ஆதிபராக் பராக் பராக்
ஓரு ஞாயிறு காலை.. தமிழகத்தின் பெரிய மாநகராட்சி.. மிகவும் பரபரப்பான பகுதி காந்தி தெரு.
அந்த சிறிய டீக்கடை நோக்கி வந்து நின்றது ஒரு 2008 Model Unicorn.
”Helmet கண்டிப்பா போடனும்னு சொல்லிட்டாங்க, எவ்ளோ தொல்லை” என நினைச்சுட்டே helmetடை கழட்டி கண்ணாடி standல மாட்டிட்டு, அவன் கடையை அடைந்தான்.
கிட்டத்தட்ட 30 வயசு, 6 அடி உயரம்... அளவான உடம்பு, correctஆன முடி, செதுக்கிய மீசை, இரண்டு நாள் தாடி, branded T-shirt Jeans, ஆளும் tip top...
தமிழ்நாட்டுல யாராயிருந்தாலும் சொல்லிடுவாங்க இவன் ITல வேலை செய்றவன்னு.
“அண்ணே!! ஒரு strong டீ.. extra sugar” சொல்லிட்டு.. ஒரு பஜ்ஜி எடுத்து கடித்தான். ஆளு புதுசா இருக்கேனு நினச்சுட்டே டீய போட்டாரு கடைக்காரர்.
“சே !!! டீயா இது.. நம்ம areaலேயே குடிச்சிறுக்கலாம் போல.. என் நிலமை.. என்ன பண்றது" மனசுக்குள்ள நினச்சுட்டே இரண்டாவது மடக்கு முடித்து அவருகிட்ட பேச்சு கொடுத்தான்.
“அண்ணே !!! இந்த ஏரியாவுல யாராவது ஆதினு தெரியுமா..? “
“Adhaar card, ID card யதாவது இருக்காப்பா .. ?" அவர் கேட்க..
அவன் புரியாமல் முழிப்பதை பார்த்துட்டு..
“ஏம்பா Madrasல எவ்ளோ பேரு இருக்காங்க.. அதுல எவ்ளோ ஆதி இருப்பாங்க…? தா பாரு அந்த தட்டு கழுவுற பையன் பேரு கூட ஆதி தான்.”
தலையெழுத்து இவன் எல்லாம் கலாய்க்கரான்……”இல்லண்ணே !.. ACID ஆதி னு சொன்னாங்க .. உங்களுக்கு தெரியுமா? “
நக்கலா பேசிட்டு இருந்தவர் tension ஆகுறத பார்த்தவன்...சிறிது நம்பிக்கை இழந்தான்…சற்று யாராவது கவனிக்கறாங்களான்னு பார்த்துட்டு, “தம்பி.. டீ க்கு 8 ரூபா..பஜ்ஜி க்கு 4லு….12 ரூபா குடுத்துட்டு நீ கெளம்பு "
“என்னண்ணே சொல்றீங்க..?????”
“என் பொழப்ப கெடுத்துராத… நீயும் வேற யார்ட்டியும் இப்புடி கேட்டுராத .. உசுரு போயுரும்..எங்க வந்து யார கேக்குற? கிளம்பு மொதல்ல..” டீக்கடை tension ஆகுறத பார்த்துட்டு இதுக்கு மேல வேலைக்காகாதுன்னு காசை குடுத்துட்டு கிளம்பினான்.
இதோட 8வது இடம்..எல்லா பக்கமும் ஒரே பதில்.. வந்த கடுப்புல button start வண்டி ஒரே உதைல start ஆயுடுச்சு….
“ஆதி.. ஆதி ..ஆதி “ என பின்னால் கத்துவது அவனுக்கு கேட்கவில்லை.. உபயம் Bike. அவ்ளோ முறுக்கி போயுட்டு இருந்தான் + helmet; இது தவற பக்கத்துல இருந்த பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி பாட்டு 100 decibel..அப்பறம் எப்படி?
