பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 1 அ

பெண் மனது ஆழமென்று.............. தொடர்

பாகம் 1 அ

........................................................................................................................................
சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...

...........................................................................................................................................

2011 ஜூன் 6..

என் அழகான கல்லூரிப் பருவம் ஆரம்பமான நாள்..

மேலப்புரம் சேதுபதி சொர்ணம்மாள் கலைக் கல்லூரி சாலைகளிலிருந்து சற்றே உள்ளடங்கி நெட்டிலிங்க மரக் கூட்டத்துக்கு மத்தியில் வெளிர் பச்சை பெயிண்டிங்கில் சின்ன கேக் போல் அமைந்திருந்தது. இருபாலார் கல்லூரி.. என் பெயர் சரண்யா. நான் தாவரவியல் இளங்கலைத் துறையில் பயின்றேன். அதே துறைக்குப் படிக்க வந்திருந்த ரூபலா, மைதிலி, வானதி மற்றும் இந்திராவை நான் அங்குதான் சந்தித்தேன்.

ஊம்.. ஒவ்வொருத்தியும் ஒரு அழகு..! ரூபலா என் மேனியழகைக் குறிப்பிடும்போது பாலில் குங்குமப்பூ சேர்த்த நிறம் என்பாள்.. கண்களுக்குள் இரண்டு சமுத்திரத்தை அடக்கி விடலாம் என்பாள்... அவளுடையது வெண்பால் மேனி..! சற்று குள்ளமாயிருந்தாலும் இருப்பில் வானவில் ஜொலிக்கும்..! மைதிலிக்கு பாலில் துளி டிக்காஷன் சேர்த்த உடம்பு.. ஒரு பெண் மானின் துள்ளலும் சுறுசுறுப்பும் அவளிடம் உண்டு.. இள மாவிலையில் தோன்றும் மஞ்சள் நிறம் வானதி..! அவள் ஆடை அலங்காரம் கல்லூரியில் பேசப்படாத நாள் அரிது.. வெயிலில் போனால் தகதகப்பாள் இந்திரா.. ஒரு மரியாதையை வரவழைக்கும் தோற்றம்..! சீண்டும் ஆண்களை முறைப்பாலேயே அடக்கும் ஆளுமை..! !

நாங்கள் ஐந்து பெண்களும் முதல் நாளிலிருந்தே தோழிகளானோம்..

ஐந்து பெண்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து செயல்பட முடியாது என்பார்கள்.. ஆனால் கல்லூரியில் ஆண்கள் பரிச்சயமற்று நெல்லிக்காய் மூட்டைகளாக இருந்தபோதே எங்கள் ஒற்றுமை வேர் விட்டு வளர்ந்து மரமானது.. வகுப்பறை மேஜை தொடங்கி காண்டீன் வளாகம் என்று எங்கள் நட்பு தொடர்ந்தது..

எங்கள் நட்புக்கு கல்லூரியில் கிடைத்த செல்லப் பெயர் பூச்செண்டு..! !

அந்தக் கல்லூரியில் நாங்கள் பயின்றோம் என்பதை விட அந்தக் கல்லூரியை நாங்கள் ஆண்டோம் என்பது சரியாக இருக்கும்..! வகுப்பறையோ, கலைவிழாவோ, எந்த நிகழ்ச்சியோ நாங்கள் வந்தால்தான் களை கட்டும்.. குடியரசு தினமாகட்டும்.. சுதந்திர தினமாகட்டும்.. முதல்வரே வந்து விடட்டும்.. பூச்செண்டு காலெடுத்து வைக்காமல் கொடி மேலே பறக்காது..! நாங்களும் நன்றாகப் படித்தோம்.. ஆடல் பாடல் விளையாட்டு எல்லாவற்றிலும் ஜொலித்தோம்.. பொறுப்பு எடுத்துக் கொண்டோம்.. செய்தோம்.. கைக்காசை செலவழித்து நிறைய ஆச்சரியங்களைக் காட்சியாக்கினோம்.. கல்லூரி முழுக்க எங்கள் பேச்சாக இருந்தது.! சொர்ணம்மாள் கலைக் கல்லூரி என்றாலே பூச்செண்டு என்றானது..!

