அம்மா அன்பு அவள்
அம்மா அன்பு அவள்
மார்கழி மாதத்து பனி விலகி எதிர் வரும் மனிதர்கள் மெதுவாக தெரியும் காலை வேளை வேகமாக பெருமாள் கோவிலை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்த என்னை திரும்பிப் பார்க்க வைத்தது அந்த இனிமையான குரல். ஆண்டாளின் திருப்பாவையைத் தெளிவாகப் பக்தியுடன் பாடும் அந்த குரலுக்கு உரியவள் யார் என்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் மிக விரைவில் என்னை ஆட்கொள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வது பின் நோக்கி செல்ல மெல்ல குரல் வந்த திசையை நோக்கி கால் நடை போட்டது.
அந்த தெருவில் வாகனங்கள் இடமும் வலமுமாக நிற்க வைக்கப்பட்டிருந்தன.மெல்ல அவற்றைத் தாண்டி அந்த வீட்டின் முன் சென்றதும் சிறிய ஜன்னல் வழி அந்த முகத்தைப் பார்க்க முடிந்தது.சிறிய விளக்கில் கண்களை மூடி ஒவ்வொரு வரியாகத் திருப்பாவை அவள் வாயில் இருந்து வந்து கொண்டிருந்தது.என்னை அறியாமல் கண்களில் நீர் வழிய அந்த வரிகளை மனதில் வாஙகி நெகிழ்ந்து கொண்டிருந்த என்னை இரு சக்கர வாகனத்தின் ஒலிப்பான் இவ்வுலகிற்கு கொண்டுவந்தது .
நான் திரும்பிப் பெருமாள் கோயிலுக்குச் செல்ல ,அந்த இனிய குரல் மெல்ல மெல்ல காற்றினில் கரைந்திட என் மனம் ஒரு இனம் புரியாத தவிப்புடன் இருப்பதை உணர ஆரம்பித்தேன்.பெருமாளைத் தரிசனம் செய்த பின் மீண்டும் அந்த தெருவிற்கு செல்ல மனம் விழைந்தது.
அங்கு சென்றதும் நான் அங்கு கண்ட காட்சி மனதை உறைய வைத்தது .நான் ஜன்னலின் வழியே கண்ட அந்த இனிய குரலுக்கு உரிய பாவை வெள்ளையும் சிவப்பும் உள்ள ஒரு கம்புடன் வெளியே வந்தாள்.என் அதிர்ச்சி மீளும் முன்னே என்னை கடந்து அவள் செல்ல என்னுள்ளே நான் உடைந்து போனேன்.
மெல்ல உற்சாகமில்லாமல் வீட்டை நோக்கி நான் செல்ல ஆரம்பித்தேன்.வழி எங்கும் மனதில் ஒரு போராட்டம் இத்தனை அழகான குரலுக்கு உரியவள் இவ்வாறு கண்கள் பார்க்க முடியாதவளா!?
மனம் ஏனோ இதை ஏற்க மறுத்தது.கடவுள் இவ்வளவு கொடுமையான தண்டனை அந்த பெண்ணிற்கு கொடுத்திருக்க வேண்டாம் .வீட்டை அடைந்து கதவை தட்டினேன் -அம்மா வந்து கதவை திறந்தாள். என்ன முகம் ஒரு மாதிரியாக உள்ளது என வினவினாள் .ஒன்றும் இல்லை எனக்கூறி விட்டு மெல்ல என் அறையை அடைந்து உட்கார்ந்தேன்.
அம்மாவிடம் என்ன சொல்லவேண்டும் என்று மனதில் ஒரு ஒத்திகை செய்து கொண்டேன்.ஒவ்வொரு நாளைப்போல் அம்மா இன்றும் அதே கேள்வியைக் கேட்க - என்னடா இந்தவாரமாவது அந்த பெண்ணைப் பற்றிய தகவலை தருகிறாயா- பெண் பார்த்து தை மாதம் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றாள்.
அம்மாவின் ஆசை என் கல்யாணத்திற்குப் பிறகு காசி ,ராமேஸ்வரம் என்று சுற்றுலா பயணம் மேற்கொண்டு வரும் நாட்களை கழிப்பதாகும்.என்னிடம் அவள் இதை பலமுறை கூறியுள்ளார்.
வானொலியில் காலை நிகழ்சிகள் ஆரம்பமாயின.வணக்கம் கூறி ஒரு திருப்பாவை பாடலையும் அதன் கருத்தையும் இனிமையான குரலில் வர்ணிக்க அம்மாவிற்கு மிக பெருமை .கூடிய விரைவில் இந்த குரலுக்கு உரியவளை தன் வீட்டிற்கு அழைத்து வர .என் விருப்பமும் இன்று காலை வரை- பெருமாள் கோயிலுக்கு செல்வதற்கு முன் வரை அவ்வாறு தான் இருந்தது .
