முடிவிலியில் மிதக்கும் எழுத்துகள்
வார்த்தைகளை நீ வைத்துக் கொண்டு
என்னை கவிதை எழுதச் சொன்னாய்
பக்கம் பக்கமாக
மௌனம் நிறைந்த நோட்டுப் புத்தகம் உள்ளது
வாங்கிக்கொள்
நீ திருப்பத் திருப்ப
நிறைந்து கொள்ளும்
உன் வார்த்தைகளில் ஒளிந்துகொண்டிருக்கும்
என் கவிதைகள்
நாட்களை வருடங்களை
தினமும் தொட்டுச்செல்லும் இலையுதிர்காலம்
வயது கூடிடும் வலிமை விலகி ஓடிடும்
நரை கூடி நடுங்கும் காயம்
அந்நிலையிலும்
தளர்வறியா
முதுமைத் தீண்டா
ஓர் பெரும் சக்தி உயிர்ப்புடன் இருக்குமெனில்
அது...
ஒவ்வொரு எழுத்தாலும் சொல்லாலும்
வேர்கொண்ட
நேசமே
அடைக்கும் தாழற்ற
அமிர்தம் பருகிய அன்பை
தீண்டத் துணியான் காலன்
உயிர் உதிர்ந்து
உடல் புகையென மறைந்தாலும்
வார்த்தைகள் பெற்றுக்கொண்ட
மார்க்கண்டேய வரத்தில்
என்றென்றும் வாழ்ந்துகொள்ளும்
பிறந்து கொண்டே இருக்கும் பேரன்பு. . .