பூச்செண்டு..! ! பூச்செண்டுப் பெண்கள்..! அழகான, திறமை மிக்க பெண்கள்..! எங்கள் பார்வைக்குத் தவம் கிடந்தார்கள் மாணவர்கள்.. நாங்கள் போகிற வழியில் பூப்போடுவார்கள்.. ஒரு இரண்டு வார்த்தை சிரித்துப் பேசி விட்டால் அந்த மாணவன் புல்லரித்துப் போய் விடுவான்.. !

அதிலும் நான்...! பூச்செண்டில் புதுமையான பூ..!

மற்றவர்கள் அழகையும் திறமையையும் முன்னிலைப் படுத்தியபோது, நான் சமூகம் சார்ந்த பிரசினைகளைக் கையிலெடுத்தேன்..!

பெண்ணியக் கருத்துக்களை முன் வைத்து வீராவேசமாகப் பேசுவேன்... கருவிலேயே பெண் குழந்தைகளைக் கொல்வது, கணவனை இழந்த பெண்ணை விதவை என்று முத்திரை குத்தி ஒதுக்குவது போன்ற செயல்களை வெறுத்து பிரச்சாரம் செய்தேன்..

கல்லூரித் தோழர்கள் மற்றும் தோழிகளின் உதவியோடு ’மறுபடி மங்கலம்‘ என்று ஒரு அமைப்பை உருவாக்கி நடத்தினேன்.. இளம் விதவைகளின் உணர்வுகள் மற்றும் உரிமைகள் அமுக்கப்பட்ட சமுதாயத்தில் அவர்களை அடையாளம் கண்டு, குடும்பத்தார்களுடன் பேசி, மறுமணம் செய்து வைக்கும் அமைப்பு அது.. இருபத்தேழு இளம் விதவைகள் இதனால் பயன் பெற்றனர்.. அப்பொழுதே...!

நான் மிக மகிழ்ச்சியாக இருந்த காலம் அது.. ஒருவேளை கல்லூரிக் காலம் முடிந்த ஓரிரு வருடத்துக்குள்ளாகவே நான் வறண்ட பாலை வனமாக வேண்டியிருக்கும் என்பதால் அத்துணை சந்தோஷங்களையும் அப்போதே கொடுத்து விட்டானோ ஆண்டவன்..? ? ?

மோகனை நான் எப்போது சந்தித்தேன் ?

மோகன் என் வகுப்புத் தோழன்தான்..

அன்றைக்கு கல்லூரி ஆண்டு விழா. வழக்கம் போல எல்லாப் பொதுப்போட்டிகளிலும் எங்கள் பூச்செண்டு பெண்களே பரிசுகளை அள்ளியிருந்தோம்.. எங்களைத் தவிர இன்னும் சில பெண்கள் பரிசுகளைப் பெற்றிருந்தனர்.. பரிசு வென்ற ஒரே ஆண் மோகன்..!

மோகன் எங்களோடு ஒரே மேடையில் நின்றான்.. ஆண்களின் மானத்தை காப்பாற்றிய ஒரே ஆண் என்றும் பூச்செண்டோடு மேடையில் நிற்கும் பாக்கியம் பெற்ற ஒரே வெற்றியாளன் என்றும் கல்லூரி ஆர்ப்பரித்தது.. மோகன் கல்லூரி ஹீரோவாக எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டிருப்பான் என்று கற்பனை செய்து பாருங்கள்..

மோகன் எனக்குப் பக்கத்தில் நின்றான்.. அந்த அண்மை.., மேலும் சக வெற்றியாளன் என்கிற நினைவு அவனை நன்றாக கவனிக்க எனக்கு சந்தர்ப்பம் அளித்தது... மோகன் என்னை விட ஐந்து சென்டிமீட்டர் உயரம்;; சிவப்பு நிறம்;; தலையைத் திருப்பாமல் கண்களை மட்டுமே திருப்பி கவனிக்கிற தோரணை;; ரகசியங்களை போட்டு அமுக்கிக் கொள்கிற திருத்தமான வாய்;; சிரித்தால் தெரியும் இடது கடைவாய் தங்கப்பல். நான் தோழமையோடு கை குலுக்கினேன்.. அவனுக்குள் சிலிர்த்ததை என் நரம்பு மண்டலம் உணர்ந்தது.. !

