நினைவுகள்
நினைவுகளை அழிக்க முடியுமா
அதன் தேவை தான் என்ன?
எங்கள் தெருவில் ஒருவன் வந்தான்
காலங்கடந்த நினைவுகளை கண்முன்னே அழித்து காட்டுவதாக சபதம் உரைத்தான்
அனைவரும் நகைத்தனர்.
ஆனால் பார்வையில் கூர்மையோடு அவன், "வேண்டுமானால் உங்களில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் அவர்கள் நினைவிலிருந்து என்னை இப்போது நீக்கிவிடுகிறேன்" என்றான்
அனைவரும் திகைக்க ஒரு இளைஞன் முன்வர அவன் நினைவுகளிலிருந்து அந்த மனிதன் தன்னை அகற்றி காட்டினான்
பின் அனைவரும் அவன் கூறியபடி அந்த சாதனத்தை வாங்கினர். "இதை உங்கள் தலையில் மாட்டிக்கொண்டு அழிக்க விரும்புவரின் அடையாளங்களை கூற வேண்டும்"
என அதை கையாள கற்றுக் கொடுத்தான்
ஒருவாரம் கழித்து மீண்டும் அவன் அந்த ஊருக்கு வருகையில் அனைவரும் அந்த சாதனத்தை மாட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் முகங்கொடுத்து பேசாது அவர்கள் தத்தம் நினைவுகளை அழித்துக் கொண்டிருந்தனர்.ஒருவரும் அவனை சீண்டவில்லை.
தன் கண்டுபிடிப்புக்காக கண்ணீர் சிந்தினான்.அழிக்கும் நினைவுகளால் மனிதன் கவலைகளற்று வாழலாம் என அவன் நினைத்தது எத்தகைய பிழை?
நினைவுகள் என்பது ஒரு மனிதனின் தடயங்கள் தானன்றி காயங்கள் அல்ல என்பதை உணர்ந்தான்.

