வீட்டுப்பாடம்

அம்மா,ம்மா..., என படுக்கையிலிருந்து எழும்போதே அம்மாவை கூப்பிட்டபடி எழுந்தான் சதாம், (90ல் பிறந்த அவனுக்கு ஈராக்-அமெரிக்கா யுத்தத்தின் நினைவாக அப்போதய ஈராக் அதிபர் சதாமின் பெயரை அவன் தந்தை வைத்திருந்தார்)அவன் தாயிடமிருந்து பதில் கிடைகாததால் மீண்டும் இன்னும் சத்தமாக ம்மா ஆ ஆ.... என கூக்குரலிட்டான்

மரத்தூள் அடுப்பில் புகைகுழலில் ஊதியபடி ,கண்களில் பட்ட புகையின் எரிச்சலை சமாளிக்க கண்களை சுருக்கியபடி என்னத்தா?..... என பதில் கொடுத்தாள் அவனுடைய அம்மா.
ம்மா இவன் இன்னைக்கும் டவுசர்லயே ஒன்னுக்கு போய்டான்ம்மா என தனது தம்பி ரபீக் மீது அன்றைய நாளின் முதல் புகாரை பதிவு செய்தான்.
இவன் போட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்தவனாக கண்களை கசக்கிக் கொண்டே மெதுவாய் எழுந்தான் ரபீக் , தூக்கத்தில் வாயிலிருந்து வடிந்திருந்த எச்சில் அவன் கன்னத்தில் படர்ந்திருந்தது, ரெண்டு பேரும் எந்திருச்சு பல் தேய்ங்க மதரஸாக்கு போகனும்ல என சொல்லிக்கொண்டே அவர்களருகில் வந்தாள் அவர்களது தாய் அஸ்மா. ஒரு நிமிடம் ரபீக்கின் கால்ச்சட்டையை கவனித்த அவள் மெல்லிதாக நகைத்தாள், அதை கவனித்த ரபீக், ம்மா நைட்டு குடிக்க வச்சிருந்த தண்ணி கொட்டிருச்சுமா என்றான், தினமும் காலையில் நடக்கும் வழக்கமான உரையாடல் இது.
இருவரும் கொசுவலையை விலக்கியபடி படுக்கையிலிருந்து வெளியே வந்தனர் , ரபீக்கின் வலதுகையில் பிரஸ்ஐ கொடுத்து கோபால் பல்பொடியில் கொஞ்சம் அவன் இடதுகையில் கொட்டினாள், பல் துலக்கி முகம் கழுவிவிட்டு வந்த இருவருக்கும் தேநீர் ஊற்றிக்கொடுத்தாள் அஸ்மா, தேநீர் அளவில் அவள் சமநீதியை நிலைநாட்ட வேண்டும் இல்லையென்றால் இருவருக்குமிடையே அங்கே மகாபாரத யுத்தமே நடக்கும்,இரண்டு டம்ளரையும் பார்த்துவிட்டு அதில் தேநீர் அதிகமாக இருந்ததாக தோன்றிய டம்ளரை எடுத்துக்குடித்தான் ரபீக்.
பின் இருவரும் மதரஸாவுக்கு புறப்பட்டனர் , அங்கே அவர்களுக்கு அரபி எழுத்துக்களும் சில இஸ்லாமிய பாடல்களும் கற்றுத்தரபட்டன..

