வறுமையால் நலிந்த காதல்

வறுமையால் நலிந்த காதல்

அன்றோருநாள்
உன் கைகளின் இறுக்கத்தில்
நான் காதல் உலகின் குபேரன்

உன் செவ்விதழ் அமிர்தம் பருகிய
செல்வந்தன்
தினம் தினம் உன் பண மழையில்
என்னை தளிர்வித்தாய்


வறியவன் நானோ வாய்பேசாது
வந்த நற்காதல் நழுவிடாது
காதல் கிறக்கத்தில் களைப்புற்றேன்

இன்றோ

தேடிவந்த நாகமாய் நாட்கள் உருமாற
உயிருக்குள் உறவாடிச்சென்ற உன்
பொருள் தர தேர்வில்

விடைகளாய்
தாள் முழுதும்
என் வறுமையின்
வரிகள் மட்டுமே மிஞ்சியது

இதோ நீ விட்டுப்போன உன் நினைவுகள்
படிவப்பாறைகளாய் இறுகிப்போனது

வெளிநாட்டின் வேடந்தாங்கல்
பறவைகளாய் அவ்வப்போது
வந்து செல்லும் உன் சுகந்த நினைவுகள்
துன்பச்சூட்டினால் நிற்கமுடியாமல்
பறக்க எத்தனித்து
பாறையின் மீது சமாதியாகும்

உன் சுகந்த நினைவுகளை
சுவைக்க நினைக்கையில்
வறுமை சூரியனால்
சுட்டெரிக்கப்படும் என் உமிழ்நீர்

ஒன்று மட்டும் இறுதியாய் உனக்காக
வறுமையே வா என்று
நான் வாரி அழைக்கவில்லை
அது வாழையடி வாழையாக
எம் வாழ்க்கை வீட்டின்
வரவேற்பறையில் அமர்ந்து
கைதட்டி சிரிக்கிறது

வறுமையில் வளர்ந்த காதலும் உண்டு
வறுமையால் நலிந்த காதலும் உண்டு
நம்புங்கள் தோழர்களே

வறுமையிலும் இளமை கொடிதாம்

எழுதியவர் : இளவல் (19-Sep-18, 2:43 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 90

மேலே