எங்க வாழ்க்கை

எங்க வாழ்க்கை
பக்கத்து சீட் “கிளார்க்” வீட்டு கிரக பிரவேசம், விடியல் நேரமே வீட்டிலிருந்து எழுந்து டாக்சி பிடித்து வந்திருந்தார்கள் காசியும் அவன் மனைவி ராஜியும்.
வீடு அழகாய்த்தான் காட்டியிருந்தார், “ஒன்னரை செண்ட்டுக்குள்” வீட்டை கட்டி சுற்றி வர அரை செண்ட் இடம் விட்டு காம்பவுண்டும் போட்டிருந்தார். பரவாயில்லை வெறும் சம்பளம் மட்டுமே வாங்கியவர், இப்படி அழகான ஒரு வீட்டை எப்படி கட்டி இருக்கிறார் பாருங்கள், சன்னமாய் காசியின் காதில் ஓதினாள் மனைவி ராஜி.
காசிக்கும் அவளின் குத்தல் பேச்சு புரிந்தது. அதற்கு அவன் என்ன செய்ய முடியும்? தினமும் வரும்படி அம்பது நூறு கொண்டு வந்து கொடுத்து கொண்டுதான் இருக்கிறான். அதுவெல்லாம் எங்கே போகிறதென்றே தெரியவில்லை. ஒரு முறை அவளும், மகளும் மட்டுமே உபயோகிக்கும் பீரோவை ஏதேச்சையாக திறந்த போது புது புது சேலைகளும், மகளின் நவ நாகரிக உடைகளுமாய் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.
ஏது இத்தனை புடவையும் டிரசுமா இருக்கு? தெரியாமல் கேட்டு விட்டான். பதில் சொல்வதற்காக வாயை திறந்த ராஜி காசியை ‘உண்டு இல்லை’ என்று ஆக்கி விட்டாள். இதற்காகத்தான் எங்கப்பா சமையல்காரங்க சம்பந்தமே வேண்டாமுன்னு சொன்னாரு, நான் தான் சரி நமக்கு புடிச்சிருக்குன்னு உங்களுக்கு கழுத்தை நீட்டினேன், எங்கே தாக்கினால் அடங்குவான் என்று சொல்லி வாய் பேச்சில் அடித்தாள்.
‘உண்மையில் பையன் “கவர்ன்மெண்ட் உத்தியோகம்”, கிளார்க்குதானாலும் வரும்படியும் இருக்கும், இப்படி எதிர்பார்த்து, காசியின் பெற்றோருக்கு கூட தெரியாமல் இவனை அலுவலகத்திற்கே வந்து பேச்சு வார்த்தை நடத்தி வளைத்து போட்டவர் மாமனார். இதை இவளிடம் சொல்ல முடியுமா?
“டிபன்” பிரமாதமா இருந்துச்சு, கையை கழுவும் முன் நண்பனிடம் சொன்னான் காசி. ‘இதா’ அங்கதான் சமையல் செஞ்சுகிட்டு இருக்காங்க, வா கூட்டிட்டு போறேன், வீட்டின் பின்புறம் சமையல் வேலை நடந்து கொண்டிருக்க, தோளில் துண்டை போட்டபடி அடுப்பில் இருந்த பெரிய அண்டாவில் எதையோ கரண்டியால் கலக்கி கொண்டிருந்தவரை பார்த்ததும் காசிக்கு புரிந்து போனது. அது ‘அப்பாதான்’ என்று. அம்மாவும் வந்திருப்பாளே? கண்களால் துழாவ அதோ அங்கு உட்கார்ந்து வெங்காயம் அரிந்து கொண்டிருப்பது தெரிந்தது.
வா, என்று அவரிடம் அழைத்து போகிறேன், சொன்ன நண்பனிடம் வேண்டாம், வேண்டாம், அப்புறம் பார்க்கலாம், நண்பனையும், அழைத்து கொண்டே முன்புறமாய் வந்தான் காசி.
ரொம்ப ‘சிம்பிளா’ செய்யணும்னா இவருகிட்ட சொல்லலாம். நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி செய்யறாரு. நல்லா டேஸ்டாவும் இருக்கு, சொல்லிக்கொண்டே போனார் நண்பர்.
வீட்டுக்கு திரும்பும்போது காசிக்கு மனதுக்குள் கோபம் பொங்கி கொண்டிருந்தது. அதிசயமாய் ராஜியும் அவன் முகத்தை பார்த்து “ஏதோ கோபமாய்” இருக்கிறான் என நினைத்து அமைதியாக வந்தாள்.
மறு நாள் மாலை அலுவலகம் முடிந்து காந்திபுரத்தில் இருந்து கிளம்பியவன் இவனது வீடு இருக்கும் சாயிபாபா காலனி பக்கம் செல்லாமல், அப்பா அம்மா இருக்கும் லட்சுமி மில் பக்கம் தனது வண்டியை திருப்பினான்.
