மங்கல இசை

ஒரு திருமண நிகழ்சிக்காக வேலூர் சென்றிருந்தேன். சட்டையில் பொத்தான்களைப் போடாமல் இளைய தளபதி ஒருபக்கமும் டிப்டாப்பாக கோட்சூட் கூலிங்கிளாஸ் சகிதம் தல மறுபக்கமும் பிரம்மாண்ட கட்டவுட்டுகளாய் வாசலில் நின்று வரவேற்றனர். திருமணத்தை அழகாக்க இருவீட்டாரும் இணைந்து இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தனி மேடையில் அந்த இன்னிசை நிகழ்ச்சியில் ஒருவர் "கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே என்பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்" என பாடிக் கொண்டிருந்ததை கேட்டபடி உள்ளே சென்று அமர்ந்தேன்.

ஒவ்வொரு திருமண விழாக்களில் கலந்துகொள்ளும்போதும் குறிப்பாக இரண்டு விஷயங்களை கவணிப்பேன். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு பிரிவினரும் திருமணத்தை அவர்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் திருமணப் பெண்ணின் தோழிகளையும் (ஹி.ஹீ) தீர்க்கமாக கவணிப்பேன். ஆனால் அன்று அதை மறந்து இன்னிசை நிகழ்ச்சியை கவணித்துக் கொண்டிருந்தேன் (அதற்கு காரணம் அந்த பாடல்). கிராப்பு கோழியைப்போல் தலையை வைத்திருந்த ஒருவன் மேடைக்குச் சென்று பாடுபவரின் காதில் ஏதோ கிசுகிசுத்தான் கல்யாண மாலையை பாடிக் கொண்டிருந்த அவர் அதனை அவசரமாக முடித்துவிட்டு பக்கத்திலிருந்த குண்டுப்பெண்ணை பார்த்து தலையாட்டினார் அவள் கண்ணழகா என புதிய பாடலை பாடத் தொடங்கினாள். நான் மனமேடையின் பக்கம் திரும்பினேன்.

பட்டுவேட்டி பட்டுசட்டை தலையில் தலைப்பாகையுடன் கம்பீரத்தை கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு மணமகனும், பட்டுப்புடவை செட் நகை ஃபுல் மேக்கப்பில் நாணம் ஒரு கிலோ எவ்வளவு? என்ற கணக்கில் மணமகளும் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பக்கத்தில் ஆரஞ்சு நிறத்தில் ரோஜா பூப்போல்......... அதைவிடுங்கள் மணமேடையிலிருக்க, அர்ச்சகர் மந்திரம் ஓத, ஓமகுண்டம் தீர்த்த கலசம் அரசாணிக்கால் நவதாணியங்கைள் பூ பழம் சந்தனம் மஞ்சள் குங்குமம் கொண்டு, பெற்றவர்களுக்கு பாதபூஜை, மாப்பிள்ளை-பெண் நலங்கு, மாமன் சடங்கு என சம்பிரதாயப்படி திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்ததை பார்க்க அழகாக இருந்தது ஆனால் ஏதோ குறைவதுபோல் தோன்றியது அதுதான் "மங்கல இசை". நாதஸ்வர மேளக் கச்சேரிக்குப் பதிலாகத்தான் இன்னிசை நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தது அந்த குண்டுப்பெண்ணும் கண்ணழகா என மைக்கை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

மங்கல இசை என சொல்லக்கூடிய நாதஸ்வரம் மேளம் இவற்றை உயிரோட்டமாக கேட்கக் கூடிய இடங்கள் கோவில்களிலும் திருமண நிகழ்ச்சிகளில் மட்டுமே ஆனால் ரசனை மாற்றத்தில் இன்று எல்லாம் தொலைந்திருக்கிறது.

