிஹி ''என்று சிரித்து,
''நான் அப்படிப்பட்ட ஆளு தான் மாமா '' என்றேன்.