முதுமொழிக் காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. 'மூதுரை, முதுசொல்' என்பனவும் இப் பொருள் தருவன. காஞ்சி என்பது பல்வேறு நிலையாமைகளைக் குறித்தது என்பர் தொல்காப்பியர். மேலும், முதுசொல் (தொல். பொருள். 385), முதுமொழி(தொல். பொருள். 467, 468, 480), முதுமை (தொல்.பொருள். 77) என்பவற்றிற்கு அவர்தரும் விளக்கத்திற்கும் 'முதுமொழிக் காஞ்சி' நூற் பொருளுக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை. ஆயினும், தொல்காப்பியரது சூத்திரக் கருத்தையும் முதுகாஞ்சிபற்றி நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் எழுதியஉரைக் கருத்துகளையும் ஒட்டியே திவாகர நிகண்டில் முதுமொழிக் காஞ்சிக்கு விளக்கம் தரப்படுகிறது.
கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய
முதுமை ஆகும் முதுமொழிக்காஞ்சி (X. 107)
என்பது திவாகரம். இவ் விளக்கம் முதுமொழிக்காஞ்சி நூலுள் பொதிந்த பொருளைத் தெளிவாக உணர்த்தவில்லை.
புறப்பொருள் வெண்பாமாலையில்'முதுமொழிக் காஞ்சி' என்று ஒரு துறை அமைந்துள்ளது. இதனை, 'மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி' என்றுதொகைச் சூத்திரத்தில் சுட்டியதோடு, பின்னர்,
பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள் முடிவு உணரக் கூறின்று
என்று விளக்கியும் ஆசிரியர் உரைத்துள்ளார். உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர்பெருமக்கள் எடுத்து இயம்புவது என்னும் இலக்கணம் 'முதுமொழிக்காஞ்சி' என்னும் நூற்பொருளுக்குப் பொருந்துவதாகும்.
முதுமொழிக் காஞ்சித் துறை பற்றிப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன (18, 27, 28, 29,74). இந்நூலின் உரைகாரர் புறப்பொருள் வெண்பாமாலையைப் பின்பற்றியே துறைக்குறிப்பும் விளக்கமும் (18, 74,உரை) தந்துள்ளார். இவர் தரும் விளக்கமும் முதுமொழிக் காஞ்சியின் இயல்போடு பொருந்தும்.
காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பலமணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்தநூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்று கருதுவாரும் உண்டு. அங்ஙனம் கொள்ளின், முதுமொழிக் காஞ்சி என்பது அறிவுரைக் கோவை என்னும் பொருள் பயந்து நிற்கும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்து உரைக்கும் வெண்பாவில் 'காஞ்சி' என்னும் பெயரே காண்கிறது . இதில் குறித்த காஞ்சி முதுமொழிக்காஞ்சி என்பதே சான்றோர் கொள்கை. 'இன்னிலையகாஞ்சி' என்று அடைமொழி கொடுத்து இப்பாடல் உரைப்பது, நூலின் தெளிவு முதலியன கருதிப் போலும்!