செல்வர்க்கு நல்லீகையே அணியாம் நன்கு – அணியறுபது 46

நேரிசை வெண்பா

ஊருக்(கு) அணிபெரியோர் உண்மையே; ஊறிவரும்
நீருக்(கு) அணியினிய நீர்மையே; - பாருக்குச்
செல்வ வளங்கள் சிறந்தவணி; செல்வர்க்கு
நல்லீகை யேவணியாம் நன்கு. 46

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

பெரியோர் இருப்பதே ஊருக்கு அழகு; இனிய சுவையும், தூய்மையுமே நீருக்கு அழகு; செல்வ வளங்கள் செழித்திருப்பதே நாட்டுக்கு அழகு; நல்ல ஈகையே செல்வர்க்கு அழகு ஆகும்.

ஊருக்கும் நீருக்கும் பாருக்கும் செல்வர்க்கும் உரிய உயர்வுகள் இங்கே தெரிய வந்தன. இனிய சுவையால் நீரும், அரிய பெரியோரால் ஊரும், செல்வ நிறைவுகளால் நிலமும், வள்ளன்மையால் செல்வமும் புகழும் சிறந்து திகழ்கின்றன.

ஈகை அரிய பெரிய குணம். தான் முயன்று ஈட்டிய பொருளைப் பிறரும் பகிர்ந்து மகிழ்ந்து வர அருள் புரிந்து தருபவன் வள்ளல் என உயர்ந்து வருகிறான், ஈகை வழியே இசைகள் வருகின்றன.

வித்திய விதையிலிருந்து விளைவுகள் பெருகி வருதல் போல் ஈயும் பொருளிலிருந்து இன்ப வளங்கள் பொங்கி விளைந்து வருகின்றன.

ஈகை இனிய தருமமாய் மருவி வருகிறது. ஆகவே ஈகையாளன் புண்ணியவானாய்ப் பொலிந்து திகழ்கிறான். இம்மையில் புகழும் மறுமையில் இன்பமும் அவனுக்கு நேரே உரிமைகளாகின்றன.

தான் உண்ணுவது ஒருவன் உடலோடு ஒழிகிறது. பிறர் உண்ண ஈவது புண்ணியமாய்ப் பெருகி அவன் உயிர்க்கு இன்பநலன்களை அருளி வருகிறது.

We enjoy thoroughly only the pleasure that we give. (Dumas)

நாம்பிறர்க்கு நல்குவதே நல்லவுயர் இன்பமாய்
நாமுவந்து கொள்கின்றோம் நன்கு.

The best way to do good to ourselves, is to do it to others. (Seneca)

நமக்குநாம் நன்மைசெய நல்லவழி என்றும்
பிறர்க்கிதம் செய்வதே யாம்.

The riches we impart are the only wealth we shall always retain. (M. Henry)

பிறர்க்குநாம் தந்தபொருள் பேராத் திருவாய்
உறப்பெறு கின்றோம் உயர்ந்து.

ஈகையைக் குறித்து அயல் நாட்டாரும் எவ்வாறு எண்ணி யுள்ளனர்? என்பதை இவற்றால் நாம் ஓர்ந்து உணர்ந்து தேர்ந்து கொள்கிறோம்.

தன் உயிர்க்கு நன்மையை நாடி வருபவன் எவ்வுயிர்க்கும் இதம்செய்து வரவேண்டும். பிற உயிர்கள் இன்புற உதவி புரிந்து வருகிற மனிதனைத் தேவர்களும் ஆவலோடு நோக்கி உவந்து வருகின்றனர்.

பிறர்க்குச் செய்கிற இதங்கள் எல்லாம் புண்ணியங்களாய்ப் பொலிந்து வருதலால் அந்த உபகாரி எண்ணரிய மேன்மைகளையும் இன்ப நலன்களையும் எளிதே அடைந்து கொள்கின்றான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-18, 9:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

மேலே