அரசியல் பண்பாட்டின் தோல்விச் சின்னம்

அரசியல் பண்பாட்டின் தோல்விச் சின்னம்

சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக அரசால் மோசமாக நிர்வகிக்கப்படுவதாக எஸ்.டி. மனோன்மணி தொடர்ந்த பொதுநல வழக்கில், எதிர்வரும் ஜூன் 30 -க்குள் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 15 அன்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
@@@@@
முதன்மை நூலகர் உள்ளிட்ட 50 ஊழியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, புத்தகங்களை இருப்பு வைப்பதில் உள்ள அலட்சியப்போக்கு முதல் கழிப்பறைகள், கணினிகளைப் பராமரிப்பதில் உள்ள குறைபாடுகள், அங்குள்ள சிசிடிவிக்கள் எதுவும் செயலபடாதது வரையிலான பலவிதமான குறைபாடுகளை மனுதாரர் நீதிமன்றத்தின் முன்பாகப் பட்டியலிட்டுள்ளார். அரசின் பதிலில் திருப்தி அடையாததால், இது தொடர்பாக விசாரிக்க இருநபர் ஆணையத்தை அனுப்பி உயர் நீதிமன்றம் அறிக்கை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் அமர்வு ‘இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் நூலகத்தில் இருப்பதாக’ அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 30 –க்குள் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.. இல்லையென்றால் நீதிமன்றமே நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
@@@@
தமிழகத்தில் 4,028 பொது நூலகங்களும் 12,620 ஊராட்சி நூலகங்களும் இருந்தாலும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழ் அறிவுலகத்தின் உச்ச பொக்கிஷம். 3.75 லட்சம் சதுர அடி பரப்பளவில், 9 தளங்களில் அமைந்திருக்கும் இது ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம். ஏறத்தாழ 12 லட்சம் புத்தகங்களை வைக்கலாம். இப்போது 5.5 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழ்ப் புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் 1.5 லட்சம்.
@@@
ஆக்ஸ்ஃபோர்டு, கேம்ப்ரிட்ஜ் பதிப்பகங்களின் முக்கியமான நூல்கள், உலக இணைய நூலகத்துடன் இணைக்கப்பட்டிருப்பது என அதற்குன் பல சிறப்புகள் உண்டு. சுருக்கமாகச் சொல்வதானால், இந்த நூற்றாண்டின் நவீன வசதிகளைக் கொண்டதாக உள்ள, அடுத்த நூற்றாண்டை நோக்கி நகர வாய்ப்புள்ள ஒரே நூலகம் இது.
@@@@
தமிழகத்தில் ஆட்சி மாறியதும் முதல்வர் ஜெயலலிதாவின் மாற்றப் பட்டியல்களில் அந்த நூலகமும் ஒன்றானது. குழந்தைகள் மருத்துவமனையாக அதை மாற்றப்போவதாக அறிவித்தார். அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. நீதிமன்றம் தலையிட்டது.. அதனைத் தொடர்ந்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது என்றாலும் நூலகம் மாற்றாந்தாய் மனநிலையோடு பராமரிக்கப்படும் குழந்தையாக மாறிப்போனது.
@@@
கடந்த 5 ஆண்டுகளில் அண்ணா நூலகத்தின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இது தொடர்பாகப் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது. எனினும் பெருமளவில் வேலைக்கு ஆகவில்லை. இத்தகைய சூழலில்தான் அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்காவிடில் நீதிமன்றமே நூலகத்தின் நிர்வாகத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளும் என்று எச்சரித்துள்ளனர் நீதிபதிகள்.
@@@@
நூலகங்கள் ஒரு இனத்தின் பண்பாட்டுச் சின்னங்கள். ஒரு சமூகம் அடைந்துள்ள நாகரிகத்தின் அளவுகோல்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் அவை போற்றப்படவேண்டும்., பாதுகாக்கப்படவேண்டும். ஆனால் தமிழகத்தில் அப்படிப்பட்ட அரசியல் சூழல் இல்லை. எவ்வளவு மாசுப்பட்டதாக அரசியல்சூழல் மாறிவிட்டது என்பதற்குப் பெரிய உதாரணமாகியிருக்கிறது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு. ஒரு சமூகம் அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் அடைந்திருக்கும் தோல்வியும் அவமானமும் இது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி: ‘தி இந்து’ தலையங்கம். ஏப்ரல் 19, 2016
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@அச்சுப் பிழைகள் இருப்பின் அதற்கு நானே பொறுப்பு.

எழுதியவர் : தி இந்து தலையங்கம் (21-Apr-16, 5:33 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 325

மேலே