பூசார் கலத்தினாற் பெய்பூச்சுச் சீரா தெனின் - ஆசாரக் கோவை 35
இன்னிசை வெண்பா
நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினாற்
பெய்பூச்சுச் சீரா தெனின்! 35
- ஆசாரக் கோவை
பொருளுரை:
நீரிடத்து நின்றும், நடவாநின்றும் வாயலம்பார்; வழியில் தேங்கியிருக்கும் நீரிலும் வாயலம்பார்; மனதினால் வரையறுத்துக் கொண்டல்லாமல் வாயலம்பார், கலத்தால் முகந்து சிலர் பெய்யப் பூச முடியாதாயின்!
கருத்துரை:
தண்ணீரில் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் வாயலம்பாது ஒரு கலத்தில் மொண்டே வாயலம்ப வேண்டும்.
நடைவரவு நீரகத்து நின்றும் என்பதை நடைநின்றும் வரவு நீரகத்து நின்றும் என்று பிரித்து, நடவாநின்றும் ஓடுகின்ற நீரில் நின்றும் என்றும் பொருள் கூறலாம்! நீரகத்து - நீர் + அகம் + அத்து;
பெய்பூச்சு - பெய்யப்பூசுதல், "பெய்பூச்சுத் தாரா தெனின்" என்றும் பாடம்.