இப்பொழுது சிறிய தயக்கம் .மனம் ஒரு நிலைக்கு வரவில்லை.எப்படி நான் அவளை ஏற்று வீட்டிற்கு அழைத்து வருவது என யோசித்தேன்.
கண்கள் இல்லாமல் அவள் எவ்வாறு குடும்பத்தை -நினைக்க நினைக்க என்னுள் ஒரு பயம் ஏற்பட ,நினைவுகளை தவிர்த்து வெளியேற வழி அலுவலகம் என முடிவு செய்து ,அம்மாவிடம் விடை பெற்று, இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு
அலுவலகத்துக்கு பயணத்தை தொடங்கினேன்.
வழி நெடுக மனம் அவளையும் ,அந்த குரலையும் அசை போட்டது.
அலுவலகம் சேர்த்ததும் என் அறையில் நுழைந்ததும் ஒரு இயந்திர அடிப்படையில் நடந்தது .அலுவலகத்தில் அன்று அதிக ஆட்கள் இல்லை ,எல்லோரும் கடைசி மாதத்து விற்பனையில் தங்கள் நேரத்தை கழித்தனர்.என் அறையில் கையொப்பம் இட வேண்டிய கோப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
கோப்புகளை ஒரு நோட்டமிட்டு பின் கையெழுத்திட்டு அனுப்பும் வேலை இயந்திரமாக நடக்க, மனம் காலை நிகழ்வுகளை மீண்டும் ஆசை போட ஆரம்பித்தது.
அம்மாவிடம் எப்படி இந்த செய்தியை கூறுவது ,எப்படி ஆரம்பிப்பது என ஒரு ஒத்திகை பார்க்க மனம் விழைந்தது. அம்மா இந்த விஷயத்தை எவ்வாறு எடுத்துக் கொள்வார் ? ஏமாற்றத்தை அவரால் தாங்க முடியுமா ?
வீட்டில் என்ன பேசவேண்டும் என ஒரு தீர்வு இல்லாமல் வீட்டை அடைந்த போது,அம்மா யாருடனோ பேசி கொண்டிருந்தாள். அந்த பேசிக்கொண்டிருந்தவரின் முகம் பார்த்து ஆச்சரியமும் அதிசயமும் அடைந்தேன்.அந்த இனிய குரலுக்கு சொந்தக்காரி தான் அங்கு அம்மாவிடம் தான் வந்த விவரத்தை கூறிக்கொண்டிருந்தாள்.
நான் அம்மா வாயிலாக அறிந்தது அவள் மாலை நேரங்களில் பாட்டுச் சொல்லி கொடுப்பதாகவும் ,கண்கள் பாதிக்கப்பட்ட பள்ளியில் பாடம் பயில உதவும் "பிரைல்" முறைப் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றதாகவும், அவள் தான் ரேடியோவில் காலை நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதாகவும்.
அம்மா என்னிடம் அவள் சென்றதும் அவளை பற்றி ஒரு பெரிய
சொற்பொழிவே நடத்தினாள்.அவள் எவ்வாறு வாழ்க்கையை அமைத்து கொண்டு போராடி வெற்றி கொண்டு வாழ்கிறாள். அவளின் சேவைகளையும்,மனதையும் அறியும் ஒரு நல்ல குடும்பம் அவளுக்கு அமைய வேண்டும் என்றும் .சீக்கிரமாய் அவளுக்கு யாராவது கண்கள் தானம் செய்து அந்த பெண்ணை உலகத்திற்கு மேலும் நன்மை புரிய
ஊக்குவிக்க வேண்டும் என்றும் -இன்னும் கூறிக்கொண்டே ... சென்றாள்
எங்கும் எப்பொழுதும் என் மனதை வருத்திக் கொண்டிருந்த அந்த கண்களில் காட்சியில்லாத தேவதை என் கண் முன் பட்டாம் பூச்சியாக
இறக்கையுடன் பறப்பது தெரிந்தது.
அடுத்த நாள் வழக்கம் போல் காலையில் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் சென்று வேலையை கவனிக்கையில் மதியம் உணவிற்குப் பின் வந்த தொலைபேசி செய்தி என்னை உறைய வைத்தது- அம்மா கடைக்குச் சென்று வரும் வழியில் ஒரு விபத்துக்கு உள்ளாகி தனியார் மருத்துவ மனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் என்ற செய்தி தான் அது .
அலுவுலகத்தில் இருந்து உடனே புறப்பட்டு மருத்துவ மனையை அடைந்த பொழுது அம்மா "ஐ சி யூ" வில் இருப்பதாக கூறினர்.