மார்க் மறுபடியும் ஆதினு கூப்பிடும் போது correctஆ அதே டீ கடை முன்னாடி இருந்தான்… கடைக்காரருக்கு முஞ்சில ஈயாடல.. "தம்பி ! நீ யார கூப்புடற?"
“தோ.. இப்போ..bikeல கிளம்பி போனான்ல அவனதான் !!.. கூப்டது காதுல விழல போல…”
“யாருப்பா அவரு...?”
“என்னோட வேலை செய்றவண்ணே! ஆதிநாராயணன்.. இங்க அவனுக்கு என்ன வேலைனு தெரியலயே...”
அதிர்ச்சி மாறாம அவர் அவன் கிட்ட வந்து “அவன் எதுக்கு ACID ஆதி ய பத்தி விசாரிக்கரான்......??”
மறுநொடி அதிர்ச்சி மார்க் மூஞ்சில paste ஆயிடுச்சு!
✤✤✤✤✤✤✤✤✤
ஆதிநாராயணன் வாழும் apartment.. Bike park பண்ணிட்டு … Liftக்கு போற வழில எதிர் flat அக்கா.
“என்ன.. நாலு நாளா வேல அதிகமா?“
“ஏங்க்கா….?”
"பாக்கவே முடியலயேன்னு கேட்டேன் … அப்பறம், சாய்ந்தரம் கிருஷ்ண ஜெயந்தி பூஜை, வீட்டுக்கு வாங்க…”
சரியென தலையாட்டி நடக்க இருந்தவனை அடுத்த வார்த்தை உறையவைத்தது..
“2 நாளுக்கு முன்னாடி night உங்க flatல ஏதோ உடையற மாதிரி சத்தம் கேட்டுச்சுன்னு அவர் சொன்னாரே, என்னாச்சு?”
மனதிற்குள் சற்று தடுமாறினான்… டக்குன்னு சமாளிச்சுட்டு... “அது ஒண்ணுமில்லக்கா... Action படம் பாத்திருப்பேன்...அது அப்டி கேட்டுருக்கும்"..
அடுத்த கேள்விக்கு காத்திராமல் Lift நோக்கி நடந்தான்.
சே..., ஓடினான்.
வாழ்க்கை மேல இருந்த கோவத்தை.. கதவ சாத்துறதுல தான் காட்ட முடிஞ்சுது அவனால...
நல்ல interior, நேர்த்தியான அழகான வீடு, ஆனா ஒரே இருட்டு.
சென்னை பகல், சுட்டெரிக்கும் வெயில் இருந்தும், அதை தடுக்கும் அளவுக்கு ஜன்னல்கள் curtains போட்டு மறைக்கப்பட்டிருந்தது.
அவனுக்கு ரூம் மட்டுமல்ல எதிர்காலமும் சூன்யமாகவே தெரிந்தது.
Night Lampஐ போட்டு sofaல விழுந்தான்… ரெண்டே ரெண்டு நொடி நல்ல நிதானமா மூச்சு விட்டான்.. திடீரென்று தலையில் அடித்துக் கொண்டான். “சே!.. வர்ற வழியிலேயே Ice water வாங்கிட்டு வரனும்னு நினைச்சேன்.. tensionல மறந்தாச்சு.."
Kitchen இங்க தான் இருக்கு...Fridgeம் இருக்கு. ஆனா அங்க போகனும்னு நினைச்சாலே கடுப்பா இருந்தது அவனுக்கு. என்ன செய்யலாம்ன்னு யோசிக்கும் போது, தூக்கி போடுற மாதிரி கதவை பட படவென யாரோ தட்டினார்கள்.
