மனம் கொண்டு மரம் வளர்ப்போம் - பகுதி 3

... தொடர்ச்சி

இதுவரைக்கும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் என்ன?

ஐக்கிய நாடுகளின் அமைப்பின் சுற்றுச்சூழல் அமைப்பும் மரம் வளர்த்தலின் அவசியத்தையும், அதன் வழிவகைகளையும் அதன் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்திக் கூறியதினால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மரம் வளர்த்தலை ஒரு இயக்கமாக ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன என்பது பாராட்டத் தக்க விசயமாக பார்க்கப்பட்டாலும், வன அழிப்பை மட்டுப் படுத்துவது மேலும் நலம் பயக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதை நாம் வாசிக்கும் போது உலகக் குழந்தைகள் மத்தியில் மரம் வளர்க்கும் அவசியத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தி 1 டிரில்லியன் மரம் நடுதல் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் கிரகத்திற்காக மரம் நடுவோம் (Plant for the Planet) என்ற அமைப்பைப் பற்றித் தெரிந்து கொண்டேயாக வேண்டும்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஏறத்தாழ 3 கோடி மரங்களை நடுவதற்கு மூல காரணமாக இருந்த சூழலியல் போராளி வங்காரி மாதாய் - ன் முயற்சிகளால் கவரப்பட்ட அப்போது 9 வயதே நிரம்பியிருந்த, தற்போது பேராசிரியர் தாமஸ் குரோவ்தர் -ன் ஆய்வகத்தில் வனங்களை மீள் உருவாக்கம் செய்வதற்கான தலை சிறந்த உத்திகளைக் கண்டறிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஃபெலிக்ஸ் ஃபிங்க்பெய்னர் (Felix Finkbeiner) என்ற ஜெர்மன் நாட்டுச் சிறுவனால் 2007, மார்ச் மாதம் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 130-ற்கும் மேலான ஊழியர்களுடன் உலகம் முழுவதும் 67 நாடுகளில் ஏறத்தாழ 70000 உறுப்பினர்களுடன் 1 டிரில்லியன் மரம் நடுதல் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. இந்த ஃபெலிக்ஸ் என்ற சூழலியல் ஆர்வலர், ஆராய்ச்சியாளர்தான் தனது 10-வது வயதிலேயே ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும், 13-வயதிலேயே ஐ.நா. சபையிலும் மரம் வளர்த்தலின் அவசியத்தைப் பற்றி உரையாற்றும் பெருமைமிகு வாய்ப்பைப் பெற்றார் என்பதும் குறிப்பிட்டாக வேண்டும்.

இவரது தளராத முயற்சிகளால் Plant for the Planet என்ற அமைப்பு இன்று உலகம் முழுவதும் விரிந்து பள்ளிக் குழந்தைகளைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி உலகம் முழுவதும் ஏறத்தாழ 13 பில்லியன் மரங்களை நட்டு தங்கள் 1 டிரில்லியன் என்ற இலக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பில்லியன் மரம் நடுதல் என்ற இலக்கை தலைமையேற்று நடத்துவது PIant for the Planet என்ற இவர்களது அமைப்புதான்.

பேசுவதை நிறுத்தி, நடுதலை ஆரம்பிப்போம் (Stop Talking. Start Planting) எனும் தாரக மந்திரத்தோடு சுயநலமின்றி பூமியைக் காக்க மரங்களை நடும் இவர்களின் முற்சிக்கு பல்வேறு நாடுகளும், சூழலியல் அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்குவதும் இவர்களின் முயற்சிகளுக்கு உத்வேகம் கொடுக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

....தொடரும்

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (8-Aug-19, 3:39 am)
பார்வை : 101

சிறந்த கட்டுரைகள்

மேலே