தீ
தீ....
உன்னுள் எரியும் தீயை
அணையாமல் பார்த்துக்கொள்.
வயிற்றை எரிக்கும் வறுமைத் தீ...
இலக்கை எட்ட வேட்கைத் தீ...
சிகரம் தொட கொள்கைத் தீ...
அடிமை அழிய விடுதலைத் தீ....
அத்தனைத் தீயையும்
அணையாமல் பார்த்துக்கொள்.
தீ...
தீபமாய் எரியும் போது
தெய்வீகமாகிறது.
தீப்பந்தமாய் எரியும் போது
போர்களமாகிறது.
கட்டுக்குள் எரியும் போது
வெளிச்சமாகிறது.
காட்டுத் தீயாய்
கட்டுக்கடங்காமல்
காட்டைமட்டுமல்லாமல்
நாட்டையும்.... ஏன்
உன்னையும் எரித்து
சாம்பலாக்கி விடுகிறது.
நீ
காட்டுத் தீயா? - இல்லை
வீட்டுத் தீயா?
நீயே தீர்மானித்துக்கொள்.
தீ...
அவசியம்தான்.
உயிர்ப்புக்கு உயிர்நாடி
அந்த சூடுதான்.
சூடடிங்கிவிட்டால்
பிணமாய் சில்லிட்டுப்போவாய்.
உன்
கோபத்தீயை அடக்கிவிடு..
மோகத்தீயை அணைத்துவிடு.
அறிவுச்சுடரால்
பலர் வாழ்வில் ஒளியேற்று.
தியாகத் தீயால்
மற்றவர் வாழ்வில் வழிகாட்டு.

