மழை மழையாய் நிகழ்ந்த வீக் எண்ட் - கட்டுரை- கவிஜி

மழை மழையாய் நிகழ்ந்த வீக் எண்ட் - கட்டுரை- கவிஜி
****************************************************************************

மழை....

பெரும் மழை.....

நேற்று மாலை பெய்த அத்தனை மழையிலும் நான் நனைந்திருந்தேன். 6 மணிக்கு அலுவலகம் விட்டு கிளம்பி 9 மணிக்கு வீடு வரும் வரை தொடர்ந்து நனைந்தபடிதான் இருந்தேன்.

சனிக்கிழமை மாலை.

ஒரு வார அலுவலக களைப்பு. வீக் எண்ட் மனநிலை.

"பேய் மழை பெய்த மழை. பேயே மழை என இனி பெய்யும் என் மழை..." வந்த கவிதையை மழையோடு விட்டேன். இனி வரும் கவிதையென மழையோ விடவில்லை. உடல் முழுக்க நனைந்த பொழுதில்தான் மெல்ல நனைய ஆரம்பிக்கிறது உள்ளம். தொப்பலாக நனைந்த போது ஏதோ சுத்தமாகி விட்டது போல ஓர் உணர்வு. உள்ளிருக்கும் தேக்க நிலை மெல்ல மெல்ல பெருக்கெடுத்து அருவியாகி கொட்டும் மலை உச்சி தனிமைக்குள் தீரா பயணமென சென்று கொண்டிருந்தது எனது வழி. சாலையெங்கும் நானே உருண்டு துளியானது போன்று சிமிட்டிக் கொண்டது எனது விழி.

மழைக்கு ஏங்குவோர் மழை வந்ததும் ஓடி ஒளிந்து கொள்ளும் விசித்திரம் யாரின் சித்திரமென பார்க்கிறேன். மழை பேரன்பின் சிதறல். மழைக்கு ஒதுக்குதல் பற்றிய சிறு யோசனை மழைக்கு நடுவே எனக்குள் பற்றி எரிந்தது.

கடந்த மாதம் இதே போன்ற ஒரு மழை. திடும்மென பூத்த நாழிகை மழையின் மழையாகி அருகே இருக்கும் எதையும் மழையாக்கி விட்டிருந்தது. அவன் ஒரு தூரத்து ஞாபகம் போல பட்டென்று வண்டியை சாலையோரம் இருந்த அந்த அடர்ந்த மரத்தின் கீழே ஒதுக்கி விட்டு கீழே இறங்கி கைகள் குறுக்காக கட்டிக் கொண்டு நின்றான். மழையும் விடவில்லை. மனதும் விடவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தவனின் வலது கை அனிச்சையாக கீழே இறங்க எதுவோ கடித்தது போல திடுக்கிட்டு திரும்ப, நொடியில் நிலைமை புரிந்து விட்டது. ஒரு பாம்பு அவனின் சுண்டு விரலில் கடித்து விட்டு ஊர்ந்து செல்வதை கண்ட நொடி அவனுள் பெய்த மழையில் எல்லாம் விஷேமே. மொபைலில்.... சார்ஜ் போயிருந்தது. சாலை வெறித்துக் கிடந்தது. யாரிடம் சொல்ல. பயத்தை விழுங்கினான். மனதை திடப்படுத்திக் கொண்டதாக நம்பினான். சட்டென முடிவெடுத்து அவனே பைக்கை எடுத்தான். மழைக்குள் மழையாக வண்டி ஓட்ட துவங்கினான். 25 கிலோ மீட்டர் விடாத மழையிலும்.. விடாமல் விரட்டி வந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து விட்டான். பிறகு அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டு இரண்டு நாள் உயிரோடு இருந்தான். அடுத்த நாள் மழையும் நின்றிருந்தது. அவனின் உயிரும் நின்றிருந்தது.

