பொருள் மாண்பு - கலி விருத்தம் – வளையாபதி 47

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும்
அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ. 47 வளையாபதி

பொருளுரை:

பொருளானது மக்கட்கு உயர்ந்த குடிப்பெருமையை யுண்டாக்கும்;

கல்விச் செல்வத்தைப் பிற விடங்களினின்று கொண்டுவந்து நிறைவுறச் செய்யும்;

வறுமையால் நலிந்த தம் சுற்றத்தாருடைய மிக்க பசியைத் தீர்த்துய்யக் கொள்ளும்;

ஆதலாலே, நிலம் பிளந்து போகும்படி வெப்பமுற்ற நெடிய பாலை நிலத்தினைக் கடந்து சென்றேனும் துயரின்மைக்குக் காரணமான பொருளை மாந்தர் ஈட்டிக் கொணரின் பின்னர் அவர் பால் துன்பம் உண்டாகுமோ? ஆகாது.

ஆதலின் மாந்தர் அப்பொருளின் இத்தகைய சிறப்புக்களை யுணர்ந்து அதனை நிரம்ப ஈட்டிக் கொள்ள வேண்டும் என்பதாம்.

விளக்கம்:

பொருள் மாந்தர்க்கு உயர்குடிப் பெருமையைத் தரும்; அறிவுச் செல்வத்தையும் வரவழைத்துக் கொடுக்கும்; உற்றார் உறவினர் பசிப்பிணியைப் போக்கி அவரை உய்விக்கும், ஆதலால் மாந்தர் பாலை நிலங்கடந்தும் திரைகடலோடியும் அப்பொருளை நிரம்ப ஈட்டுதல் வேண்டும்.

பிறநாடுகளிற் சென்றும் பொருளீட்டல் வேண்டும் என்பதை, நிலம்பக வெம்பிய நீள் சுரம் போகிப் புலம்பில் பொருள்தரப் புன்கண்மை யுண்டோ என்றார். போகியும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. நீள்சுரம் போகி என்றமையால் திரைகடலோடியும் என்றும் கூறலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Aug-19, 8:23 am)
பார்வை : 182

மேலே