200 பேரு மூஞ்சி 1 நொடி கண் முன்னாடி தெரிஞ்சுது.. இடி இடிக்கும் போது கூட கொஞ்சம் gap இருக்கும்..அது கூட இல்ல.. யோசிக்க கூட நேரம் குடுக்காம கதவு படபடத்தது…
வேற வழியில்ல..சரி யாருன்னு பார்க்கலாம்னு viewing holeல பார்த்தா..எந்த நாதாரினு தெரியல அது மேலயே தட்டுறான்… சை! .. “ஆதி ஆதி" னு வேற கூப்டுறான்… குரல் கூட ஏதோ தெரிஞ்ச மாதிரி இருக்கு ஆனா roommate இல்ல அவன் வர 1 மாசம் ஆகும்னு சொன்னானே.. சரி என்ன ஆனாலும் திறக்கலாம்ன்னு திறந்தா.......
நின்னது மார்க் !!
பெரு மூச்சு இல்ல......... பெரிய மூச்சாவே வந்துச்சு!
“ஏன்டா...எவ்ளோ நேரம் தட்டுறது....? நகருடா..." என கதவைத் தாழிட்டவன் கேட்டான் " நீ எதுக்கு ACID ஆதிய பத்தி விசாரிச்சுகிட்டு இருக்க???? "
"...."
"சொல்றா...எதுக்கு எங்க எரியாவுல விசாரிச்ச!!!!???"
"...."
"கேக்கறன்ல... சொல்றா", கோபத்துடன் எரிச்சலும் சேர்ந்தது அவனுக்கு.
இவன்கிட்ட சொல்லலாமா....? என்ன சொல்றது? எப்படி சொல்றது? சொல்லித்தான் ஆகணுமா? சொன்னா reaction எப்படி இருக்கும்...? சிக்கல் பெருசு ஆகுமோ? இல்ல ஏதாவது help கிடைக்குமோ.. ? ஆனா இவன் நிதானம் அந்த அளவுல இல்லையே!!!
இவ்ளோவும் ஓடிட்டு இருந்தது ஆதிக்கு.
“டேய்...!!! நான் கத்திட்டு இருக்கேன்ல.. அவன் யார்னு தெரியுமா? இதுவரைக்கும் அவன் பண்ண கொலை மட்டும் 23 டா.. மத்தது எல்லாம் கணக்கேயில்ல.. “
அவன் சொல்லுவதில் கொஞ்சம் அக்கறை இருப்பது போல ஆதிக்கு தெரிந்தது.. அவனுக்கும் 3 நாளாய் tension.. யார்கிட்டயாவது சொல்லனும் போலத்தான் இருந்தது.. மதில் மேல் பூணையாய் நின்றான்.
"இது வேலைக்காகாது.....டேய் .. Fridge எங்கடா? உன்னோட கத்தி கத்தி தொண்ட வறண்டே போச்சு..” அவன் kitchen நோக்கி திரும்ப இவன் கலவரமானான்.
ஒரு நொடி யோசித்து..“டேய் இருடா சொல்றேன்.. உக்காரு..”
“மொதல்ல curtain open பண்ணு .. இல்ல lightஅ போடு…”
ஒரு சின்ன மெளனம்.. பின்பு ஆதியே சொல்ல ஆரம்பித்தான்.
“புதன்கிழமை.. கிட்டத்தட்ட 12 மணி இருக்கும்...நான் bedroomல தூங்கீட்டு இருந்தேன்.. தடால்னு ஒரு சத்தம்..அடிச்சு புடிச்சு ஹாலுக்கு வந்தா balcony கண்ணாடி கதவை ஒருத்தன் ஒடைச்சிட்டு் வர்றான்..” மார்க் முகம் இப்போ கோவம் tensionல இருந்து கலவரமா மாறுனதையெல்லாம் ஆதி கவனிக்கல, புதன்கிழமைக்கே போய்ட்டான்.
4வது மாடி.. அவன் எப்படி வந்தான்னு தெரியல.. அந்த நேரத்திலும் பயங்கரமா வேர்த்தது .. பயங்கரமா மூச்சு வாங்கினான்.. அழுக்கு...பரட்டை முடி பொதர் தாடி..பார்த்தாலே ஏதோ சரியில்ல.
