சாகத்தானா பிறந்தோம்

ஆயுதமேந்தி கடவுள்களை வாழ்விக்கும்
கொள்கைவாதிகளே!
உங்களுக்கு எமது பிரியங்கள்

போதும் உங்களின் பராக்கிரமங்கள்
கிழிந்த சதையும் வழிந்த குருதியுமாய்
மானுடத்தை காட்சிப் படுத்தும் அக்கிரமங்கள்
போதும்....

சாகத்தான் பிறந்தோம்
அதற்குமுன்
சற்று வாழ்ந்து பார்ப்போமே...

யாருமற்ற இரவில்
விண்மீன் எண்ணித்
தோற்றுப்போங்கள்

மாலையில் பார்க்கத் தவறிய
பறவைக் கூட்டத்திற்காக
கவலைக் கொள்ளுங்கள்

கூழாங்கற்களோடு ஓடிமகிழும்
சிறு ஓடைகளில் கால் நனைத்து
சொர்க்கம் எய்துங்கள்

தண்ணீரில் தத்தளிக்கும்
எறும்புக்கு உயிர்கொடுத்து
பெருமைக் கொள்ளுங்கள்

தாகூரையோ, பாரதியையோ
வோர்ட்ஸ் வொர்த்தையோ
ஒருமுறையாவது சந்தியுங்கள்

துயரங்களால் செய்யப்பட்ட
உங்களின் ஆயுதங்கள்
ஒருபோதும் இன்பத்தை
அறுவடை செய்யாது ....

சாகத்தான் பிறந்தோம்
அதற்குமுன்
சற்று வாழ்ந்து பார்ப்போமே...

எழுதியவர் : மேரி டயானா (24-Nov-15, 12:51 pm)
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே