தோழனுக்கு வாழ்வில் நம்பிக்கையின் மேன்மையை உணர்த்துதல்
சூழல் :
வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து ஒருவன் வாழ்கிறான். அவனுக்கு நம்பிக்கையின் தேவையை அவன் தோழன் எடுத்துரைக்கிறான்.
பாடல் :
நம்பிக்கை இழந்தவன் :
அன்பனே! என்றும் ஏமாற்றம்! எவற்றிலும் தோல்வி!
நகையை முகத்திலும் உவகையை மனத்திலும்
வலியை மெய்யிலு மிழந்து
வேட்கை யற்றுசீவிக் கிறேன்!
தோழன் :
சீவிக்கை யில்வேட்கை யற்றால்வாழ்வு தன்நரக மன்றோ?
மனத்திலே நம்பிக்கை யரும்பினால் இன்பம்தன்னில் பூக்குமன்றோ?
நம்பிக்கை இழந்தவன் :
(மன வெறுமையுடன்)
கானலி னால்தாகம் தன்னில்தீர்ந் துவிடாதே!
நம்பிக்கை, என்ற
வெற்றுமனச் சிந்தையால் வெற்றிவாயிலில் தோன்றிவிடாதே!
தோழன் :
செவிசாய்த் திடுவாயென் அருமை அன்பனே!
நம்பிக்கை,
ஐயமறு வெற்றிகிட்டி விடமந்திர மொன்றுமில்லை
தோல்விப் பிணியகற்றி டும்வையகத்தின் தனியொரு ஔடதமே!
நம்பிக்கை,
மானுடமனத் திலேவிளையும் நேர்பட்ட சிந்தையே!
பயிர்விளைத் திடும்தண் ணீர்போல
ஊக்கத் தினைமுளை வித்திடுமே!
தளிர் விட்டஊக்கத் தினால்
வினைக ளாயிரம் செயலாற் றிடுமே!
திறலி ன்கண் திட்பமாய் நகர்த்திடுமே!
அன்பனே! நம்பிக்கை,
தோல்வி யாழியிலே அகப்பட்ட திக்கரியா
சிந்தை புணைக்குதிசை மானியா யிருந்திடுமே!
சிரமுதல் பாதமீராய் மெய்யங்க மெல்லா
நன்னிலை கெட்டுப் போயினும்
நம்பிக்கை யென்றமனச் சிந்தை ஒன்றினாலே
ஊனம் நம்மைவிட்டு விலகிநின் றிடுமே!
நம்பிக்கையை மீண்டும் பெற்றவன் :
மதியால் மெய்மை அறிந்தே
சிந்தையில் நம்பிக்கை சுடரை
ஒளிரவிட்டேனடா அன்பா!
மானுடர் யாவரு மினி
சாத்தியங் கள்நிறைந்த இப்புவி வாழ்வினில்
நம்பிக்கை கோலை யூன்றிநடந் திடுவோம்!
சொற்பொருள் விளக்கம் :
நகை – சிரிப்பு
உவகை – மகிழ்ச்சி
வலி – பலம்
வேட்கை – ஆசை, Desire
சீவித்தல் – வாழ்தல்
அரும்புதல் – மொட்டுதல்
கானல் – தண்ணீர் போன்ற மாயை.
ஐயமறு – ஐயம்+அறு – சந்தேகம் இன்றி, உறுதியாக
பிணி – நோய்
ஔடதம் – மருந்து
நேர்பட்ட – Positive
ஊக்கம் – முயற்சி
தளிர் – முளைத்தல்
வினை – செயல்
திறல் – வெற்றி
திட்பம் – உறுதி
ஆழி – கடல்
திக்கு – திசை
புணை – கப்பல்
திசைமானி – திசை காட்டும் கருவி, Compass.
சிரம் – தலை
ஈர் – கடைசி
அங்கம் – உறுப்பு
மெய் – உடல்
மெய்மை – உண்மை
பாடல் விளக்கம் :
நம்பிக்கை இழந்தவன் :
நண்பனே! என்றும் ஏமாற்றத்தையும் எவற்றிலும் தோல்வியையும் காண்கிறேன். முகத்தில் சிரிப்பையும் மனத்தில் மகிழ்சியையும் உடலில் பலத்தையும் இழந்து வாழ்க்கையில் நாட்டமின்றி இருக்கிறேன்.
தோழன் :
வாழும் நாட்டத்தை நாம் இழந்துவிட்டால் வாழ்வு நரகமாகி விடாதா? நம் உள்ளத்தில் நம்பிக்கை மொட்டுவிட்டால் இன்பம் தானாக பூத்துவிடாதா?
நம்பிக்கை இழந்தவன் :
(மன வெறுமையுடன்)
கானல் நீரை பார்ப்பதினால் தாகம் தீர்ந்துவிடாது. அதுபோல நம்பிக்கை என்ற வெறும் மன எண்ணத்தால் வெற்றி நமக்கு வந்துவிடாது.
தோழன் :
நன்றாக கவனித்து கேட்டிடுவாய் என் தோழனே!
உறுதியாக வெற்றியை தந்துவிடுவதற்கு நம்பிக்கை ஒன்றும் மந்திரம் இல்லை. தோல்வி என்ற நோயை குணபடுத்தக் கூடிய ஒரே ஒரு மருந்து உலகத்தில் அதுவாகும்.
நம்பிக்கை
மனித மனங்களில் உருவாகும் நேரான சிந்தை. தண்ணீர் எப்படி பயிரை விளைவிக்கிறதோ அதுபோல முயற்சியை அது முளைவிற்றிடும். அப்படி உருவான முயற்சியினால் நாம் செயல்கள் பல புரிந்து வெற்றியை நோக்கி உறுதியாய் பயணித்திடுவோம்.
தோழனே! நம்பிக்கை,
தோல்வி என்னும் கடலிலே மாட்டிக் கொண்ட மனம் என்னும் திசைதெரியா கப்பலுக்கு திசையை வழிகாட்டும் கருவியாய் இருந்திடும்
தலை முதல் பாதம் வரை உள்ள உடல் உறுப்புகள் எல்லாம் செயல் இழந்து போனாலும் மனதில் நம்பிக்கை இருக்கும் வரை ஊனம் நம் அருகே வந்துவிடாது.
நம்பிக்கையை மீண்டும் பெற்றவன் :
உண்மையை அறிவால் உணர்ந்து கொண்டுவிட்டேன். நம்பிக்கை என்னும் தீபத்தையும் மனதில் ஏற்றி விட்டேன் தோழா!
மனிதர்கள் எல்லோரும் நம்பிக்கை என்ற ஊன்றுகோலைக் கொண்டு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் இவ்வாழ்க்கை பயணத்தில் நடந்திடுவோம்.