எங்கள் குழுவில் எல்லோருக்கும் காதல் விண்ணப்பங்கள் வருவது சகஜம்தான்.. அன்பான குடும்பமும், அருமையான நட்பு வட்டாரமும் வாய்க்கப் பெற்ற பெண் அத்தனை சுலபத்தில் காதல் வலையில் விழுந்து விட மாட்டாள் என்பது என் எண்ணம்..! மேலும் கல்லூரிக் காலம் துணையைத் தேர்ந்தெடுக்கும் பருவமல்ல என்று எங்கள் ஆசிரியைகள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த வாழ்க்கை கல்லூரிக்கு வெளியில் நீடிக்கும் என்று சொல்ல முடியாது.. மனிதனது ஆயுட் காலத்தில் வெறும் மூன்று வருடமே வந்து வாய்க்கிற கல்லூரிக் காலத்தில் வாழ்நாள் துணையை தேர்ந்தெடுப்பது பொருத்தமாகத் தெரியவில்லை..!

கல்லூரித் தோழர்களோடு நட்பு பாராட்டின அதே சமயம் காதலை நாசுக்காக விலக்கினோம்.. ஒரு பழரசத்தை வேண்டாமென்று சொல்கிற மென்மையோடு..! மிகவும் அழுத்தம் கொடுத்தால் நான் என் அண்ணன் முகேஷை கை காட்டி விடுவேன்..! முகேஷ் முரடன்.. என்னிடம் காதல் சொல்லும் முக்கால்வாசிப் பேர் முகேஷின் நிழல் பக்கம் கூடத் திரும்புவதில்லை...!

என்னைக் காதலில் வீழ்த்தவென்றே நிறைய பேர் கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தார்கள்.. மோகனும் என்னைக் காதலிப்பதை அவன் கண்களைப் பார்த்து அறிந்து கொண்டேன்..! வண்டி வண்டியாக கவிதைகள் சொல்வதும் மனம் திறந்து பேசுவதுமாக மற்ற மாணவர்கள் பழகிய போதிலும் மோகன் மட்டும் வாய் திறந்து காதலைப் பற்றி எதுவும் பேசியதில்லை..

இருப்பினும் அவன் காதலில் ஒரு தீவிரம் இருப்பதாக இந்திரா ஒரு முறை என்னிடம் குறிப்பிட்டாள்..

ஒரு சம்பவம்..

அன்று குமாரிடம் ஒரு புத்தகத்தை கொடுத்தபோது குமார் என் கையை வருடி வாங்கினான். அதை கவனித்த மோகன் கண்களில் அப்படி ஒரு கோபம் கொழுந்து விட்டு எரிந்ததாக இந்திரா கூறினாள்..
குமாருக்குத் தேவையான சர்ட்டிபிகேட் ஒன்று கிடைக்கவில்லை.. இதனால் குமார் மிகவும் சிரமப்பட்டான்.. இந்திரா என்னிடம் வந்து மோகனிடம் சொல்லி குமாருக்கு உதவும்படி கூறினாள்.. குமாரின் சான்றிதழுக்கு மோகன்தான் என்ன பண்ண முடியுமென்று நான் ஆச்சரியப்பட்டாலும் மோகனிடம் குமாருக்கு உதவச் சொன்னேன்.. இரண்டு நாள் கழித்து, மாய மந்திரம் போல குமாரின் சான்றிதழ் அவன் கைக்கே கிடைத்தது...!

இந்திராவிடம் இதைப் பற்றி ஆச்சரியமாகக் கேட்டேன்..

“ இது கூடப் புரியலையா? குமார் உன் கையைத் தொட்டான்.. அதுக்கான தண்டனை, அவன் சர்ட்டிபிகேட் மாயமாயிடுச்சி.. மகாராணி நீ..! சிபாரிசு பண்ணே.. திரும்ப வந்திடுச்சி ! அவ்ளோதான்.. ” என்றாள்..

இது போல் நிறைய நிறைய காதல் களேபரங்கள்..!

சொல்லிய காதல், சொல்லாத காதல், அண்ணனை நண்பனாக்கிக் கொள்கிற காதல்.. காதல் ஈ மெயில்.. எஸ் எம் எஸ்.. எல்லாவற்றையும் ஒரு சர்க்கஸ்காரியின் லாகவத்தோடு கையாண்டு.. படிக்கவும் படித்து, பிற பெண்களோடு சகஜமாகி..!