ஆதிக்கு உள்ளார அள்ளுதான்...இருந்தாலும் ஒரு தைரியத்தில “டேய் யார்ரா நீ .. போடா வெளிய..!"
வந்தவன் அதுக்கு பயப்பட்ட மாதிரி தெரியல.."ச்ஷு.. கத்தாத.. அமைதியா ஒரு ஓரத்துல உக்காரு..உன்ன ஒண்ணும் செய்ய மாட்டேன்.... ம்ம்ம்ம்... போடா..போய் உக்கார்” தெனாவெட்டாய் சொன்னான்.
ஆனால் ஆதி பக்கத்து table மேல் இருந்த vaseஐ எடுத்து அவனை அடிக்க எத்தனித்தபோது.. கோவத்துடன்.. “டேய்.. நீ என்ன பெரிய Heroவா...??” என
கேட்டுக்கொண்டே அவன் தன் இடுப்புல இருந்த கத்திய எடுத்தவன், அவனை பயமுறுத்த குத்துவது போல கிட்ட வந்து..
“டேய்.. நான் யாருன்னு தெரியாம இப்டி பண்ற..நான் ஆதி..ACID ஆதி டா” ன்னு கத்திட்டே ஆவேசத்துடன் பாய்ந்தான்.
அதை கேட்ட ஆதிநாராயணன் கிண்டலாக.."நீ இப்போ பயமுறுத்தறியா இல்ல... பயப்படறயா ..??" என vaseல இருந்து கைய எடுத்தவன்.. ஒரு அடி பின்னால போய், இடது காலை தூக்கி அவன் கத்தி வைத்திருந்த கையை நோக்கி அடித்தான்.. கத்தி ஒரு மூலைக்குப் பறந்தது.. அடிவாங்கியவன், உடைந்த கதவுமேலே மோதி கீழ விழுந்தான்.. அவன் அந்த அடிய எதிர்பாக்கலை, அதன் வேகத்தையும்.
மறுபடியும் அதே அடி.. இம்முறை அந்த அடி தொண்டையில விழுந்தது..அவன் மூச்சு திணறி செத்து விழுந்தான்.
“டேய்.. என்னடா சொல்ற.. செத்துடானா.. என்னடா நீ......"
பேச்சும் அதிர்ச்சியுமாய் மார்க்…”நீ எப்டிடா???“
“இல்ல அது களரியோட first defencing step, but அவனை கொல்லறதுக்காக அடிக்கலடா நான்”
“போடா, இதை யார் நம்புவாங்க.. போலீஸ் கூட ஓகே..அவன் ஆளுங்க விடமாட்டாங்களே, அவுங்கள விடு. அவனையென்ன பண்ணுனே....?"
ஆதி அமைதியாய்..அவனை் kitchenக்கு கூட்டிட்டு போய் நிதானமாய் fridgeஐ தொறந்தான்.. பார்த்தவன் உறைந்தான்.
“டேய்.. அவனும் என்ன கொல்லனும்னு நினைக்கல..நானும் தான்..!
ஒரு 5 நிமிசத்துல நடந்த விபத்துக்காக, நான் என் வாழ்க்கைய கெடுத்துக்க விரும்பல....., அது தான், அவன் யாரு , அவன் background என்ன, யாரெல்லாம் இருக்காங்க, எப்டியெல்லாம் பிரச்சனை வரும்னு தெரிஞ்சுக்க தான் 3 நாளா அலையறேன்..." தொடர்ந்தான் ஆதி.
“அது சரிடா.. இப்போ இதை எப்பட்றா சமாளிக்க போறே...!!??”
“ம்ம்ம்... இனிமே தான் ‘பாபநாசம்' படம் பாக்கணும்..…..!!!!"
- முற்றும்