அங்கிருந்து வீடு வந்தனர் வாசலில் தந்தையின் காலணி அவர்களின் உற்சாகத்தை மேலும் அதிகமாக்கியது, ரைஸ்மில்லில் இரவு வேலைக்கு சென்று திரும்பியிருந்தார் சுலைமான், இவர்களின் வருகைக்காக காத்திருந்தவர் இவகளிருவரையும் இரண்டு கைகளில் அள்ளிக்கொண்டார்......
அத்தா சத்துகாட்டுங்க என சதாம் கூற , சுலைமான் தன் கையை மடக்கி பலத்தைக் காட்ட இருவரும் அழுத்திவிட்டு கல்லுமாறி இருக்குத்தா என சிலாகித்தனர்.
அதற்குள் அஸ்மாவின் குரல் , சதாமத்தா சீக்கிரம் சட்டைய கழட்டிட்டுவா குளிக்கனும்...சுலைமான் குளிப்பதற்கு இருவரையும் தயார் செய்தார்...
குளித்து , காலை உணவை முடித்து பள்ளிக்குச் செல்ல தயாராகினர், அம்மா சிலேட்டு குச்சி தீந்து போச்சுமா என ரபீக் சொல்ல அலமாரியில் மறைத்து வைத்திருந்த சிலேட்டுக்குச்சியை எடுத்து பாதியா உடைத்து திங்க கூடாதுத்தா என்ற கண்டிப்புடன் இருவருக்கும் கொடுத்தாள்,
ரபீக் தன் பள்ளிக்கூட பையை எடுக்கும் போதுதான் கவனித்தான் அதில் சிலேடு இல்லை,ம்மா என் சிலேட்ட காணாம்மா என அழுகைக் குரலில் சொன்னான், டியுசன்ல விட்டுவந்துருப்பான் என சதாம் சொல்ல, ரபீகின் அழுகை ஆரம்பமாயிருந்தது வீட்டுப்பாடம் செய்யலன்னு டீச்சர் அடிப்பாங்க அத்தாவ பள்ளிக்கூடத்துல வந்து சொல்ல சொல்லுமா என்றான்,சரி சொல்றோன், நீயும் டீச்சர்ட்ட சொல்லு என சதாமிடம் சொன்னாள்.. பழைய சிலேடு ஒன்றை எடுத்துக் கொடுத்து இதை எடுத்துட்டு போத்தா என ரபீக்கின் கண்களை துடைத்துவிட்டு , இருவருக்கும் இருபத்தைந்து பைசா கொடுத்து பாத்துபோங்க எனச் சொல்லி பள்ளிக்கு அனுப்பிவைத்தாள். அஸ்மா சமாதானம் செய்தாலும் ரபீக்கின் பயம் தீரவில்லை , தேன்மொழி டீச்சரின் அடி அப்படி...
பள்ளியை நெருங்கும் போதே "நாலஞ்சா இருபது" என வாய்ப்பாட்டுச் சப்தம் ஒட்டுமொத்த பள்ளியின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தது..
இருவரும் பள்ளிக்கு வந்தனர். நான்காம் வகுப்பு மாணவர்கள் வரிசையில் சதாமும் , மூன்றாம் வகுப்பு மாணவர்கள் வரிசையில் ரபீக்கும் அமர்ந்து அந்த வாய்பாட்டு சப்தத்திற்கு வலுசேர்த்தனர். ஆனால் ரபீக்கின் எண்ணத்தை வீட்டுப்பாடம் பற்றிய பயமே முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.
சற்றுநேரத்தில் மணியடிக்கப்பட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டு வகுப்பறைக்குச் சென்றனர். தேன்மொழி டீச்சர் வருகைப்பதிவை முடித்துவிட்டு , சஞ்சாயிகா (மாணவர் சிறுசேமிப்பு திட்டம்) காசு வச்சுருக்கவங்க வந்து கட்டுங்க என அழைக்க சிலர் சென்றனர், ரபீக் தன் தந்தை சுலைமான் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான், கடைசி மாணவனும் காசுகட்டி முடிக்க ரபீக்கின் பயம் உச்சத்தை தொட்டது, சதாமாவது வந்து சொல்வானா என வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் .
யாரோ வரும் சப்தம் கேட்டது , ஆவலோடு ரபீக்பார்க்க , தலைமையாசிரியர் உள்ளே வந்தார். கையிலிருந்த கவரை கொடுத்துவிட்டு தேன்மொழி டீச்சரிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றார், போட்டோ வந்திருச்சு என டீச்சர் சொல்ல அனைவரின் முகத்திலும் ஆனந்தம் தொற்றிக்கொண்டது, வகுப்பறையில் அதிகரித்த சப்தத்தை பிரம்பை மேஜையில் தட்டி நிசப்தமாக்கினார் ஆசிரியை. இரண்டு வாரங்களுக்கு முன்பு பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அது, பணம் செலுத்தியவர்களின் பெயரை வாசித்து புகைப்படங்களை ஆசிரியை வழங்கினார்.