என் படிப்பும் முடிந்தது ..

கடைசியாக நடந்த அந்தக் கலை நிகழ்ச்சி மனதில் அளவற்ற சோகத்தை உண்டாக்கியிருந்தது.. நாங்கள் ஐவரும் பித்துப் பிடித்தாற் போல நடந்து கொண்டோம்.. சிரித்தோம்.. அழுதோம்.. அணைத்தோம்.. பகிர்ந்து கொண்டோம்..!

என் வகுப்புத் தோழன் பாலா என்னருகில் வந்தான்.. “சரண்யா..! மோகன் உன்னைக் காதலிக்கிறான்.. உன் மேல உயிரையே வச்சிருக்கிறான், ” என்றான்..

நான் வெறுமனே சிரித்தேன்..

ரூபலாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.. மைதிலியும் வானதியும் அதே கல்லூரியில் முதுகலைப் படிப்பு தொடரும் எண்ணத்தில் இருந்தனர்.. இந்திரா வேறு ஒரு கோர்ஸ் எடுத்து பூனா செல்லவிருந்தாள்.. நான் நிறைய இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.. அவற்றில் ஏதாகிலும் ஒன்று கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது..

என் நம்பிக்கை பொய்க்கவில்லை.. காதி கிராமயோத்பவனில் எழுத்தர் வேலை கிடைத்தது..!

நானே நினைத்துப் பார்க்கவில்லை.. அத்தனை சீக்கிரம் வரனும் தகைந்து எனக்கும் திவாகருக்கும் திருமணமானது..! !

திவாகர்.. என்னை விட ஐந்து சென்டிமீட்டர் உயரம்.. சிவப்பு நிறம்.. கோயமுத்தூரில் அக்ரோ கலர் வொர்க்ஸ் என்கிற தனியார் கம்பெனியில் அஸிஸ்டெண்ட் மானேஜர்.. ஒரே தங்கை மீரா கல்யாணமாகி ஹைதராபாத்தில் வசிக்கிறாள். அன்று திவாகர் நெற்றியில் நடு மூன்று விரல்களை வைத்து பொண்ணு பிடிச்சிருக்கு.. என்று சொல்லி வெட்கப்பட்டு சிரித்தான்.. சிரிக்கும் போது கன்னத்தில் குழி..!

கல்லூரித் தோழர்கள், தோழிகள் எல்லோருக்குமே திருமண அழைப்பு அனுப்பியிருந்தேன்..! கிட்டத்தட்ட எல்லோரும் வந்திருந்தனர்.. கல்லூரி வாழ்க்கையின் ஆசாபாசங்கள் கல்லூரியோடு முடிந்தது; இனி நெஞ்சிலிருப்பது தோழமையும் இனிய நினைவுகளும் மட்டுமே என்கிற முதிர்ச்சியில் எல்லோரும் பழகினர்.. வாழ்த்துக்களை பூ மாதிரி பொழிந்தனர்.. சந்தோஷமும், கிண்டலும் கேலியுமாய் நிறைவானது அந் நாள்..

பாலா தனியாக என்னிடம் வந்தான்.. “ மோகன் நொறுங்கிப் போயிடுவான் சரண்யா.. ” என்றான்.

மோகன் எங்கள் திருமணத்துக்கு வரவில்லை..!

நான் தலையசைத்தேன்.. ஒரு பெண் பூச்சூடும்போது ஒருவனுடைய பெருமூச்சாவது அவள் திருமணத்துக்கான யாக குண்டத்து நெருப்பை ஊதி விடாமலா இருக்கும் ? ?

“ நானென்ன காகிதப்பூ.. மோகனுக்கு செண்பகப் பூவே வாய்க்கும் பார்..! ” சொல்லி விட்டு லேசாக சிரித்தேன்.. அவனும் சிரித்தான்.. “ விட்டுத் தள்ளு, சரண்யா..! ”


தொடரும்..

எழுதியவர் : அருணை ஜெயசீலி (7-Aug-17, 12:53 pm)
பார்வை : 291

மேலே