அங்கு சென்று கண்ணாடி கதவு வழியே அம்மாவை நான் பார்த்த பொழுது கண்களில் வழிந்த கண்ணீரை நிறுத்த முடியவில்லை.
காலையில் அம்மாவிடம் விடை பெற்ற காட்சி திரும்ப திரும்ப படம் போல் கண் முன் தெரிய என்னைக் கட்டு படுத்த முடியாமல் முகத்தை மூடி அங்கிருந்த ஒரு பெஞ்சில்
அமர்தேன்.
சிறிது நேரத்திற்கு பிறகு டாக்டர் என்னைஅழைப்பதாக செவிலியர் கூற டாக்டர் அறையை நோக்கி நடந்தேன் .
அறையில் டாக்டர் கூறிய செய்தி எனக்கு மேலும் சோகத்தைக் கொடுத்தது. டாக்டர் அம்மாவின் தலையில் அடிபட்ட காயத்தால் மிகுந்த ரத்த போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ,அவள் நிலைமை இப்பொழுது மிகவும் மோசமாக உள்ளதாகவும் கூறி ,இனி அவர் பிழைப்பது மிகவும் கடினம், ஏனெனில் அவர் மூளைக்கு ரத்தம் செல்வது பாதிக்கப் பட்டதால், அவர் மீண்டும் சகஜ நிலைக்கு வருவது இயலாது எனவும் தெரிவித்தார்.
"இறைவா உன் சித்தம் இதுவானால்" என்று காலையில் கேட்ட பாடல் எங்கோ ஒலிப்பது போல் ஒரு பிரமை ...
டாக்டரிடம் செவிலியர் எதையோ தெரிவிக்க டாக்டர் என்னை பார்த்து தோளில் தட்டி ஆண்டவனிடம் பிராத்திப்போம் எனக்கூறி அந்த இடத்தை விட்டு அகன்றார்.
மனதை ஒரு நிலை படுத்தி "ஐ சி யூ" வை விட்டு நடந்தேன்.
அம்மாவின் அவயங்களை எடுத்து ,தேவையானவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு மீண்டும் அந்த பெஞ்சில் வந்து அமர்ந்தேன்.
ஒரு மணி நேரம் கடந்தது அம்மா தன் கடைசி நிமிடங்களில் சஞ்சரிக்கிறார் என்பதை கூறி என்னை அவரை காண பணித்தனர் . "ஐ சி யூ" வில் இருக்கும் அம்மாவிடம் சென்று நின்று ,தான் அந்த கண் காட்சியற்ற பெண்ணை மணப்பதாக உறுதியுடன் தெரிவித்தேன் . எனக்கு அம்மா முகத்தில் ஒரு புன்னகை தெரித்தது போல் ஒரு தோற்றம்.
அங்கு நிமிடங்கள் மௌனமாக கழிந்தன. டாக்டர் ஏதோ கூறுவது தெரிந்தது ஆனால் காதுக்கு அது எட்டவில்லை. மெல்ல "ஐ சி யூ" வை விட்டு வெளியே வந்து இவையெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா ? என மனம் ஏங்க சுமைகொண்ட மனமுடன் சோர்வுகொண்ட இதயத்துடன் அங்குள்ள சுவரில் தலை பதித்து கண் மூட ...
டாக்டர் என்னை த் தட்டுவது உணர்ந்து திரும்பினேன் , . அம்மாவின் அவயங்களை பெறப்போகும் மனிதர்களைப் பற்றிக் கூறி இவர்கள் மூலம் உன் அம்மா மீண்டும் வாழ போகிறார் என கூறினார் .
மறுநாள் எல்லாம் முடிந்தது ,டாக்டர் அம்மாவின் உடலை என்னிடம் ஒப்படைத்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் அந்த மருத்துவ மனைக்கு சென்ற பொழுது என்னிடம் நான் பார்த்த தேவதையை அறிமுகப்படுத்தி அவருக்கு என் அம்மாவின் கண்களை பொருத்தி இருப்பதாகவும் அவள் பரிசோதனைக்கு வந்துள்ளதாகவும் அறிவித்தார் .
அவள் என்னை பார்த்து சிரித்து விட்டு என் அம்மாவின் கண்களால் என்னை அவள் நோக்கியபோது ......என் அம்மா என்னை அன்புடன் பார்ப்பதை உணர்ந்து என்னை நான் மறந்தேன்.....
அம்மா அன்பு அவள் யாவரும் ஒன்று சேர அந்த கண்கள் கண்ணீர் சொரிந்தது ஆனந்தத்துடன் .....