ஸ்மார்ட் பேபி
தாயின் வயிறு கிழிக்கப்பட்டு ஒரு குழந்தை வெளியேற்றப்படுகிறது.. பிறந்ததும் அதனுடைய மண்டையோட்டின் மெல்லிய பகுதியினூடாக சிறு துளையிடப்பட்டு அதனுடைய மூளையில் பிகோ தொழில்நுட்பத்தால் பதப்படுத்தப்பட்ட டைட்டேனியம் இழைகளினால் வேயப்பட்டு சிலிக்கோன் ஜெல் சிப் ஒன்று பொருத்தப்படுகிறது..
அதில் எதிர்காலத்தில் குழந்தை எவ்வாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், அதனுடைய வளர்ச்சி படிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அத்தனை தகவலும் எழுதப்பட்ட புரோகிராம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது..
அந்தக் குழந்தை எதிர் காலத்தில் எதுவாக வரவேண்டும் என்பதை பெற்றோரின் ஆசையும், அவர்களிடம் உள்ள செல்வமும் தீர்மானிக்கும்..
அதே நேரத்தில் புரோகிராம் செயற்படுவதற்கு துணைக்கருவியாகவும், இயற்கையாக உடலினுள் இருக்கின்ற பாகங்களின் இச்சையின்றிய செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் பெம்ன்டோ செல்களைக் கொண்ட அல்ட்ரா ஸ்மார்ட் பிலட் என்கின்ற இரத்தம் குழந்தைக்கு பாய்ச்சப்பட்டும். புதிய அல்ட்ரா ஸ்மாட் இரத்தம் பாய்ச்சப்பட்ட அடுத்த கனமே அதில் உள்ள பெம்ன்டோ செல்கள் இயற்கையாக உள்ள குருதிக்கலங்களினுள் ஊடுருவி எறும்புக் கூட்டம் போல ஒன்றுடன் ஒன்று மோதி உடலின் அத்தனை செயற்பாடுகளையும் தற்காலிகமாக சேமித்து மூளையில் உள்ள சிலிக்கோன் சிப்புக்கு பரிமாற்றிக்கொள்ளும்..
சிலிக்கோன் சிப் உடலுக்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் பெம்ன்டோ செல்கள் மூலம் அச்சுப்பிசகாமல் மிகத்துல்லியமாக செயற்படுத்தும்..
அந்த சிப் பொருத்தப்பட்டு மூன்று மாதத்தில் அது குழந்தையின் நரம்புத் தொகுதியோடு இயைபடைந்து செயற்பட ஆரம்பிக்கும்..
அவ்வப்போது ஏற்படுகின்ற சுகயீனங்களுக்கு தானாக உடலில் இயற்கையாக கிடைக்கின்ற இரசாயனங்களை பயன்படுத்தி அதுவாகவே மருந்துகளை தயாரித்துக்கொள்ளும்..
இனி குழந்தை சாதாரணமாக இயங்க வேண்டியதுதான்.. வளர்ந்து சிறுவனாகி.. பெரியவனாகி..
இப்படித்தான் நானும் பிறந்து வாழ்கிறேன். சென்ற வருடம் வரை எல்லாம் சரியாகத்தான்போய்க் கொண்டிருந்தது.. இப்போது எனது வாழ்க்கை போகும் திசை எனக்கு திருப்தியில்லை.. எனக்கு இப்படியான அழுத்துப்போன வாழ்கை பிடிக்கவே இல்லை.. நான் சாகவேண்டும் போல் ஆசையாக இருக்கிறது.. ஆனால் என்னால் முடியாது.. எனக்கு தற்கொலை தடைசெய்யப்பட்டிருக்கிறது..

