சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன் - பழமொழி நானூறு 216
இன்னிசை வெண்பா
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண்(டு) அறிவாமென்(று) எண்ணி யிராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர்
கடங்கொண்டும் செய்வார் கடன். 216
- பழமொழி நானூறு
பொருளுரை:
மடமாகிய குணத்தைக் கொண்ட சாயலில் மயில்போன்ற பெண்ணே!
அறிவு சான்றவர்கள் வேறொருவரிடத்தில் கடன் பெற்றாயினும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வார்கள்;
ஆகையால், தொடர்ந்து வறுமையுடையராய் வருதலின் ஒப்புரவு செய்யமுடியாத பொழுதும் ஒப்புரவு செய்யும் காலம் வந்தால் அப்பொழுது செய்வோம் என்று நினையார்.
கருத்து:
சான்றோர் கடன் பெற்றாயினும் ஒப்புரவு செய்வார்கள்.
விளக்கம்:
'இடம் கண்டு அறிவோம் என்றெண்ணியிரார்' என்றமையால். செல்வம் வரும் என்று பலமுறை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் என்பது பெறப்படுதலின், நெடுநாட்களாக வறுமையால் பீடிக்கப்பட்டு இருந்தவர்கள் என்பது அறியப்படும். 'அடர்ந்து வறியராய்' என்பதன் பொருள் இது.
தொடர்ந்து வறியராய் இல்லா தொழியின், செல்வம் பெற்றால் செய்வோம் என்ற கருத்துத் தோன்றாதாகும்.
'கடங்கொண்டும் செய்வார் கடன்' என்பது பழமொழி.

