யாது படைத்தாய் நெஞ்சே

யாது படைத்தாய் நெஞ்சே – உனை
யாரும் முழுதாய் உணராதிருக்க
தீது தீக்குறி எல்லாம் – நின்னை
திணுக்குற, பிழைத்திடல் கண்டேன்
மோதும் ஊழ்வினைத் தானும் – உனில்
மூளாது செய்திடல் வேணும்
ஓதும் நின் அறிவுரைக்கே – உளம்
ஒத்திசைக்க, திடம் காணும்

காரென இருண்ட நெஞ்சம் – பலர்
காட்டிட கவலை யுற்றேன்
கடிதென திரண்ட வஞ்சம் – உயிர்
துடித்திட மருட்சி யுற்றேன்
கூரென பிறந்த சொல்லால் – உனை
குத்திக் கிழித்திடக் கண்டேன்
“ பாரடா ” என நீயும் – பக்குவம்
கொண்டிட, மானுடம் வென்றேன்

சீரென சிந்தை கொண்டு – நெஞ்சம்
சிரித்திட அன்பு செய்வார்
பாரினில் பல்லோர் உளரே – இறைவன்
படைத்திட்டான் நீயொக்க பலரே
ஆரென அறிந்திடும் முன்பே – சிலர்
அமிழ்தென அறவுரை சொன்னார்
பேருளம் பெற்ற மாந்தர் – நின்போல்
பெற்றியன், கேளாய் நெஞ்சே

எழுதியவர் : வேத்தகன் (4-Jan-19, 11:37 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 131

மேலே