ஒப்பீடு செய்வது ஒரு நோயாகும் - மன நலம்
பிறருக்கு கிடைப்பது தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்கிற ஒப்பீட்டுப் பார்வையானது வளர்ச்சிக்கு வழிவகுத்தால் அதனை வரவேற்கலாம். மாறாக பொறாமை, அவ நம்பிக்கை, தாழ்வு மனப்பான்மையை கொண்டு வருகிறதென்றால் எவ்வளவு விரைவாய் ஒப்பிடும் குணத்தை நம்மிடமிருந்து அகற்ற முடியுமோ அத்தனை விரைவாய் அகற்றுதல் அவசியமாகும்.
பிறருடன் ஒப்பிடும்போது தம்முடைய நிலையும், செயல்பாடுகளும் உன்னதமாய் இருந்தால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பெருமை கொள்ள வைக்கிறது. சில நேரங்களில் கர்வத்தையும் வரவழைத்து விடுகிறது.
அதேநேரம் தம்மை பிறருடன் ஒப்பிடுபவர்கள் அவரைவிட தான் தாழ்நிலையில் இருப்பதாய் மனதிற்குள் ஓர் எண்ணத்தை கொண்டுவிட்டால் மிகவும் சோர்ந்து போகிறார்கள். மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாது, தான் ஒப்பிட்டுப் பார்க்கும் நபரை தம்முடைய எதிரியாகவும் கருதத் தொடங்குகிறார்கள்.
தேவையில்லாமல் அவரை வெறுக்கவும் அவர்தான் ஏதோ தம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பதாய் உண்மைக்கு மாறாக ஒரு பதிவை ஏற்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள்.
அவருடைய வளர்ச்சி அனைத்துமே தம்மிடமிருந்து பறிக்கப்பட்டு வந்தவை என்று எண்ணுவதோடு மட்டுமின்றி பல நேரங்களில் அவதூறாய் அவற்றை பிறரிடத்தில் பரப்பவும் செய்கிறார்கள்.
நாம் எல்லோருமே ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவர் என்கின்ற உண்மையை பெரும் பாலும் பலர் உணர்வதேயில்லை. ஒவ்வொருவருடைய ஆசைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள், முயற்சிகள், சூழ்நிலைகள் அனைத்துமே மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. ஒரே குடும்பத்தில் உறவுமுறையாய் வாழ்பவராய் இருந்தாலும் உயிர் நண்பர்களாய் இருந்தாலும்கூட இதுதான் உண்மை.
நம்மை பிறருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது தீவிரமாய் போய்விடும்போது அது நம்மையே நாம் அவமானப்படுத்திக் கொள்வதாகும். மற்றவரோடு ஒப்பிடுவதால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.