லட்சுமி மில்லில் இருந்து உள் பக்கம் பாப்பநாயக்கன்பாளையம் ‘காய்கடை’ பேருந்து நிறுத்தத்தின் மூன்றாவது சந்து ஒன்றில்தான் இவனது பூர்வீக வீட்டில் அப்பா அம்மா வசித்து கொண்டிருக்கிறார்கள்.
இருவருமே வீட்டிலிருந்தார்கள். பத்துக்கு பத்து இரண்டே அறைகள், ஒன்றில் சமையல், ஒன்று படுக்கை, தொட்டாற்போல் இந்த பக்கம் தனித்து வெளி வாசல் வைத்த பாத்ரூம்.
உங்களுக்கு எத்தனை முறை சொல்லியாச்சு, இந்த சமையல் வேலைய விட்டு தொலையுங்கன்னு, இருவரிடமும் “வள்” என்று விழுந்தான்.
காசியின் அப்பா, அமைதியாக நாங்க இப்ப சமையல் வேலைக்கு போறதில்லையேப்பா..!
சும்மா பொய் சொல்லாதீங்க, நான் “வீரியம்பளையத்துல’ நேத்து உங்களை பாத்தனே..!
உங்கம்மாவோட அண்ணனுக்கு வூட்டுக்காரரோட பிரண்டு ரொம்ப பழக்கம், அதான் அவரு கேட்டாருன்னு செஞ்சு கொடுத்தோம்.
ஆமா… நம்ம சொந்தக்காரனுங்க இன்னும் நம்மளை “சமையல்காரங்க” அப்படீங்கறதை மறக்கலை, அதான் அடிக்கடி உங்களை சொல்லி காட்டற மாதிரி நடந்துக்கறாங்க.
இந்த வேலையில என்னப்பா கெளரவ குறைச்சல்?
எப்ப கேட்டாலும் இதையே சொல்லுங்க, நாங்க மூணு பேரும் இப்ப கெளரவமான வேலையில இருக்கோம். அக்காவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா,மறுபடி இந்த மாதிரி வேலைக்கு போற வேலை வேண்டாம். நாங்கதான் மாசமான ஆளுக்கு ஐநூறு அழறோமில்லை, அதுக்கு மேல உங்களுக்கு என்ன செலவு வந்து கிழிச்சிட போகுது?
காசியின் அப்பனுக்கு வாய் துடித்தது, இந்த சமையல் வேலைதாண்டா உங்க மூணு பேத்தையும் படிக்க வச்சு ஆளாக்கியிருக்கு, இவங்க என்னமோ மூணு பேரும் ஆளுக்கு ஐநூறு பிச்சை போடுவானுங்கலாம், நாங்க அதை பொறுக்கிட்டு வூட்டுக்குள்ள உக்காந்திருக்கணுமாம்.. காசியின் மனைவி இவர் ஏதாவது பதில் பேசி விடுவாரோ என்னும் பயத்தில் அவரின் தோள் மீது கையை வைத்து “அமைதியாயிரு” என்பது போல சாந்தப்படுத்தினாள்.
அதற்கு பின் காசி அப்பா அம்மாவை பார்க்க போய் இரண்டு மூன்று மாதங்களாகியிருந்தது. மாதா மாதம் பணத்தை ‘அக்கா கணக்கில்’ போட்டு விட்டான். அக்கா காசிக்கு கீழ் பிறந்த இன்னொரு தம்பியிடமும் ஐநூறு பணத்தை போட சொல்லி விட்டு, மூன்று பேரின் பணத்தை அப்பாவின் வங்கி கணக்கில் போட்டு விட்டு, அப்பாவுக்கு போன் மூலம் சொல்லி விடுவாள். மாச செலவுக்கு எடுத்து கொள்ளச்சொல்லி.
காசி அன்று, பெற்றோர் இருவரையும் பார்க்க பாப்பநாய்க்கன்பாளையம் காய்கடை வீட்டிற்கு சென்ற போது, வீட்டில் வேறு யாரோ குடியிருந்தார்கள். திகைத்து போனான். விசாரித்தான். அவர்கள் இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடி வந்து இரண்டு மாதங்களாயிற்று என்றார்கள். இந்த வீட்டுக்காரரு எங்கிருக்கராரு?
தெரியலை, மாசமானா அவரு வாடகை வாங்க வருவாரு, மாசம் ஆயிரத்து ஐநூறு வாங்கிட்டு போயிடுவாரு. இங்கதா எங்கேயோ பக்கத்துல குடியிருக்கறதா சொன்னாரு. அவரும் எங்கியோ வாடகைக்கு தான் குடியிருக்கறதா கூட சொன்னாரு.
காசி அவசர அவசரமாய் அக்காவுக்கும், தம்பிக்கும் போன் போட்டு இந்த செய்தியை சொல்ல, அவர்கள் திகைப்புடன் கேட்டு கொண்டாலும், இவனளவுக்கு பதட்டப்படவில்லை. சரி விடு, எங்கியாவது அந்த ஏரியாவுலதான் இருப்பாரு. சொந்த ஊருதான, ஏதாவது ஒண்ணுன்னா இந்நேரம் சொந்தகாரங்க நம்ம கிட்ட சொல்லியிருப்பாங்கல்ல.