மழைக்கு ஒதுங்குதல் பற்றிய பயம் இன்னும் எனக்குள் சொட்டுகிறது. ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" படத்தில்... முதல் காட்சியில் அந்த கதை நாயகி மழைக்கு ஒதுங்கிதான் பேருந்து நிறுத்தத்தில் நிற்பாள். அங்கே நிகழும் கதை வெறும் கதை மட்டுமல்ல. மழைக்கு ஒதுங்குதலின் நிகழ்வுகள் நீடிக்கும் எதிர் திரை விரிப்பின் சுயம் சரியும் தடுமாற்றத்தை யாவும் அறிந்த கணமெல்லாம் தாபம் தலைக்கேறும் விஷத்தின் கொடுக்கென இங்கும் எங்கும் எங்கோ அங்கோ நிகழக்கூடும். நிகழ்ந்திருக்க கூடும்.

மழைக்கு ஒதுங்கி நின்ற ஒரு நாள் சரவணம்பட்டி சாலையில்... அவன் நின்றிருந்த கூரை ஒரு பைக் விளம்பரத்துக்காக போட்ட சாமியானா. அது தெரியாமல் அவன் வண்டியை உள்ளே விட்டு விட்டு அவனும் நின்று விட்டான். எதிரே இருந்த கடைகளில் இருந்து ஏதோ சொல்லி ஜாடை காட்டிக் கொண்டே இருப்பதை அவன் கண்டும் காணாமல் நின்றிருந்தான். மழையே புகையாகி எங்கும் நிறைந்து சாலையையே மறைக்கும் மாலை நேர இன்னொரு பேய் மழை அது. எதிரே சத்தம் போடும் சத்தம் அதிகமாக, அப்போது தான் ஏதோ தவறாக இருக்கிறது என்று அவன் உணர உணர அந்த சாமியானா மேல் தேங்கி இருந்த நீர் பாரம் தாங்காமல் கீழே சரிந்தது. அதன் பிறகு அவனை வெளியெடுத்து காப்பாற்றியது வேறு கதை. ஆனால் மழைக்கு ஒதுக்குதல் பற்றிய பார்வை என்னை எங்கும் நிற்க விடாமல் மழைக்குள் பயணிக்க வைத்துக் கொண்டேயிருந்தது.

மழைக்கு ஒதுங்கிய 16வது வயதில் முதல் முத்தம் பெற்ற கதையை இங்கு சொல்வதாக வேண்டாமா என்று யோசிக்கிறேன். மழை நிஜம் சொல்ல வைக்கும் சிறுமூளை தூண்டும் மதுவாகி விடுகிறது. வந்ததும் நின்றதும் யாருமில்லா பின் மதிய பொழுதொன்றாய் நீண்டு முயங்கியதும்... வாவென்று அழைத்த ராணி அக்கா... வாசல் பாதிக் கதவில் மார்பு பிதுக்கி நின்று மழை காட்டியதும்.. துடித்த.....தனித்த பெரும் பாத்திரத்தின் வாசலில் நானொரு பெரு மழையென உருண்டு திரண்டு நடுங்கி நிற்க... பேச்சு மழையானது. பார்வை இடையானது. பதற்றம் மின்னலானது. எங்கோ பிழையானது. அதுவே கலையானது. பெருத்த பிறழ்வென முலையானது. இழுத்து அணைத்து முத்தமிட்டுக் கொண்டேயிருந்தவளின் கதை மழைக்கும் பெருமழைக்கும் அப்பால் ஒரு கானான் தேசத்து தொடர் கதை என இப்போது உணர முடிகிறது. இருந்தும் அன்றொரு நாளை இப்போதும் புணர முடிகிறது.

