திக்கறியாப் பறவை

திக்கறியாப் பறவை
மழை நின்ற நள்ளிரவின்
மெளனத்தைக் கிழித்துச்
ஈனக்குரல் சிந்தி
இரக்கம் தேடிப் பறக்கிறது
எங்கிருந்தோ ஓர் சிறு பறவை!

திக்கறியாது சிறகசைத்து
திரையிட்ட பார்வையோடு
இருள் கவ்விய வானில்- அது
பயம் கொத்திப் பறக்கிறது!

ஈர இறகுகளோ
இரட்டிப்பாய் கனம் கூட்ட
சரிந்துவிட்ட மனப் பாரமொடு-அது
தொடர்ந்துவிட்ட புது யாத்திரையாய்!

நடுநிசியில் கருவானில்
சுடும் நினைவுகளைச் சுமந்து
அது தனித்ததாய்
ஏன் தவித்ததாய்?
இரைகிட்டா ஏக்கமா?
இனண செய்த தாக்கமா?
கயமையில் தப்பிய ஓட்டமா?
ஒதுக்கி வைத்தது கூட்டமா?

வானெங்கும் கொக்கிகளாய்
கேள்விக் குறிகளைத்
தொங்க விடடு!!
கம்மிய குரல் கொட்டி
இரவின் காது நிறைத்து
விடியலின் வழி தேடி
செல்கிறதோ இளம் பறவை!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (18-Jun-20, 9:13 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 133

மேலே