ரபீக், வகுப்பு மாணவர்களின் குழுப்படத்திற்கும் , சதாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்திற்கும் பணம் செலுத்தியிருந்தான். ஆசிரியை ரபீக்கை அழைத்து புகைப்படத்தை வழங்கினார், அவனடைந்த பூரிப்பிற்கு அளவேயில்லை, நேர்த்தியான அட்டையில் ஒட்டப்பட்ட அந்த புகைப்படத்தில் அரசு ஆரம்பப்பள்ளி, உத்தமபாளையம், தேனிமாவட்டம் என்ற அச்சிடப்பட்ட காகிதமும், வலது ஓரத்தில் தேதி-03/03/1997 எனவும் எழுதப்பட்டிருந்தது
ஆசிரியை எல்லோருக்கும் புகைப்படத்தை வழங்கி முடிக்க, ரபீகிற்கு மீண்டும் வீட்டுப்பாடம் ஞாபகத்திற்கு வந்தது , வீட்டுப்பாடம் பற்றி ஆசிரியை கேட்பதற்கும் இடைவேளைக்கான மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது, சரி போய்டுவாங்க என இடைவேளைக்கு செல்லச் சொல்லிவிட்டுச் சென்றார்.
ரபீக் நேராக நான்காம் வகுப்பிற்கு சென்றாம் அங்கே சதாம் இல்லை, சில நாட்களாக பள்ளிக்கு வராத மாணவன் ஒருவனின் வீட்டிற்கு தகவல்கேட்க தலைமையாசிரியர் அனுப்பியதாக சதாமின் நண்பன் சொன்னான், மீண்டும் வீட்டுப்பாட பயம் ரபீக்கின் நெஞ்சை பீடித்தது .இந்த பயமே ரபீக்கின் சிறுநீர் பையை நிறைத்தது, நேராகச் சென்று பள்ளியின் முன்பிருந்த தென்னந்தோப்பில் சிறுநீர் கழித்துவிட்டு திரும்ப, மணியடித்திருந்தது. அனைவரும் வகுப்பிற்கு சென்றிருந்தனர், வேகமாக வகுப்பறை நோக்கி நடந்தான்.
அங்கே தடுப்பூசி வாத்தியார் (தவறு செய்பவர்களுக்கு தன் பிரம்பால் தடுப்பூசி போடுவார்) வந்திருந்தார், அனுமதி பெற்று உள்ளே சென்று அமர்ந்தான்,சிறிது நேரம் பாடம் நடத்திவிட்டு, சிலேட்டை எடுத்து கரும்பலகையில் இருப்பதை பார்த்து எழுதச்சொன்னார், உடனே முன்வரிசை மாணவன் எழுந்து இன்னும் வீட்டுப்பாடத்தை தேன்மொழி டீச்சர் பார்க்கவில்லை என்றான், சற்று யோசித்துவிட்டு இதை எழுதுங்கள் நான் டீச்சர்ட்ட சொல்றேன் என ஆசிரியர் கூற, ரபீக் நிம்மதியடைந்தான்..
திடீரென மூக்கில் தூசியேற "அச்" என்று தும்பியவன் நிகழ்காலத்திற்கு வந்திருந்தான், வீடுமாறுவதற்காக பொருட்களை வெளியே எடுக்கையில் கிடைத்த அந்த இருபதுவருட பழைய புகைப்படம் தந்த அழகான நினைவுகள் அது....வெளியே கார் சப்தம் கேட்க மாடியிலிருந்து எட்டிப்பார்த்தான்...
அங்கே சதாம் தன் மனைவி மற்றும் மகளுடன் வந்திறங்கினான், சுலைமானும் அஸ்மாவும் வரவேற்றுக்கொண்டிருந்தனர்

எழுதியவர் : ibnu sulaiman (21-May-17, 12:15 am)
சேர்த்தது : இப்னு சுலைமான்
Tanglish : veettupadam
பார்வை : 368

மேலே