இருக்கை
அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பூங்காவில், ஒரு சில நேரங்களில் அனைவரும் தேடும் ஒரு பொருளாக நானாகத்தான் இருப்பேன். அனைவரும் அறிந்த என்னை இப்போது உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நான் பூங்காவில் இருக்கும் ஓர் இருக்கை. இந்த இருக்கையில் பலர் அவர்களது இருப்புகளையும் வெறுப்புகளையும் நாள் தோறும் பதிவு செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.அப்படிப்பட்ட ஒருவரின் நினைவுகளின் பதிவுதான் இது.
அவனை பல நேரங்களில் இந்த பூங்காவில் பார்த்திருக்கிறேன். எப்பொழுதும் ஒரு பூவை மன்னிக்கவும் (நானே குழம்பிவிட்டேன்) ஒரு பெண்ணைச் சுற்றி வந்து கொண்டிருப்பான். இன்று ஏதோ தனியாகவே வந்திருந்தான். யாரையோ எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தான். அநேகமாக அந்த பெண்ணுக்காகத்தான் இருக்கும். அவன் அந்த பெண்ணுடன் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை. இது வரை அந்த பெண்ணும் அவனை கண்டுகொண்டதாய் தெரியவில்லை. சிறிது நேரம் காத்திருந்தவன் கவலையுடன் எனதருகே வந்தான். என்மீது ஒரு பக்கம் அமர்ந்து மறு பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"உனக்குத் தெரியுமா அவளைப்பற்றி?" இது அவன்.
எனக்கே சந்தேகம் யாருடன் இவன் பேசிக்கொண்டிருக்கிறான்?
"நேற்று அவள் இங்குதான் அமர்ந்திருந்தாள்."
ஓ இவன் என்னிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறான். முத்திடுச்சினு நினைக்கிறேன், ம் அப்புறம்.
"அவள் நேற்று அமர்ந்த போதுகூட இந்த இடம் லேசாக்ததான் இருந்தது. இன்று ஏனோ சற்று கனமாக இருக்குது. ஏன் என்று தெரியுமா?"
கேள்விய கேட்டுட்டு அமைதியா இருந்தான். என்னால் பேச முடிஞ்சா ஏன்டானு கத்தியிருப்பேன்.
"ஏனென்றால் அவளுடைய நினைவுகளை இது சுமந்துகொண்டு இருக்குது. இன்று அவள் வரவில்லை என்று ஒரு வருத்தம் தான். இருந்தாலும் உன்னாள் அவள் நினைவுகள் மீண்டும் இன்பத்தை என் இதயத்திற்கு தருகிறது அவளை பிடிச்சிருக்கு. ஆனா ஏன் என்று காரணம் தெரியவில்லை. நானும் ஆறு மாதமா அவளை பின் தொடருறேன். ஆனா அவள் கண்கள் என்னை ச்சீ னு கூட பா்க்கவில்லை. ஆனா எனக்கு ஒரு நம்பிக்கை ஒரு நாள் என் அருகில் வந்து பேசுவாள்."
இந்த நம்பிக்கையில் தான் எல்லோரும் வீணா போறீங்க என்று நினைத்துக் கொண்டே திரும்பி பார்த்தால் அந்த பெண்ணும் அவளுடைய தோழியும் இவனை முறைச்சு பார்த்து கொண்டே இருந்தாங்க. அவன் நம்பிக்கை இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நினைக்கல. ஆனா அவனோ அத கண்டுக்காம என்கிட்டயே பேசிக்கிட்டு இருக்கான்.
"நான் யாரோ ஒருவன் தான் அவளுக்கு. ஆனா அவளுக்கு என்னை ஒரு நாள் பிடிக்கும்."
"எனக்கு எதுக்குடா உன்னை பிடிக்கனும்" இது அவள்.
போச்சுடா மாட்னான். அவன் சற்று பயந்து போய் சுதாரித்தவனாய்
" உனக்கு எதுக்கு என்னை பிடிக்கனும்?" இது அவன்.
" நீ இப்ப என்னை பற்றிதான பேசிக்கிட்டு இருந்த?" இது அவள்.
"இல்லையே".
"இல்லை எனக்குத் தெரியும். நீ என்னை ஆறு மாசமா பின் தொடர்ந்து வர."
அடிப்பாவிகளா தெரிந்தே சுத்தவிடீறிங்களா?
"இல்லை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க. உங்க வேலைய பாருங்க" இது அவன்.
அவளுக்கோ எதுவும் பேச வரவில்லை. கண்ணீர் துளிகள் அவளது இமையை காவுவாங்க காத்துக் கொண்டிருந்தது. அழாத குறை ஒன்றே. ஆமா இந்த பொண்ணு என்ன பதில எதிர் பார்க்குது என்று தெரியலயே. அவன் உன் பின்னாடிதான் சுத்தினேன் ஒத்துக்க சொல்லுது போல. சிறிது மெளனத்திற்கு பிறகு இமையைவிட்டு பிரியாத அந்த கண்ணீர் துளிகளுடன் அவனை பிரிந்து சென்றாள்.
அவனோ அவள் சிறிது தொலைவு சென்றவுடன் "ஆமாங்க. நீங்க சொன்னது உண்மைதான். உங்களை பிடிக்கும். நிறைய பிடிக்கும்..." இவன் சொல்வதை காதில் வாங்காதவள் போல் வேகமாக சென்று கொண்டிருந்தாள். இவனோ சோகத்தில் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம் அவள் இவன் இருக்கும் இடத்தை நோக்கினாள். அதுவரை எங்கு ஒளிந்து கொண்டிருந்ததோ அந்த வெட்கமும் புன்னகையும். அவ்வளவையும் அவள் முகத்தில் அள்ளிவீசவும் இவன் அதை பார்க்கவும் எனக்கே பொறாமையாகத்தான் இருந்தது. அவளது புன்னகையும் இவனது பார்வையும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்க நான் முடிவு செய்துவிட்டேன் வெகு விரைவில் இருவரும் ஒன்றாக வந்து என்னில் அமர்வா்கள் என்று. அதற்கான நாளை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்.... இருங்க புதிதாக யாரோ ஒரு பெண் என்னை நோக்கி வருகிறாள். அடடா இவளும் ஏதோ க(வி)தை சொல்ல போறா. இருங்க கேட்டுட்டு வந்து சொல்றேன்.... மீண்டும் சந்திப்போம்....