காசிக்கு மனசு கேட்கவில்லை, இரண்டு மூன்று நாட்கள் மாமாவிடமும் சொந்தக்காரர்களிடமும் விசாரித்து வீட்டை கண்டுபிடித்து விட்டான்.
சொந்த வீட்டிலிருந்து நான்கைந்து சந்து தள்ளித்தான் வீடு இருந்தது. பூர்வீக வீட்டை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது. அம்மா அவனை கண்டதும், வா வா, அப்பா ஒரு ‘பார்ட்டியை’ பார்க்க போயிருக்காரு, வந்துடுவாரு, உக்காரு என்றாள்.
உக்காரறது இருக்கட்டும், இதுவெல்லாம் என்ன கூத்து? எதுக்கு நம்ம வூட்டை விட்டு இப்படி வாடகைக்கு வந்து உக்காந்திருக்கீங்க? இதுவெல்லாம் எங்க மூணு பேத்துக்கும் சுத்தமா புடிக்கலை.
இரு அப்பா வந்திடட்டும்< சொலிக்கொண்டிருக்கும் போதே காசியின் தந்தை உள்ளே வந்தார். வாப்பா, இப்பத்தான் வந்தியா? கேட்டபடியே தன் மனைவியிடம் இந்தாம்மா “அட்வான்ஸ் மூணாயிரம் கொடுத்திருக்காங்க” எடுத்து வைச்சுக்கோ, நாளைக்கு காலையில் அஞ்சு மணிக்கு காரு வந்து நம்ம்ளை கூட்டிட்டு போயிடும், சாவதானமாய் சொல்லியபடியே நாற்காலியில் உட்கார்ந்தார்.
அப்பா..நான் சொல்றதை கேக்கப்போறீங்களா இல்லையா? இனிமே இந்த வேலை வேண்டாமுன்னு சொல்லிகிட்டே இருக்கேன்.
காசியின் அப்பா தம்பி நானும் என் பொண்டாட்டியும் சின்ன வயசுல இருந்தே இந்த வேலைய செஞ்சு பழகுனவங்க, இதுலதான் உங்க மூணு பேத்தையும் படிக்க வச்சு ஆளாக்கினவங்க. இப்ப நீங்க மூணு பேரும் எங்களை இந்த வேலைக்கு போக வேணாமுன்னு சொன்னா என்ன அர்த்தம்? நாங்க இரண்டு பேரும் ஏதோ உங்க ‘கண்ட்ரோல்ல’ இருக்கற மாதிரி தோணுது. காரணம் என்னன்னு யோசிச்சு பார்த்தோம். ‘பூர்வீக’ வூட்டுல இருக்கறதுனாலதான் நீங்க சொல்றதை நாங்க கேக்கணும், நீங்க மூணு பேரும் சேர்ந்து கொடுக்கற ஆயிரத்து ஐநூறு ருபாயில நாங்க வாழணும்னு. நாங்க ஏன் அவளோ சிரமபட்டு வாழணும்? அதனால முதல்ல அந்த வூட்டை வாடகைக்கு விட்டுட்டு, அந்த பணத்தை உங்க மூணு பேருக்கும் பிரிச்சு தனியா வச்சுட்டோம்.
நாங்க இப்ப எங்க கையில வச்சிருந்த சொந்த பணத்துல ஒரு வீட்டை வாடகைக்கு புடிச்சு தொழிலை ஆரம்பிச்சிருக்கோம். நல்ல வரும்படி வருது. எல்லா செலவும் போக எங்களுக்கு அஞ்சு பத்து கையிலயும் நிக்குது. மாசம் பத்திருபது நாளு வேலைக்கு போனாலும் போதும்.
அப்படியே இரண்டு மூணு மாசம் வேலை இல்லையின்னாலும் சமாளிச்சுக்கற அளவுக்கு கையிருப்பு இருக்கு. அதனால நீங்க எங்களை பார்க்க வந்தா பார்த்துட்டு போங்க, அது போதும். சொல்லிவிட்டு ஏம்மா தம்பிக்கு ‘இராத்திரி டிபனு’ செஞ்சிடு, சாப்பிட்டு போகட்டும், நான் என் பிரண்டு ராமசுப்பிரமணி வீட்டுக்கு போயிட்டு வாறேன், அடுத்த வாரம் ஏதோ ‘ஆர்டர்’ இருக்காம், வர சொல்லியிருந்தான். கம்பீரமாய் வெளியே வந்து செருப்பை மாட்டியபடியே நடந்து சென்றார்.
காசி என்ன சொல்வது, அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் நின்றான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Jan-26, 3:14 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : yenga vaazhkkai
பார்வை : 10

மேலே