தேன்சாரல்

தென்பொதிகை மலைமீதில் தாவிவரும் அருவியிலே
தேன்துளிகள் கலந்துவந்து தேகமதை நனைக்குதன்றோ ?
வண்ணவண்ண மலரெல்லாம் வண்ணத்துப் பூச்சிகளை
வரவேற்று நிற்பதனால் வாழ்த்தொலிகள் பிறக்குதன்றோ ?
விண்மீதில் மேகமெல்லாம் விரைந்தெங்கோ செல்வதனால்
விட்டுவிட்டு மழைத்தூறல் வேடிக்கைக் காட்டுதன்றோ ?
மண்மீதில் மரமெல்லாம் மணப்பெண்போல் நில்லாமல்
மகிழ்வோடு தலையசைத்து மண்ணவளை வாழ்த்துதன்றோ ?

தேன்கூட்டைத் தொட்டுவரும் தூயநீர்த் துளியெல்லாம்
தாவிவந்து இதழ்நனைக்க தேனாக இனிக்குதன்றோ ?
மான்கூட்டம் வனத்தினிலே மகிழ்வோடு துள்ளிவர0
மயில்களெல்லாம் ஓய்வெடுத்து மரநிழலில் நிற்குதன்றோ ?
வான்முட்ட உயர்ந்தாலும் வளர்ச்சியது போதாமல்
வளர்ந்திடத்தான் என்றென்றும் வனமரங்கள் முயலுதன்றோ ?
மீன்கூட்டம் ஆற்றினிலே மூழ்கிவரும் அழகெல்லாம்
மாந்தர்தம் மனங்களையும் மத்தாப்பாய் மாற்றுதன்றோ ?

பொதிகைமலை முகட்டினையே போர்த்தவரும் வெண்மேகம்
பூரிப்பைக் கொண்டுவந்து பூமியிலே கொட்டுதன்றோ ?
குதித்தாடும் தென்றலதும் குளிர்காற்றைக் கொண்டுவந்து
கூடிவரும் கூட்டமதைக் கொண்டாட வைக்குதன்றோ ?
மதித்தாடும் மூங்கிலினை மனம்மகிழச் செய்திடவே
மறைந்திருக்கும் துளைபுகுந்து மந்திரமாய் இசைக்குதன்றோ ?
முதியோரும் இளையோரும் மலையருவி தலைநனைக்க
முண்டிமுண்டி ஓடுவதால் மந்தியெல்லாம் அஞ்சுதன்றோ ?

இலக்கியத்தில் சாறெடுத்து இன்பமுற ஊட்டுகின்ற
இலக்கியத்தேன் சாரலிது இதயமதை நிறைக்குதன்றோ ?
பலபலவாய் கருத்துக்களைப் பக்குவமாய் தெரிந்தெடுத்து
பார்போற்ற பரப்புவதால் பற்சுவையும் தெரியுதன்றோ ?
பழகுதமிழ்ச் சொல்லெடுத்து *பா*பலவும் புனைத்துரைக்கும்
பாவலர்கள் கூடுகின்ற பாட்டரங்கம் நடக்குதன்றோ ?
கலப்படங்கள் இல்லாத கன்னித்தமிழ் உயர்வுபெற
காலமெல்லாம் உழைத்திடுவோர் கடமையதும் பெருகுதன்றோ ?
***************************************************** 27-05-2021 *******

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Jun-21, 11:47 am)
பார்வை : 86

மேலே