ஒரு நிமிடக்கதை -அதிசயம் நிகழும்
(தினமணிகதிரில் பத்தாம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கடந்த காலச் செய்தி....தகவல் தந்துள்ளவர் சிவகாசி த. நாகராஜன்....)
ராஜாஜி சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக இருந்த சமயம். சென்னையில் குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்கள் வற்றிவிட்டன. கிடைத்த நீரின் அளவும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போயிற்று.
சென்னையிலிருந்து மக்கள் வெளியேறிச் செல்வதற்கு ஏற்பாடுகளைச் செய்ய நேரிடலாம் என்பதையும் அதிகாரிகள் பரிசீலித்து வந்தனர். ஆனால் மக்களை வெளியேற்றும் யோசனையை ராஜாஜி ஏற்கவில்லை. அவர் வேறு கருத்தை வெளியிட்டார்.
` ஒரு குறிப்பிட்ட தினத்தன்று சென்னையைக் காப்பாற்றுமாறு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் ஆண்டவனை வேண்டிப் பிரார்த்தனை செய்யலாம்!` என்றார்.
சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ராஜாஜி கூறியதைக் கேலி செய்தார்கள். ஆனால் ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.
24 மணி நேரத்தில் சென்னை நகரில் மேகங்கள் திரண்டன. 3 தினங்கள் இடைவிடாமல் மழை கொட்டியது. நீர்த் தேக்கங்கள் நிரம்பின.
இந்தச் சம்பவம் நடந்தது மே மாதத்தில். பொதுவாகவே மே மாதத்தில் மழை பெய்யும் சாத்தியமே இல்லை. `மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்தால் அதிசயம் நிகழும்!` என்றார் ராஜாஜி.