திரும்பிய பக்கமெல்லாம் வாணுயர்ந்த கோவில்களாகத் தெரியும் கோவிலும் கேவில்கள் சார்ந்த நிலத்தில் பிறந்தவன் நான். காலையில் பூபாள ராகத்தில் பொழுதைத் தொடங்கி, பிறகு பௌனி-மலையமாருதம்-வலசி-நாத நாமக்கிரியை ராகங்களைத் தொட்டு, உச்சிவேளையில் முகாரி-பூரண சந்திரிகாவையும் உள்வாங்கிக்கொண்டு, மாலை ஆறு மணிக்குமேல் கொஞ்சம் ஆசுவசாமாய் சங்கராபரணமும் பைரவியையும் கேட்டு, இரவு எட்டுமணிக்கு மேல் காம்போதி -சண்முகப்பிரியா-தோடி-நடபைரவி -அரிகாம்போதி-ரஞ்சனி போன்ற ராகங்களை சுவைத்து, நள்ளிரவில் அடாணா-கேதார கௌளை -பியாகடை-வராளி ராகங்களோடு கோவிலுக்குள் இருக்கும் கடவுளுக்காக நித்தியகால பூஜையில் வாசிக்கப்படும் மங்கல இசையை கேட்டு வளர்ந்திருக்கிறேன். தனித் தவிலாக "அலாரிப்பு" மற்றும் நாதஸ்வரத்தில் "கம்பீரநாட்டையும்" வாசித்து முடித்துவிட்டு அதனைத் தொடர்ந்து "மல்லாரி" வாசிப்பதை தூரத்திலிருந்து கேட்டவுடன் சுவாமி வீதியுலா புறப்படத் தொடங்கிவிட்டார் என வேடிக்கை பார்ப்பதற்காக (சாமியைத்தான்) கோவிலுக்குள் ஓடிய தருணங்களும் உண்டு. அர்சனைகள் முடிந்து தீபாராதனை காட்டும் நேரத்தில் வாசிப்பது தனி ராகம் அல்ல அவைகள் தேவாரமும் திருப்புகழும் என்பதை பிறகு வந்த காலங்களில் தெரிந்து கொண்டேன். இதனையும் தவிர்த்து கோவில்களில் ஒவ்வொரு மணிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் திருவிழா நாட்களிலும் மங்கல இசையில் பல ராகங்களை வாசிப்பார்கள் (இந்த கழுதைக்கு கொஞ்ச ராகங்களே தெரியும்). அத்தகைய நிகழ்வுகளிள் அவற்றை வாசிக்க ஆஸ்தான வித்வான்கள் பரம்பரை பரம்பரையாக இருப்பார்கள். அவற்களுக்கென்று தனி இடமும் தனி உரிமைகளும் ஒவ்வொரு கோவில்களிலும் இருக்கும். ஆனால் தற்போது அவர்களில் அடுத்த தலைமுறையும் அந்த இடமும் வெற்றிடமாக இருக்கிறது. புகழ்பெற்ற நாதஸ்வர குழுவினர்கள் விடியவிடிய கொட்டும் பனியில் வாசித்த திருவிழா தருணங்கள் இன்று ஆடலிலும் பாடலிலும் நிறைந்திருக்கிறது அர்ச்சனை அபிஷேக நிகழ்வுகளில் வாசிக்கப்படும் வாத்தியங்களுக்குப் பதிலாக மின்சார சாதனங்கள் வந்து காதை கிழிக்கிறது. அதையே கடவுளும் விரும்பிக் கேட்க பழகிக் கொண்டுவிட்டார்.

திருமண நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால் முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் கடைசி பக்கத்தில் தடித்த எழுத்துகளில் மங்கல இசை மலேசியா புகழ், சிங்கப்பூர் புகழ் ------ குழுவினர் எனப் போடுவார்கள். திருமணத்திற்கு முதல்நாள் இரவிலிருந்து மங்கல இசையை கேட்கும் பாக்கியம் கிடைக்கும். அதனை வைத்தே சுபகாரியங்கள் நடக்கும் இடம் அடையாளப் படுத்தப்படும். கோவில்களில் வாசிப்பதை போலவே திருமண நிகழ்விற்கு வாசிக்கப்படும் மங்கல இசைக்கும் தனித்தனியே ராகங்கள் இருக்கிறது. மாப்பிள்ளை அழைப்பிற்கு கல்யாணியும் சங்கராபரணமும், ஜான வாசத்திற்கு தோடி-காம்போதி-கரகரப்பிரியாவும் வாசிக்கப்படும். நிச்சயம் செய்யும் வேளையில் கானடா-அட்டாணா-பியாக்கடையும் மற்ற சடங்கு நேரத்தில் கேதாரம்-பூபாளம்-லஹரி ராகங்கள் வாசிக்கப்படும். முகூர்த்தத்திற்கு முன்பு நாட்டைகுறிச்சியும் முகூர்த்த வேளையில் தன்யாசி- நாராயணி ராகமும், தாலிகட்டும் நேரத்தில் அனந்த பைரவியும் வாசிக்க இருமணம் திருமணத்தில் இணையும். தற்போதைய நிலவரப்படி உள்ளங்கை அளவிற்கு சுருங்கிய பத்திரிக்கைகளைப் போல திருமண நிகழ்வுகளும் சடங்குகளும் சுருங்கியே விட்டது. இருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ மிஞ்சியிருந்த மங்கல இசையை இன்று இன்னிசை நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர், கானா கச்சேரி என ஓரங்கட்டி வைத்திருக்கிறது.

ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தேன் நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணமேடையிலிருந்த ஒருவர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என கத்த பின்னாலிருந்து கெட்டிமேள சப்தம் கேட்கத் தொடங்கியது. அடடா! எங்கிருந்து வருகிறது இந்த அனந்த பைரவி என நான் திரும்பிப் பார்ப்பதற்குள் மணப்பெண்ணின் கழுத்தில் தாலியேறி மாப்பிள்ளையின் கதை முடிந்திருந்தது (அதாவது பழைய கதை முடிந்து புதியகதை தொடங்கியிருந்தது). இன்னிசை நிகழ்ச்சி ஒருபக்கம் இருக்க தாலிகட்டும் நேரத்தில் கெட்டிமேளம் வாசிக்க மட்டும் நாதஸ்வர மேள வாத்தியக்காரர்களையும் திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு மூலையில் இருந்த அவர்களும் கடமைக்கு கெட்டிமேளம் மட்டும் வாசித்துவிட்டு முதல் பந்திக்கு என்னுடன் சாப்பிட வந்தனர். நானும் ஒரு கை வாய் வயிறு பார்த்துவிட்டு மணமக்களை வாழ்த்திவிட்டு கொண்டுவந்த பரிசை கொடுத்துவிட்டு பல்லிளித்து செல்ஃபி எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். சாப்பாட்டு இலையில் இரண்டுமுறை வைக்கப்பட்ட அசோகா வயிற்றில் கபடி விளையாடத் தொடங்கியது ஒரு சிகரெட் பிடித்தால் சரியாகும் என நினைத்து ஒரு பெட்டிக்கடையில் காரை நிறுத்தினேன். திருமணவிழாவில் கெட்டிமேளம் மட்டும் வாசித்த அந்த நாதஸ்வர குழுவினர் பேருந்திற்காக அங்கு அருகில் காத்திருந்தனர் சிகரெட் கரைவதற்குள் அவர்களிடம் பேச்சுக்கொடுக்கலாம் என என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிகரெட் கரைந்தும் எங்கள் பேச்சு தொடர, மாலை சென்னையில் ஒரு முகூர்த்தம் இருக்கிறது அங்கு வாசிக்க சென்று கொண்டிருக்கிறோம் என அவர்கள் கூற கேட்டதும் 'நானும் சென்னைதான் போகிறேன் வாருங்கள் உங்களை இறக்கிவிடுகிறேன்' என்றேன். சற்று தயங்கிய அவர்கள் என்னுடன் காரில் ஏறிக்கொண்டார்கள். மங்கள இசை என்னுடன் சென்னைவரை பயணித்தது.

மங்கல இசை, ராஜ வாத்தியம், கலையின் கண்கள் என அழைக்கப்படும் நாதஸ்வரம் மற்றும் மேளம் (தவில்) தோன்றிய காலம் அறியப்படவில்லை ஆனால் தோன்றிய இடம் தென் இந்தியாவின் பகுதிகளாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கலை பிறந்து தவழ்ந்து வளர்ந்து நடைபோட்டு தற்போது கொஞ்சம் தளர்ந்து உயிர்ப்புடன் இருக்கிறது.

நாதங்களுக்கெல்லாம் முதன்மையானது நாதஸ்வரம். நெடுங்குழல், பெருவங்கியம் என தமிழில் அழகாக அழைத்து வந்தனர். நாதஸ்வரம் அணைசு, உடல், கெண்டை, சீவாளி எனும் நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டது. அணைசு மற்றும் கெண்டை பகுதிகள் வெண்கலத்தால் செய்யப்படுகிறது. ரோஸ்வுட், பூவரசு, பலாமரம், கருங்காலி, சந்தனம், யானை தந்தம் வெண்கலம் போன்றவற்றால் உடல் பகுதியை செய்தாலும் செங்கருங்காலி என்ற "ஆச்சா" மரமே பெரும்பாலும் நாதஸ்வரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. சீவாளி எனும் ஊதும் பகுதி "கெருக்கன் புல்" என அழைக்கப்படும் நாணல் தெப்பையில் வடிவமைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு ஊமத்தம்பூ வடிவிலிருக்கும் நாதஸ்வரத்தில் திமிரி (சிறியது) பாரி (பெரியது) என இரண்டுவகை உள்ளது. ஒவ்வொரு நாதஸ்வரமும் தன்னுள் மொத்தம் 12 துளைகளை கொண்டிருக்கும். ஆனால் வாசிப்பவர் ஏழு சுவரங்களைப்போல் ஏழு துளைகளை மட்டுமே பயன்படுத்தி வாசிப்பார்கள். இந்த துளைகளில் வரும் நாதம் பிரம்ம சுரம் என அழைக்கப்படும்.