எழும் நினைவின் புகை மூட்டத்தில் அகம் திறக்கும் புறமெல்லாம் நீளும் ஒழுகும் துளிகள் என நடு கானின் நட்சத்திரம் தின்று நயம்பட நதியாகி நீண்டு வளைந்து சென்று கொண்டேயிருந்தது அன்றொரு மழைநாள். அன்று கரையோரத்தில் நின்று வெகு நேரம் கண்ட பாபு திடும்மென ஆற்றுக்குள் விழுந்து மூழ்கி போனான். மழைக்கு ஒதுங்கி சற்று இடைவெளியில் இருந்த ஆதி மரத்தின் கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் மீனொன்று கரையேறி வேடிக்கை பார்த்து விட்டு மீண்டும் நீருக்குள் குதித்து விட்டதென நம்பினோம். பால்ய ஞாபகத்தில் மறதிக்குள் பிறழும் புரளும் கூழாங்கற்களின் உராய்வோடு நான் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறேன் என்பது போல தலை ஆட்டிக் கொள்கிறேன். இதோ இங்கு பெய்யும் மழையில் அங்கு நடந்தே வீடு செல்லும் நான் மறதியா ஞாபகமா....? பின் அவ்வப்போது மழை நாளில்... யார் ஒதுங்கினாலும்.. கரை நின்ற பாபு மீனாகி நதிக்குள் எட்டிக் குதிப்பது போன்ற காட்சியை அரங்கேற்றி கொண்டிருக்கிறது மழையும் அதன் பொருட்டு நிகழும் ஒதுங்குதலும்.

மழை இன்னமும் நிற்கவில்லை. நானும் விடாது கறுப்பென மழைக்குள் துளிகளாக நிறைந்து கொண்டிருக்கிறேன். மழைக்கு ஒதுங்குதல் பற்றி பாட்டி ஒரு முறை கூறியது பிசாசு மழை. மெட்டாக்காட்டு காட்சியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை மழை மட்டுமே. குறுக்காக சாய்ந்து வெளி துண்டுகளாக வந்து வந்து போய்க்கொண்டிருக்கும் மழைக்குள் காற்றும் கருக்களும்.. மாலை மசங்களும்... மழைக்கு இன்னும் பொருள் சேர்க்கும் காட்சி தலை விரிந்து கிடக்கும் வெளியின் நீர் பரப்பெங்கும்..... நீட்சியாகி யட்சியென கைகள் விரிக்கும் வெறுமை என இருந்ததாம். பாட்டி கூறிய மொழி மழையாகி மாறுபட்டு விட்டது எனக்கு. பின்னால் இருந்து கத கதவென ஒரு வகை சூடு நொடியில் பற்றி எரிய ஆரம்பித்ததாம் ஒற்றை பனை. பார்க்க பார்க்க வானத்தில் நீண்டு கொண்டே போன பனை மரத்தைக் காணுகையில் அதுவரை அதன் அருகே இருந்த சிறு மரத்தின் அடியில் நின்றிருந்த பாட்டியை காணவே இல்லையாம். திடும்மென விழித்து பார்க்கையில் வீட்டில் காய்ச்சலோடு படுத்துக் கிடந்ததாம். மழைக்கு ஒதுங்கிய பாட்டியை யார் தூக்கி வந்து வீட்டில் போட்டார்கள் என்று இப்போது வரை தெரியவில்லை என்று கூறும் பாட்டியின் மடியில் இன்னும் கண்களை இறுக மூடி படுத்தே கிடக்கிறேன் நான். இப்போது பாட்டியை தான் காணவில்லை.

மழைக்கு ஒதுங்குகையில் எதுவும் நடக்க சாத்தியமாகிறது. ஒரு பெரும் சண்டை சமாதானமாகிறது. ஒரு சிறு அறிமுகம்.. சிறு புன்னகை... பெருத்த வஞ்சம் முளைக்க மழை காரணமாகலாம். முதல் முத்தம் ஏற்படலாம். பிரிவுக்கு மழை சாட்சியாகலாம். எதிர் பாரா மரணம்.. நிகழும் மழைக்குள் எங்கெங்கு காணினும்... விதிகள் இருக்கலாம்.

வீடு வந்து விட்டேன். உடல் நடுங்க உடல் வாசலில் நின்று திரும்பி பார்க்கிறேன்.

"இன்னைக்கு தப்பிச்சிட்ட" என்பது போல வாசலில் பற்கள் முளைத்த மழையை பெருத்த வியப்போடு காண்கிறேன். மழைக்கு உருவம் கொடுத்தது போல வந்திருந்த என்னையும் அப்படித்தான் பார்த்தார்கள் வீட்டில்.

மழை மழையாய் வீக் எண்ட் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கவிஜி

எழுதியவர் : (9-Oct-17, 7:08 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 435

சிறந்த கட்டுரைகள்

மேலே