நாதத்திற்கு ஒத்துவது ஒத்து (தவில் அல்லது மேளம்). சங்க காலங்களில் இது மணமுழவு என அழைக்கப்பட்டது. தவிலை அவநாத வாத்தியம் என்பர் அதற்கு மூடப்படுவது என்று பொருள். இந்தத் தவில் பானை, வண்டோதரி, குண்டோதரி, கண்கள், தோல், வாள் வளையம், நாபி, புள், கழி, உறை என்ற பகுதிகளை கொண்டது. உருளை வடிவமான அதன் முழு பகுதி பலா மரத்தினால் செய்யப்படுகிறது. அடிபடும் தோளான "வளர்தலை" எருமையின் தோளால் ஆனது அதனை இழுத்து முடையப்பட்ட தோல் தொப்பி செய்வதற்கு ஆட்டுத்தோல் பயன்படுத்தப்படுகிறது. வாசிக்க உதவும் குச்சி நன்கு முதிர்ந்த பூவரசு மரத்தால் வடிவமைக்கப்படுகிறது. தா-கீ-தொம்-நம்-கி-ட-ஜம் என்ற ஏழு தாள சொற்களே தவில் வாசிக்க அடிப்படையாக அமைந்ததாகும்.

நாதஸ்வரம், தவில் இந்த இரண்டையும் வடிவமைக்க கணித முறைப்படியான வேலைப்பாடுகள் மிக அவசியமான ஒன்றாகும். அந்த முறைகளில் அவற்றை வடிவமைக்கப்படுபவர்களின் வாழ்வியல் நிலமையும் தற்போதைய நிலவரப்படி கவலைப்படக்கூடிய ஒன்கவே இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தை பரவலாக கொண்டுசென்றவர்கள் நாதஸ்வர மேளத்தையும் உலகமெங்கும் கொண்டு சென்றனர். இந்தக் கலையில் தமிழ்நாட்டில் சிறந்து விழங்கியவர்களின் பட்டியல் வெளியிட்டால் ஆணுக்கு பெண் சலைத்தவரில்லை, ஜாதியும் மதமும் கலைக்கு இல்லை என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மனிதனின் உடல் உணவால் தோன்றி உணவால் வளர்ந்து உணவால் சிதையக்கூடிய அன்னமய கோசத்தால் ஆனது. அந்த உடலின் உணர்சிகளான அழுகை, கோபம், சிரிப்பு, காமம், வெட்கம் போன்றவை உடலின் ஏழுசக்கரங்களில் ஒன்றான நாபி சக்கரத்தால் (மணிபூரகம்) இயக்கப்படுகிறது. நாபி என்றால் தொப்புள் பகுதி அறிவியலின் படி இது ஜீரண மண்டலமாகும். மற்ற வாத்தியங்களைவிட நாதஸ்வரம் என்ற கருவி நாபி கமலத்திலிருந்து வாசிக்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் நாதம் நம் உணர்வுகளை கட்டுக்குள் வைக்கிறது. அந்த உணர்வுகளை ஒருநிலைபடுத்தி பக்தியில் கரையவும், உறவுகளோடு கலக்கவும், ஊர் கூடும் கோவில்கள் மற்றும் உறவு கூடும் திருமண விழாக்களில் இவை மங்கல இசையாக வாசிக்கப்படுகிறது. மங்கலம் என்பது சுபம், ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, வழக்கு இவற்றை உள்ளடக்கியதாகும். தற்போது கோவில்களில் நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்களுக்கும் ரசனை மாற்றம் என நினைத்துக் கொண்டிருக்கும் இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் நாபிக்கமலமும், ஏழுசக்கரமும் , உணர்வுகளின் அதிர்வும், மங்கலமும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம்.

வாழ்வின் சிலநேரங்களில் உன்னதமானவற்றையும், உன்னதமானவர்களையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் எனும்போது ஒரு 15- 20 வருசம் பின்னோக்கி பயணித்தால் என்ன? என மனதிற்குள் தோன்றும். சார் நாங்கள் இங்கேயே இறங்கிக் கொள்கிறோம் என கைகுலுக்கள் மற்றும் தழுவலோடு என்னுடன் பயணித்த அந்த நாதஸ்வர குழுவினரை வழியனுப்பியவுடன் அதுதான் மனதில் தோன்றியது. மேலும் கலந்து கொண்ட அந்த திருமண நிகழ்வும் மங்கல இசையைப்பற்றி அசைபோடலும் அதற்கு பின்பான தேடலும் அதையே உணர்த்தியது.

ஆம்! இந்த நவீனத்தில் "தொலைந்து போனவைகளுக்காகவும், தொலைத்துக் கொண்டிருப்பவைகளுக்காகவும் ஒரு 15-20 வருடங்கள் பின்நோக்கி பயணிக்கலாம்".

எழுதியவர் : கொண்டலாத்தி (9-Oct-17, 10:07 am)
சேர்த்தது : கொண்டலாத்தி
பார்வை : 234

மேலே